மரங்கள் சில நினைவுகள்...

கடைசிப் பக்கம்
மரங்கள் சில நினைவுகள்...
Published on

சில புத்தகங்களைப் பார்க்கும் போது அதில் சில நினைவுகள் பொதிந்திருக்கும். அதேபோல் மரங்களுக்கும்.

ஸ்ரீரங்கத்தின் பரமபத வாசல் எதிரில் உள்ள சந்திர புஷ்கரிணி ஓரத்தில் ஒரு மரத்தைப் பார்த்திருக்கலாம். ஸ்ரீரங்கத்தின் தல விருட்சமான புன்னை மரம் அது. அங்கே ஆசாரியர்கள் உபன்யாசம் நிகழ்த்திய இடம். ஒருமுறை சுஜாதாவுடன் ஸ்ரீரங்கத்தைச் சுற்றியபோது “என் தாத்தா அந்தக் காலத்தில் புனர்நிர்மாணம் செய்ய நிதி அளித்தார். அவர் பெயர் கூட இதில் இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று தன் நினைவுகளைப் பகிர்ந்தார். இரும்பு கேட் போட்டு மூடியிருந்தார்கள். அதனால் அதைப் பார்க்க முடியவில்லை. சுஜாதாவிற்கு விருப்பமான இடம் என்று குறித்துக்கொண்டு ஸ்ரீரங்கத்துக் கதைகளுக்குப் படம் வரையும்போது அந்த மரத்துடன் வரைந்து கொடுத்தேன்.

இன்றும் ஸ்ரீரங்கத்தைச் சுற்றி வரும்போது சந்திர புஷ்கரணி அருகே அந்த மரத்தைப் பார்க்கும் போது இந்த நினைவுகள் வந்துவிட்டுச் செல்லும்.

இதேபோல வில்வமரம் பார்க்கும் போது சில நினைவுகள் வருவதுண்டு.

சிறுவயதில் ஆந்திராவில் இருந்த என் பாட்டி வீட்டுக்குக் கோடை விடுமுறைக்கு வருடா வருடம் செல்வோம். பாட்டி வீட்டுக்கு சில வீடுகள் தள்ளி ஒரு சிவன் கோயில், அதன் மதிலுக்குள் ஒரு பெரிய வில்வமரம் ஒன்று எப்போதும் பல காய்களுடன் இருக்க அதன் அருகில் கோயில் குருக்கள் வீடு இருந்தது. அவருக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள். அவர்கள் வீட்டில் ஒரு கிணறு இருந்தது. அந்தக் கிணற்றில் பாத்திரமோ வாளியோ விழுந்துவிட்டால் (அவர்கள் வீட்டில் இது அடிக்கடி நடக்கும் சம்பவம்)  இந்த ஐந்து பேரில் யாராவது ஒருவர் கிணற்றில் இறங்கி அதை எடுத்து வருவார்.

ஒரு நாள் எல்லோரும் ஏதோ ஒரு நிகழ்ச்சிக்கு வெளியே கிளம்பிக்கொண்டு இருக்க, கிணற்றில் வழக்கம் போல் ஏதோ ஒன்று விழ, அன்றும் அதேபோல் ஒருவன் இறங்கினான், ஆனால் நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. என்ன என்று பார்க்க அடுத்தவனும்  இறங்க, அவனும் மேலே வரவில்லை, இப்படியே அண்ணன், தம்பி என்று ஐந்து பேரும் உள்ளே போக யாரும் வெளியே வரவில்லை.

தீயணைப்புப் படையினர் வந்து எல்லாப் பிரேதங்களையும் வெளியே எடுத்தனர். அதில் ஒருவன் உயிர் பிழைத்துக் கொண்டான். ஆனால், அவனுக்கும் கொஞ்ச நாளில் மனநிலை சரியில்லாமல் போய்விட்டது. “கிணற்றினுள் உள்ள விஷ வாய்வு தாக்கி எல்லோரும் இறந்தார்கள்” என்று அடுத்த நாள் செய்தித்தாளில் செய்தி வந்தது.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு இரவில் அந்த மரத்தைப் பார்க்கும்போது எல்லாம் கொஞ்சம் பயமாக இருக்கும். பிறகு அந்த மரத்தை மறந்துவிட்டேன்.

பலவருடம் கழித்து சென்னையில் திருமதி ராதா விஸ்வநாதன் ( திருமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் மகள்) வீட்டில் என் மனைவி பாட்டு கற்றுக்கொள்ளும்போது திரு விஸ்வநாதனுடன் ஒரு ஞாயிற்றுக்கிழமை பேசிக்கொண்டு இருந்த போது அவர் வீட்டில் இருந்த வில்வமரத்திலிருந்து ஒரு பழுத்த வில்வப் பழம் என் முன்னே கீழே விழுந்தது.

உடனே அவர் அதை எடுத்து என்னிடம் கொடுத்து ஜூஸ் செய்து சாப்பிடு நன்றாக இருக்கும் என்றார். அதை வாங்கிக்கொண்டு,  எப்படி ஜூஸ் செய்வது, நல்லா இருக்குமா ? எவ்வளவு சர்க்கரை போடவேண்டும், கொட்டை இருக்குமா ? என்று ’அவர்கள்’ படத்தில் வரும் ஜூனியர் பொம்மை போல பல கேள்விகளை அடிக்கிக்கொண்டே இருந்தேன்.  ஒரு கட்டத்தில் ‘நான் அதில் ஜூஸ் செய்து சாப்பிட மாட்டேன்’ என்று முடிவுக்கு வந்தார். ‘அந்தப் பழத்தை என்னிடம் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்’ என்று என்னிடமிருந்து திரும்பப் பெற்றுக்கொண்டார்!

வீட்டுக்கு வந்தவுடன் அந்தப் பழம் பற்றி கொஞ்சம் ஆராய்ந்தேன்.

“பேதி, வயிற்றுப்போக்கு, அஜீரணம் என்று பல வியாதிகளுக்கு மருந்தாக விட்டமின் B2 என்னும் ரிபோஃபிளாவின்(Riboflavin), விஷ முறிவு மருந்து, இதைத் தவிர மிட்டாய், ஜூஸ் கூடத் தயாரிக்கலாம் என்று பாற்கடல் அமுதம் போன்ற பழத்தை மிஸ் செய்துவிட்டேனே” என்று வருத்தமாக இருந்தது. ‘அடுத்த முறை கேள்வி கேட்காமல் பழத்தை வாங்கி வரவேண்டும்’ என்று நினைத்த சில வாரங்களில் ‘திரு விஸ்வநாதன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்’ என்று கேள்விப்பட்டபோது அந்த வில்வப் பழம் நினைவுக்கு வந்தது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com