முதல்வர் முன்நிற்கும் சவால்

முதல்வர் முன்நிற்கும் சவால்
Published on

மிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சென்னை, கோவை, திண்டுக்கல், ஈரோடு, ராமநாதபுரம், பொள்ளாச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்திருக்கிறது. இந்த சம்பவங்கள் தொடர்பாக சிலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) மற்றும் அமலாக்கத் துறை இயக்குநரகம் ஆகியவை பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பி. எஃப்.ஐ) அமைப்பினர் தொடர்பான இடங்களில் சோதனை செய்ததே சமீபத்திய தாக்குதல்களுக்கு காரணம் என்றும்  பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

“மாநில அரசின் நுண்ணறிவுப் பிரிவு சரியாகச் செயலாற்றவில்லை. அதன் விளைவுதான் இந்த மாதிரியான திடீர் தாக்குதல்கள் என்றும், இந்த சம்பவங்களைப் பயன்படுத்தி பா.ஜ.க. அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கிறது” என்றும் சில அரசியல் கட்சிகள் விமர்சித்துக் கொண்டிருக்கின்றன. இதற்கு முன்பு, ஒரு சில கட்சியினர் அவர்களே அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் நாடகமெல்லாம் செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இதுபோன்ற நாடகங்கள் வெளி மாநிலத்தில்கூட நடந்திருக்கின்றன என்று சுட்டிக் காட்டுகின்றன அந்த அரசியல் கட்சிகள்.

காவல்துறையின் அலட்சியமோ, அரசியல் கட்சிகளின் நாடகமோ, இத்தகைய நிகழ்வுகளினால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான். 1998ல் கோவை நகரில் இப்படி வெடிகுண்டு விபத்தாக தொடங்கி மதக் கலவரமாக மாறி உயிர் பலிகளை வாங்கியது தமிழக வரலாற்றின் ஒரு கரும்புள்ளி. 

பொது அமைதியை கெடுக்கும் எந்த வன்முறையையும் ஏற்றுக்கொள்ள முடியாது. 'அமைதிப் பூங்கா' என்ற பெயர் எடுத்திருக்கும் ஒரு மாநிலத்தில், வன்முறை எதற்கும் தீர்வு ஆகாது. எந்த தரப்பு இதை செய்திருந்தாலும் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும்.  இத்தகைய சம்பவங்கள் இனியும் தொடராமலும், தடுப்பதும் காவல்துறையினரின் பொறுப்பு. "யார்யாரெல்லாம் குறிவைக்கப்படலாம் என்பதைக் கண்டறிந்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, சந்தேகத்துக்குரியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது” என காவல்துறை தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

முதல்வர்  "ஸ்டாலின்  எந்தவிதமான மதஅரசியல் அழுத்ததிற்கும் ஆளாகாமல், இந்த விவகாரத்தை கையாள வேண்டும்.  நடந்த சம்பவங்கள் ஒரு மிகப்பெரிய அரசியல் சவாலாக,  அவரது நிர்வாக திறனை சோதிக்கும் விஷயமாக அவர் முன்  நிற்கிறது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com