இந்த நாள், மனித குலம் மறக்க முடியாத, மறக்கக் கூடாத நாள். இரண்டாவது உலகப் போரை முடிவிற்கு கொண்டு வர, அமெரிக்கா, ஜப்பான் மீது முதல் அணுகுண்டை வீசிய நாள் ஆகஸ்ட் 6ஆம் தேதி, 1945ஆவது வருடம்.
ஜெர்மனி அணு ஆயுத உற்பத்திக்கான சோதனை நடத்தி வருகிறது என்று சந்தேகப்பட்ட அமெரிக்கா, ஓப்பன்ஹெய்மர் என்ற விஞ்ஞானியின் தலைமையில் “மன்ஹாட்டன் ப்ராஜக்ட்” என்ற பெயரில் அணு ஆயுத உற்பத்திக்கான பரிசோதனைகளைச் செய்ய ஆரம்பித்தது. “டிரினிட்டி” என்ற பெயர் கொண்ட முதல் அணு குண்டு வெற்றிகரமாக ஜூலை 16ஆம் தேதி, 1945 ஆம் வருடம், நியூ மெக்ஸிகோவில், லாஸ் அலாமாஸ் என்ற இடத்தில் பரிசோதனை செய்யப்பட்டது.
இரண்டாம் உலகப் போர் 1939 ஆம் வருடம் அரம்பித்தது. நாடு பிடிக்கும் ஆசையால், ஜப்பான், சைனா, மன்சூரியா போன்ற கிழக்கு ஆசியா நாடுகளைத் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. அமெரிக்கா, ஜப்பான் மீது பொருளாதாரத் தடை விதிக்க, பாதிக்கப்பட்ட ஜப்பான், டிசம்பர் 7,1941 ஆம் வருடம் அமெரிக்காவைத் தாக்கியது. அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா நேசநாடுகள் என்று ஒரு புறம், எதிர் பக்கத்தில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் என்ற அச்சு நாடுகள் என்று போர் தீவிரமடைந்தது.
நேச நாடுகள் ஜெர்மனியின் பெர்லின் நகரை நாலாபுறமும் சூழ்ந்து கொள்ள, அடால்ஃப் ஹிட்லர், ஏப்ரல் 30, 1945ஆம் வருடம் தற்கொலை செய்து கொண்டார். உலகப் போரை முடிவிற்குக் கொண்டு வர ஜப்பான், அமெரிக்காவிடம் சரணடைய மறுத்த நிலையில், அணுகுண்டு வீசுவது என்று அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமென் முடிவு செய்தார். இதை அவர் மற்ற நேசநாட்டுத் தலைவர்கள் பிரிட்டனின் வின்ஸ்டன் சர்ச்சில், ரஷ்யாவின் ஜோசப் ஸ்டாலின் ஆகியவர்களுடன் கலந்து ஆலோசித்ததாகத் தெரியவில்லை.
முதலில் வீசப்பட்ட அணுகுண்டின் பெயர் “லிட்டில்பாய்”. ஒன்பது பேர் கொண்ட குழு, “எனோலா தே” என்ற பி-29 பாம்பர் வகை விமானத்தில் சென்று 3,629 கிலோ எடை கொண்ட அணுகுண்டை ஹிரோஷிமா மீது வீசினர். இது நடந்து மூன்று நாட்களில், ஆகஸ்ட் 9ஆம் தேதி, நாகசாகி நகர் மீது “பேட் மேன்” என்ற குண்டு வீசப்பட்டது.
இந்த இரண்டு குண்டு வீச்சுகளினால் அழிந்தவர்கள் எண்ணிக்கை மூன்று இலட்சத்திற்கும் மேல். உடனே உயிரிழந்தவர்கள் தவிர, பலர் கதிரியக்கத்தினால் உயிரிழந்தனர். ஆகஸ்ட் 15 அன்று அன்றைய ஜப்பான் அரசர் ஹிரோஹிடோ, நாட்டு மக்களுக்கு ஆற்றிய வானொலி உரையில் ஜப்பான் சரணடைவதாக அறிவித்தார்.
இரண்டாவது உலகப் போரினால் ஏற்பட்ட சில விளைவுகள் ஐந்து முதல் ஆறு கோடி மக்கள் இரண்டாவது உலகப் போரினால் உயிரிழந்தனர்.
அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் யார் பெரியவன் என்ற பனிப் போட்டி உருவாகியது. அமெரிக்காவிடம் அணுகுண்டு இருப்பதால், ரஷியாவும் அணு ஆயுத சோதனையில் தீவிரமாக இறங்கியது. தற்சமயம், உலகளவில் 12,512 அணு ஆயுதங்கள் இருப்பதாக கணக்கிடப் பட்டுள்ளது. இது ஒன்பது நாடுகளிடம் உள்ளது, இந்தியா, பாகிஸ்தான் உட்பட. அதிகமாக அணு ஆயுதங்கள் இருக்கும் நாடு ரஷ்யா. பல நாடுகளிடையே போதுமான புரிதல் இல்லாத சமயத்தில் இதைப் போன்ற வெகுஜன அழிவு ஆயுதங்கள் இருப்பது அச்சத்தை தோற்றுவிக்கிறது.
“புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்.”
என்ற புரட்சிக் கவிஞரின் வரிகள் நினைவிற்கு வருகின்றது.