இரு இதிகாசங்களான ராமாயணமும், மகா பாரதமும் மனிதனின் நல்வாழ்வுக்குத் தேவையான அத்தனை வழிமுறைகளையும் படம் பிடித்துக் காட்டுகின்றன!நல்லவர்கள் நலிவுற்றாலும் மீண்டு வருவதையும், ஆணவக்காரர்கள் ஆரம்பத்தில் ஆனந்தமாக வாழ்ந்தாலும், இறுதியில் எல்லாவற்றையும் இழந்து, ஒதுங்கவும் இடமின்றி ஓடுவதையும் காண்கிறோம்! எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாகச் சிலரையும், எப்படியெல்லாம் வாழக் கூடாது என்பதற்கு மாதிரியாகப் பலரையும் பார்க்கிறோம்.
விஞ்ஞானமும் நாகரீகமும் உச்சமடைந்துள்ளதாக நினைத்திருக்கும் இந்தக் காலத்திலேயே போர்கள் உக்கிரமாக நடைபெறுகின்றன. உக்ரைனும் ரஷ்யாவும் உரசிக் கொள்கின்றன. இஸ்ரேலும் பாலஸ்தீனமும் எதிரெதிரே நிற்கின்றன. அப்பாவி மக்கள் அளவற்ற எண்ணிக்கையில் கொன்று குவிக்கப்படுகிறார்கள்! எல்லைகளை விஸ்தரிப்பதிலும், யார் பெரியவர் என்ற ஆணவத்திலும் கொலை பாதகங்கள் அரங்கேற்றப்படுகின்றன. இப்பொழுதே இப்படியென்றால், இதிகாச காலத்தில் போர்கள் பிரதானப் படுத்தப்பட்டதில் வியப்பேதுமில்லையே!
குருஷேத்திரப் போர் 18 நாட்கள் நடைபெற்றதாம். பதினெட்டு நாட்கள் போரை முடிவுக்குக் கொண்டு வர 17 வகையான வியூகங்கள் அமைக்கப்பட்டனவாம்!
போரில் வெற்றி பெறுவதற்காகப் படைகளைக் குறிப்பிட்ட நிலைகளில் நிறுத்தி, இயக்கும் விதமே வியூகம் என்றழைக்கப்படுகிறது.
ஒரு விதத்தில் மனித வாழ்க்கையே ஒரு போராட்டந்தான். அந்தப் போராட்டத்தில் வெற்றி பெறவும் வியூகங்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது! முதலில் பாரதம் காட்டும் 17 வியூகங்கள் என்னவென்று பார்ப்போமா?
சக்கர வியூகம் என்பதை எல்லோருமே அறிவர். பத்ம வியூகம் என்ற பெயரும் இதற்குண்டு. சக்கர வடிவில் ஏழு அடுக்குகளில் வீரர்கள் இருப்பர். படைத்தலைவர் நடுவில் இருக்க, அதனைச் சுற்றியுள்ள அடுக்குகளில் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும். உள்ளே செல்லும் எதிரியை மனத்தளவிலும் குழப்பி, வெளிவர முடியாமல் தடுத்துக் கொல்வதே இந்த வியூகத்தின் சிறப்பு! 13 ஆம் நாள் போரில் துரோணாச்சாரியாரால் அமைக்கப்பட்ட இந்த வியூகத்தில் சிக்கித்தான் அபிமன்யு இறந்தான்! அர்ஜூனன், கர்ணன், துரோணாச்சாரியார் போன்ற மிகச் சிறந்த வீரர்களால் மட்டுந்தான் சக்கர வியூகத்தை உடைத்து வெளியே வர முடிந்ததாம்!
மற்ற 16 வியூகங்கள் இவைதானாம்:
நாரை
முதலை
ஆமை
திரிசூலம்
பூத்த தாமரை மலர்
கருடன்
கடல் அலைகள்
வான் மண்டலம்
வைரம்
பெட்டி அல்லது வண்டி
அசுரன்
தேவன்
ஊசி
வளைந்த கொம்புகள்
பிறைச் சந்திரன்
பூமாலை
இந்த வியூகங்கள் எதிரியின் படையின் எண்ணிக்கையையும் அவர்களின் வியூகத்தையும், போர்க்கள இட அமைப்பையும் பொறுத்து மாறுபடுமாம்!
இன்னுமொரு சிறப்பான வியூகமும் உண்டு. அதுதான் விருச்சிக அல்லது தேள் வியூகம். தேளின் வாலில் இருக்கும் கொடுக்கானது, எப்படி முன்னால்,பின்னால்,பக்க வாட்டிலென்று அபாயம் நேரும் தருணங்களில் பாய்ந்து சென்று தாக்குமோ, அதைப் போன்ற படை வியூகம், தங்கள் படை எங்கு தாக்கப்படுகிறதோ அங்கு அவசரமாகச் சென்று தாக்கி வெற்றிக்கு வழி வகுக்குமாம்!
தற்போது தேர்தல், விளம்பரம் மற்றும் வியாபாரம் ஆகியவற்றுக்கு வியூகங்கள் வகுத்து, செயல்படுத்தப்படுகின்றன. படிப்போர், பணி தேடுவோர், பணியில் அமர்ந்தோர்... ஏன்? பணியிலிருந்து ஓய்வு பெற்றோர், விவசாயிகள், தொழிலாளர்கள் என்று அனைவருமே தங்கள் குறிக்கோளை அடைய, தக்க வியூகங்களை வகுத்துக் கொள்ளலாம்!
ஒரு கம்பனியின் முதலாளி, படைத் தலைவனைப்போல், தான் நடு நாயகமாக இருந்து கொண்டு, தன் பணியாளர்களைச் சக்கர வியூகத்தில் அமைத்துச் செயல்படுவாரேயானால் வெற்றி நிச்சயம்!
வேலை தேடுவோர் இந்த விருச்சிக வியூகத்தை மனதில் ஏற்று, எங்கெல்லாம் வாய்ப்புகள் உள்ளனவோ அங்கெல்லாம் சென்று நேர்காணலில் பங்கேற்றால் வேலை கிடைக்காமல் போகாது!