மனித குலத்தின் மாபெரும் துன்ப நிலை எது? இந்த குட்டிக் கதையை படிச்சு தெரிஞ்சுக்கோங்க!

Hunger greatest suffering of mankind
Two men
Published on

இவ்வுலகில் உள்ள பல்வேறு செல்வங்கள் அனைத்தும் இயற்கையால் அனைவருக்கும் பொதுவாக படைக்கப்பட்டது. இருப்பினும் ஒருவர் பொருட்டு எல்லா பொருட்களும் குவிந்து இருப்பதற்கும், ஒரே ஒரு பொருளுக்காக ஏராளமானோர் ஏங்கித் தவிப்பதற்கும் காரணம் பதுக்கலே ஆகும். அனைவருக்கும் பொதுவாக படைக்கப்பட்ட இயற்கையை அனைவரும் பொதுவாக பயன்படுத்தும் போது  இவ்வுலகில் துன்பம் என்ற சொல்லே இருக்காது. நாம் அன்றாடம் கடந்து செல்லும் பல்வேறு துன்பங்களை காட்டிலும் மிகக் கொடுமையானது தனி மனிதன் அனுபவிக்கும் பசி கொடுமையே ஆகும். அத்தகைய பசி கொடுமை  ஒருவரின் மனநிலையை  எவ்வாறு பாதிக்கிறது என்பதை பற்றி  ஒரு சிறுகதையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சொர்ணபுரி  என்ற நாட்டை மகதராஜன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுடைய நாட்டில் அனைத்து வளங்களும் செழித்து ஓங்கியது. மக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். எதிரி நாட்டு படைகளிடமிருந்து தன் மக்களுக்கு தீங்கு நேராகதாவறு பார்த்துக் கொள்வதிலும், வளர்ச்சியை பூர்த்தி செய்வதிலும் அரசர் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வந்தார். ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு அமைச்சர்கள்  நியமிக்கப்பட்டு அனைத்து துறைகளின் வளர்ச்சியும் ஒருமித்தவாறு கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அரசனுக்கு திடீரென ஒரு நாள் தன் நாட்டு மக்களின் மனநிலையை அறிந்து கொள்ள ஆர்வம் வந்தது. உண்மையிலேயே தன்னுடைய அரசாட்சி மக்களுக்கு உரியதாக இருக்கிறதா, மக்கள் அனைவரும் மன நிறைவுடன் வாழ்கிறார்களா? என்று தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டது. எனவே இதனை அரசர் அமைச்சரிடம் தெரிவிக்கவே அமைச்சரின் ஆலோசனைப்படி இருவரும் மாறு வேடம் போட்டு மக்களை சந்திப்பதற்காக சென்றனர்.

ஒவ்வொரு மக்களையும் சந்தித்து அவர்களிடம் உள்ள நிறை குறைகளை கேட்டு வந்தனர். வந்திருப்பவர் அரசர் எனத் தெரியாமலேயே அனைத்து மக்களும் தங்களது மனநிறைகளையும் குறைகளையும் அரசரிடம் கொட்ட ஆரம்பித்தனர். இருப்பினும் சில சில குறைகளை தாண்டி, அனைவர் வாயிலிருந்தும் நிறைவான வார்த்தைகளே வந்தன. எனவே அரசருக்கு தான் சிறப்பாக ஆட்சி செய்கிறோம், தன்னுடைய ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்ற மனநிறைவு வந்தது. அரசரும் அமைச்சரும் மக்களை சந்தித்து விட்டு இறுதியாக அரண்மனைக்கு செல்லலாம் என நினைத்து நடக்க தொடங்கினர். அப்பொழுது வழியில் ஒரு ஆலமரம் இருந்தது. அந்த ஆலமரத்தின் அடியில் முதியவர் ஒருவர் சுருண்டு கிடந்தார். யார் அவர், ஏன் அவரது வீட்டில் தூங்காமல் இங்கு வந்து தூங்கிக் கொண்டிருக்கிறார் அவரை எழுப்புங்கள் என அரசர் அமைச்சரிடம் உத்தரவிட்டார்.

அமைச்சர் அவரிடம் சென்று அவரை எழுப்பி, 'ஏன் இங்கு உறங்குகிறீர்கள்?' என்று விளக்கம் கேட்கவே, அதற்கு அந்த முதியவர்  'ஐயா, மூன்று நாட்களாக நான் சாப்பிடவே இல்லை. அருகில் குளத்தில் உள்ள நீரை பருகியே மூன்று நாட்கள் கழித்து விட்டேன். இதற்கு மேல் என்னுடைய உடம்பில் தெம்பு இல்லை. அதனால் உட்கார முடியாமல் அப்படியே இந்த மரத்தடியில் சாய்ந்து விட்டேன்' என்று கூறினார். இதைக் கேட்டவுடன் அரசருக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. தான் இதுவரை கட்டமைத்து வைத்திருந்த சாம்ராஜ்யத்தின் அனைத்து வெற்றிகளும் ஒரே நொடியில் தகர்க்கப்பட்டதைப் போல அரசர் உணர்ந்தார். உடனே அமைச்சரிடம் அந்த முதியவருக்கு சாப்பிடுவதற்கு உணவும்,  தங்குவதற்கு இடமும் ஏற்பாடு செய்து தரும்படி உத்தரவிட்டார்.

இத்தகைய மன குழப்பத்தினிடையே அரசர் அரசவையை அடைந்தபோது அங்கு பல்வேறு புலவர்கள் அரசரின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தனர். அரசன் வந்தவுடன் புலவர்கள் ஒவ்வொருவராக தம்முடைய பாடல்களை அரங்கேற்றத் தொடங்கினர். அதில் ஒரு புலவர், 'அரசரே தங்களுடைய ஆட்சியில் நாடு  முழுவதும் நெல் விளைகின்ற வயலாக இருக்கிறது, இமயமலையின் முகடுகளை போல நெல்மணிகள் குவிந்து இருக்கிறது, பொன்னும் மணியும் முத்தும் கலந்து கோடிக்கணக்கில் வர்த்தகம் நடக்கிறது, இவ்வாறாக பல்கி பெருகியிருக்கின்ற தங்களுடைய நிர்வாகத்தால் மக்கள் மனநிறையுடன் வாழ்கிறார்கள்!' என்று பொருள்பட பாடல் ஒன்றை பாடினார்.

இதையும் படியுங்கள்:
எதை நோக்கிச் செல்கிறது மனித சமுதாயம்? சக மனிதர் மேல் ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி?
Hunger greatest suffering of mankind

அப்பொழுது அரசன் குறுக்கிட்டு, 'இல்லை புலவரே, தங்களுடைய பாட்டில் எனக்கு மனநிறைவும் நிம்மதியும் ஏற்படவில்லை. நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்பதையும் தாண்டி ஒரு முதியவர் மூன்று நாட்கள் உணவருந்தாமல் அருகில் உள்ள குளத்து நீரை பருகினார் என்ற செய்தி என் மன அமைதியை கெடுத்து விட்டது. ஒரு நல்ல அரசன் என்பவன் கடை கோடி மக்களுக்கும் அனைத்து செல்வங்களையும் சென்று சேர்ப்பவனே! எனவே இதனால் என்னால் மன நிம்மதியுடன் இருக்க முடியவில்லை. என் மனம் நிலை தடுமாறி போகிறது. என்னுடைய கவனக்குறைவு என்னை நிலைகுலையச் செய்கிறது. ஆகவே நீங்கள் என்னுடைய அரசாட்சியை புகழ்வதற்கு பதிலாக, நான்  இன்னும் சிறப்பாக ஆட்சி செய்யும் பொருட்டு ஆலோசனை வழங்குவதற்காக பாடல்களை இயற்றுங்கள்!' என்று கூறினார். ஒரு தனி மனிதனுடைய பசியினை நீக்குவது பற்றிய அரசரின் அக்கறையை கண்டு அங்கு கூடியிருந்த புலவர்கள் அனைவரும் வியந்தனர்.

எனவே உலகத்தில் உள்ள அனைத்து கொடுமைகளிலும் தலையாயக் கொடுமை ஒரு மனிதன் பசியால் வாடுவதே ஆகும். இதனை வலியுறுத்தியே 'தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று முழுங்கினார் கவிஞர் பாரதி.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புக! என்றார் வள்ளுவர்.

'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று பசியின் கொடுமையை விளக்கினார் வள்ளலார். 

இன்றும் கூட நம் நாட்டில் பசிப்பிணி எனும் நோய் வெகு விரைவாக பரவிக் கொண்டே வருகிறது! அதனை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை  ஆட்சியாளர்களும் மக்களும் தான் கண்டறிய வேண்டும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com