
-கனகராஜன்
புறப்படும்போது அம்மா இரண்டு நாட்களாகச் சொல்லிக் கொண்டிருந்ததைச் சொன்னாள்.
"மறக்காம லட்சுமியக்கா வீட்டுக்குப் போயிட்டு வந்துரு.''
அவனுக்குக் கல்யாண வீட்டை விட லட்சுமியக்கா வீட்டின் நினைவுக் காட்சிகள்தான் மனசில் ஓடின.
முதலில் சுகுமாரன் முகம் தோன்றியது.
சுகுமாரன் தத்துவம் பேசினான். சிரித்தான். பாடினான். ஆடினான். கத்தினான். நடந்தான். கோபமாகப் பார்த்தான். கல்லை எடுத்து வீசினான். யார் மண்டையிலோ பட்டது.
சுகுமாரனின் தங்கை மாதவி ஒரு வாரம் தலையில் கட்டுப் போட்டுக்கொண்டு வேலைக்குப் போனாள்.
சுகுமாரனின் அப்பா பெரியசாமி தினமும் குடித்துக்கொண்டுதான் வருவார். மகன் பைத்தியமாகிப் போய்விட்ட கவலை. சில நேரங்களில் ரோட்டில் படுத்துக்கொண்டிருப்பார். யாராவது பார்த்துவிட்டு வந்து சொல்வார்கள். லட்சுமியக்கா பதறியடித்துக்கொண்டு ஓடுவாள்.
சுகுமாரனின் அம்மா லட்சுமியக்காவிற்கு அடிக்கடி பதறியடித்துக்கொண்டு ஓடுகிற வாழ்க்கை.
சுகுமாரன் திடீரென்று இரண்டு நாட்கள் காணாமல் போய்விட்டான். லட்சுமி யக்கா அலைஅலையென்று அலைந்தாள். வாய்க்கால்மேட்டில் யாரோ பிணம் மிதந்துகொண்டிருப்பதாகச் சொன்னார்கள். அலறியடித்துக்கொண்டு ஓடினாள். சுகுமாரன் இல்லை.
மருதமலை அடிவாரத்தில் சுகுமாரன் சுற்றிக்கொண்டிருப்பதாகத் தகவல் வந்தது. தயாளனையும் சண்முகத்தையும் கூட்டிக்கொண்டு ஓடினாள். படிக்கட்டில் உட்கார்ந்துகொண்டு போவோர் வருவோரிடம் பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.