இடுப்பில் அமர்ந்து வந்த குட்டி கிருஷ்ணன்!

ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி – 06.09.23
இடுப்பில் அமர்ந்து வந்த குட்டி கிருஷ்ணன்!

கிருஷ்ண ஜயந்தி என்றாலே ஒரு வரிசைக் கிரமமாக வேலைகள் நடக்கும்.  வேலை நிறைய இருக்கும் என்பதால் கல்யாணமான ஆரம்ப காலத்தில் நான் அலுவலகத்திற்கு லீவு போட்டு விடுவேன்.  பிறகு அலுவலகத்திலேயே கிருஷ்ண ஜயந்திக்கு விடுமுறை அறிவித்தார்கள். பண்டிகை அன்று முதலில் சமையலை கவனித்து பத்து மணிக்குள் முடிக்க வேண்டும். சாப்பிடுவதென்னவோ ஒரு மணிக்குத்தான்.

சமையல் காரியங்களுக்கிடையே அரிசியை களைந்து வடிய விட்டு நிழல் உலர்த்தலாக உலர்த்த வேண்டும்.  உளுத்தம்பருப்பை வாசனை வரும் வரை வறுத்து அதைத் தனியாக ஒரு தூக்கில் போட்டு வைக்க வேண்டும்.  கோலத்திற்கு நனைத்து வைத்திருக்கும் கைப்பிடி பச்சரிசியை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து ரெடியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

உலர்த்திய அரிசி கையில் ஒட்டியும் ஒட்டாததாகவும் இருக்கும் பதத்தில்  காய்ந்ததும் அதையும் உளுத்தம் பருப்பு தூக்கையும் தூக்கிக்கொண்டு  விரைவாக மாவு மில்லுக்கு செல்ல வேண்டும்.  ஈர அரிசி அரைக்க வேண்டியதால் கவனமாக பார்த்து அரைப்பதற்காக நானேதான் மாவு மில்லுக்குப் போக வேண்டும்.  அங்கே கொள்ளை கூட்டம் இருக்கும்.  மாவு மில்லைப் பார்த்தாலே கிருஷ்ண ஜயந்தி வந்து விட்டது என்று தெரியும்.

மாவு மில்லிலிருந்து வீட்டுக்கு  வந்த உடன் வேலைகள் ஆரம்பித்து விடும்.   இதற்கு நடுவில் ஒரு மணிக்கு வேலையை பாதியில் நிறுத்திவிட்டு சாப்பாட்டுக் கடையை கவனிக்க வேண்டும். வெல்லச் சீடை, உப்புச் சீடை, முறுக்கு, தட்டை என்று ஒவ்வொன்றாக செய்து முடித்து விட்டு நிமிரும் போதே மாலை 4 மணி ஆகி விடும்.  சூடாக ஒரு காபியைப் போட்டுக்  குடித்துவிட்டு கோலம் போடும் வேலைக்குப் போக வேண்டும்.

வாசல் கோலத்தில் இருந்து ஆரம்பித்து பூஜை அறை வரை நீள நெடுக சின்ன சின்ன பாதங்கள். குனிந்து நிமிர்ந்து போட்டு விட்டு இடுப்பு வலியையும் உடம்பு வலியையும் பொருட்படுத்தாமல் குளிக்க சென்றால் மணி 6 ஆகி விடும்.  பிறகு நைவேத்தியங்கள் செய்து வைத்த பட்சணங்கள் தவிர, வெல்ல அவல், வெண்ணெய், பால், தயிர் பழங்கள் என்று எடுத்து வைக்க வேண்டும்.

கிருஷ்ணர் படத்தை சந்தனம் குங்குமம் இட்டு, துளசி மாலை இதர மலர்களால் அலங்கரிப்பது,  அஷ்டோத்திரம்,  பூஜை, கிருஷ்ணர் பாடல்களை 'கிருஷ்ணா நீ பேகனே பாரோ!' என்று பாடி ஆரத்தி எடுப்பது என்று கோலாகலமாக எல்லாம் முடியும்போதே மணி ஏழு ஏழரையாகி விடும்.  ஆய்ந்து ஓய்ந்து ராத்திரி சாப்பாட்டுக்கடையை பார்க்க வரும்போதே உடம்பு கெஞ்ச ஆரம்பித்து விடும். 'எப்ப உடம்ப கொஞ்சம் கீழ சாய்க்கலாம்னு' இருக்கும்.

"சென்ற வருடம் குழந்தைகள் இருக்கும் வீடுன்னு நீயும் எத்தனையோ வருஷங்கள் ஓடி ஓடி செஞ்சிட்டே.  குழந்தைகளும் கல்யாணம் ஆகிப் போயாச்சு. நாம்ப ரெண்டு பேரும் ரிடையரும் ஆயாச்சு.   இந்த வருஷம் ஈஸியா வச்சுக்கோ.   வெறும் பால், தயிர், வெண்ணை அவல் போதும் கிருஷ்ணருக்கு.  பட்சிணங்கள் செய்து சிரமப்படாதே" என்றார் கணவர் கரிசனமாக.

உடம்பு சரி இல்லாமல் அவ்வப்போது படுத்து படுத்து எழுந்ததால் நானும் அவர் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டேன்.

வாசல் மாக்கோலத்தில் கிருஷ்ணர் பாதம்.  அத்துடன் நேரே பூஜை அறையில் கிருஷ்ணர் பாதம் என்று பார்த்ததும் கணவர் என்னை வியப்புடன் நோக்கினார்.

"குட்டி கிருஷ்ணனை நடக்க விட வேண்டாம். அப்படீன்னு வாசல்ல அவன் பாதம் பதிச்சதுமே அவனை இடுப்பில தூக்கி வச்சுண்டு வந்து பூஜை அறையில் இறக்கி விட்டுட்டேன்.  பார்த்தீங்களா?"

வீடு முழுவதும் குனிந்து நிமிர்ந்து கிருஷ்ணர் பாதங்களைப் போடும் நானா இப்படி பேசுறது என்று அவர் திகைப்போடு பார்க்க நான் 'கிருஷ்ணா நீ பேகனே பாரோ!" என்று பாட ஆரம்பித்தேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com