எங்கும் இறைவனே

எங்கும் இறைவனே
Published on

றைவன் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார். ஆனால், விதிப்படி மந்திர யந்திரத்துடன் பிரதிஷ்டை செய்த ஆலயத்தில் இறைவனின் சாந்நித்யம் விளங்குகிறது. வெயில் 140 டிகிரி வரையில் கொளுத்துகிறது. ஆனாலும் அதில் பஞ்சை வைத்தால் நெருப்பாகப் பற்றிக் கொள்ளாது. பஞ்சை வெயில் வெதும்ப வைக்குமே தவிர, எரித்துச் சாம்பலாக்காது. ஆனால், லென்ஸ் கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளியை அதன் கதிர்கள் குவித்து பஞ்சின்மீது விழும்படி செய்யுங்கள். பஞ்சு உடனே பற்றிக்கொள்ளும். பஞ்சைக் கொளுத்துகிற ஆற்றல் நேர்வெயிலுக்கு இல்லை. ஆனால், லென்ஸ் கண்ணாடிக்குக் கீழே வரும் வெயிலின் கதிர்களுக்கு அந்த ஆற்றல் வந்து விடுகிறது.

பரந்து விரிந்து இருக்கின்ற வெயிலின் ஆற்றலை ஈர்த்து மிகுதிப்படுத்தித் தன் கீழ் அனுப்புவதனால் லென்ஸ் கண்ணாடியில் கீழே வருகின்ற வெயிலுக்குத் தனியான சக்தி இருக்கிறது. ஆலயத்தில் உள்ள மூர்த்தி சூரியனின் கதிர்களைக் குவியச் செய்யும் கண்ணாடியைப் போன்றது.

மற்ற இடங்களில் இறைவனை வழிபட்டால் வினைகள் வெதும்பும். ஆனால், ஆலயத்தில் கருவறையில் உள்ள மூர்த்தியை வழிபட்டால் வினைகள் வெந்து சாம்பலாகும். ஆகையால் பக்தி வழிபாட்டில் ஆலயத்துக்குச் சென்று வணங்கி வேண்டிக்கொள்வது இன்றியமையாதது.

பரம ஞானிகளும் இதனால் ஆலய வழிபாட்டை மேற்கொண்டிருக்கிறார்கள். சிவஞானப்பாலை உண்ட திருஞானசம்பந்தரும், குந்த மரத்தின் கீழ் சிவமூர்த்தி யிடம் ஞானோபதேசம் பெற்ற மணிவாசகரும், ஏனையத் தவஞான முனிவர்களும் ஆகாய வழிபாடு செய்து கொண்டிருந்தார்கள்.

‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்றார் ஔவையார். ‘ஆலயந்தானும் அரனைத் தொழும்’ என்றார் சிவஞானபோதர். சிவஞானம் கைவரப்பெற்ற பரம ஞானிகளும் கூட இறைவனை ஆலயத்துக்குச் சென்று நன்றிக் கடனுக்காகவும், வினைப்பயன் தாக்காமல் இருக்கும் பொருட்டும் வழிபாடு செய்தார்கள்.

- வாரியார் சுவாமிகள்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com