
பரவச இன்பம், பேரதிர்ச்சி - இரண்டையும் மூன்றே நிமிட வித்தியாசத்தில்தான் அனுபவிப்போம் என்பதை சுகுணா சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை.
நகரிலிருந்து சற்றே விலகியிருந்த அந்த நட்சத்திர ஹோட்டல் அறையின் ஒரு பக்கம் முழுவதும் பரவியிருந்தது அந்த ஜன்னல். அதன் திரையை விலக்கியபோது அவள் கண்கள் விரிந்தன. மனம் நிரம்பி வழிந்தது.
கொடைக்கானலில் இயற்கையின் எழில் வெளிப்படும் என்பது தெரிந்ததுதான். ஆனால், நேரடியாக அதை தரிசிக்கும்போது உண்டாகும் சிலீர் அனுபவம், அடடா... குன்று, பனி, சிற்றாறு, பரந்த புல்வெளி, மரங்கள், தொடக்கக்கட்ட சூரிய உதயம் ஆகிய ஒவ்வொன்றும் கண்ணெதிரே ஓவியமாகப் படர்ந்து அவளுக்குள் கவிதை உணர்வை மீட்டின.
'தேனிலவின்போது கவிதை எழுதினாயா?' என்று கேள்விப்படுபவர்கள் சிரிப்பார்களோ?
திரும்பிப் பார்த்தாள். புதிய கணவன் இன்னமும் தூக்கம் கலையாதவனாகப்படுத்துக் கொண்டிருந்தான். எழுப்பினால் அதை விரும்ப மாட்டோனோ? என்றாலும் நேரம் கடந்தால் அதிகாலை தனது 'அதி'யைத் தொலைத்துவிடும். அப்போது தான் காணும் இந்த மாஜிக் தருணம் மறைந்து விடலாம். தன் கணவன் ஒருபோதும் இக்காட்சியைத் தவறவிடக் கூடாது.
எனவே, அவனை உலுக்கினாள். 'கொஞ்சம் எழுந்து ஜன்னல் பக்கமாப் பாருங்க' என்றாள்.
சற்றே சோம்பலுடன் எழுந்தவன் காதலுடன் அவளைப் பார்த்தான். பின்னர் ஜன்னல்புறமாக அவன் பார்வை நகர்ந்தது. அவன் முகத்தில் வியப்பு புலப்பட்டது. ஜன்னலை நெருங்கினான்.
அவனது வியப்பு அவளை இன்பத்தில் ஆழ்த்தியது. தன் கணவனுக்குள் இயற்கையை ஆராதிக்கும் ஒரு கவிஞன் இருப்பானோ?
'பாலிகார்பனேட்லே செய்த ஜன்னல் இது. உறுதியாகவும் இருக்கும். எடைக் குறைவாகவும் இருக்கும். ஒளியையும் சிறப்பாக உள்ளே அனுப்பும்' என்றவன் ஜன்னலை மேலும் நெருங்கினான். 'இந்த ஜன்னலை டெம்பர்டு கண்ணாடியிலே செய்திருக்காங்க. பாதுகாப்பானது. உடைந்தால் கூட ஆபத்தான வகையில் சிதறாது'.
அவன் சில மணித்துளிகள் மட்டுமே வெளியில் பரவிக் கிடந்த இயற்கையை ரசித்திருந்தால் கூடப் போதும். 'தேனிலவின்போது உன்னைவிடவா இதெல்லாம் என்னை ஈர்க்கும்!' என்று பிதற்றியிருந்தாலும் புன்னகைத்திருப்பாள். அல்லது வெளியே தெரிவதைவிட அழகான இயற்கைக் காட்சிகளை தான் வேறு பல இடங்களில் பார்த்திருப்பதாகக் கூட அவன் கூறியிருக்கலாம். அவள் மனம் சில கணங்கள் சுருங்கி பின் இயல்பு நிலைக்கு வந்திருக்கும்.
ஆனால் இது எதிர்பாராத அடி. மனதில்.
தான் பார்த்த ‘தப்பட்’ இந்தித் திரைப்படம் நினைவுக்கு வந்தது. மற்றவர்கள் எதிரே ஒரே ஒரு 'பளார்'. அறைபட்ட மனைவி விவாகரத்து கோருவாள்.
கணவனின் ஒரே ஒரு அறைக்காக ஒருத்தி விவாகரத்து 'கேட்பாளா' என்று அவள் அப்போது நினைத்ததுண்டு. இப்போது அதை யோசிக்கும்போது கணவன் ஒரே ஒரு அறை அறைந்ததற்காக ஒருத்திக்கு விவாகரத்து 'கிடைத்து விடுமா' என்று நினைக்கத் தோன்றியது. மனதில் அடிபட்டாலும் அந்த விடுதலை கிடைக்குமா என்ற விபரீத சிந்தனை ஓடியது.
“அம்மா திடுக்கிடுவாள்” என்று எதிர்பார்த்ததற்கு மாறாக சிரித்தாள். 'எதுக்கு மனசை இவ்வளவு அலட்டிக்கிறே? நான் ஒண்ணு சொல்லவா?' என்று தமிழ் ஆசிரியையான அம்மா கூறியபோதே அவள் ஏதோ இலக்கிய மேற்கோளைக் கூறப் போகிறாள் என்பது அவளுக்குத் தெரிந்துவிட்டது. 'திருமூலர் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?' என்று தொடங்கினாள் அம்மா.
'தெரியும்மா. மரத்தை மறைத்தது மாமத யானை. மரத்தில் மறைந்தது மாமத யானை. ஒவ்வொருத்தருக்கும் பார்வை மாறுபடும். அப்படித்தானே? ஆனா இதெல்லாம் என்னை சமாதானப்படுத்தாது. அடிப்படை ரசனை எல்லாருக்கும் இருந்தாகணும்'.
ஆனால், அப்பா தன் பங்குக்கு ஒரு மேற்கோள் கூற முயற்சிப்பார் என்பதை அவள் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை.
”ஏம்மா, திருவள்ளுவர் கூட சொல்லியிருக்காரே ‘'கணவன் பார்வையும் மனைவியின் பார்வையும் ஒன்றல்ல, இரண்டே'’ன்னு'’
“இல்லை. நிச்சயம் அப்படி அவர் சொல்லல்லே.”
'‘அதெப்படி சொல்வே? உனக்கு அத்தனை குறளும் மனப்பாடமா?”
“இல்லை. ஆனால் இவ்வளவு மோசமாக அவருடைய மேற்கோள் இருக்காதுன்னு தெரியும்'’ என்றபடி சுகுணா சிரித்தாள்.
'சரி போதும் இந்த விவாதம். மாப்பிள்ளை ஊஞ்சலிலே உட்கார்ந்திருக்கார். போய் அவரிடம் பேசிக்கிட்டிருங்க'. அப்பாவை அனுப்பிய அம்மா மகளுடன் சாயந்திர ஸ்னாக்ஸ் மற்றும் காப்பி தயாரிப்பில் முனைந்தாள்.
சுகுணா காப்பியோடு கூடத்தில் நுழைந்தபோது அப்பா அந்த ஊஞ்சலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். 'இது எங்க தாத்தா காலத்தில் செய்தது. என் மகளுக்கு இதிலே உட்கார்ந்து வீசிவீசி ஆட அவ்வளவு பிரியம். 'அப்பா, என் புகுந்த வீட்டிலே ஊஞ்சல் இருந்தாகணும்'னு நிபந்தனை கூடப் போட்டான்னா பாத்துக்குங்க' என்றபடி மகளைப் பாசத்துடன் பார்த்தார்.
மாப்பிள்ளையின் கை ஊஞ்சல் பலகையைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தது. 'செங்காலி அல்லது தேவதாரு மரத்திலே செஞ்சது. கரெக்டா?' என்று கேட்டான்.
சுகுணா கணவனின் கைகளைப் பார்த்தாள். 'நீண்ட விரல்கள் கொண்டவர்கள் கலாரசனையோடு இருப்பார்கள்' என்று படித்ததுண்டு. கணவனின் கைவிரல்கள் தடிமனாக இருந்தன. ஆனால் அதை வைத்துக் கொண்டு நீளமானவை இல்லை என்றும் கூறிவிட முடியவில்லை.
'ஏங்க நீங்க அப்பாவாகப் போறீங்க' என்று அவள் வருங்காலத்தில் கூறும் நேரத்தில் பிரசவத்திற்கு ஆகக் கூடிய தொகையைக் கணக்கிடத் தொடங்குவானோ?
ஆனால் 'மெடீரியலிஸ்டிக்' என்ற ஒரே வார்த்தையில் அவனை மதிப்பிடவும் அவளால் முடியவில்லை. தன்மீது குறைவற்ற அன்பைக் காட்டுகிறான். புகுந்த வீட்டினர் வரதட்சணை கேட்காததோடு திருமணச் செலவையும் பகிர்ந்து கொண்டிருந்தனர்.
'வீட்டிலிருந்தே வேலை' என்பது வசதியாக தெரியவில்லை. வெளியே அலுவலகத்துக்குச் சென்றால் மனதுக்கு ஒரு மாறுதலாக இருக்கும். நண்பர்களோடு நேரில் பேசினால் ஆறுதலாக இருக்கும். ரசனையற்ற கணவன் தனக்கு வாய்த்துவிட்டதில் சுகுணாவின் மனபாரம் அதிகமாகிக் கொண்டே வந்தது. அப்பாவும் அம்மாவும் தன் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காதது மேலும் வருத்தத்தை தந்தது.
அவர்கள் வசித்த வீட்டுக்கு சற்றுத்தள்ளி குடிசைமாற்று வாரியத்தின் அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று இருந்தது. அங்கு வசித்த ராகினி என்ற ஒரு இளம் பெண்ணுக்கு கோலம் போடுவதில் மிகவும் ஆர்வம். சுகுணா தன் வீட்டு வாசலில் மிக வித்தியாசமாக ஒரு கோலத்தை போடுவதை கவனித்ததும் வியந்து பாராட்டினாள். அதை எப்படிப் போடுவது என்று கேட்டறிந்தாள். அடுத்த நாள் தமிழ் புத்தாண்டு. அன்று அவள் அடுக்கக வாசலில் இருவருமாகச் சேர்ந்து மிகப் பெரிய ரங்கோலி கோலம் ஒன்றைப் போடலாம் என்ற ஆலோசனையை சுகுணா கொடுக்க, அந்தப் பெண் வியப்பும் மகிழ்ச்சியுமாக ஒத்துக்கொண்டாள்.
புள்ளிகள் கலா ரசனையுடன் இணைக்கப்பட்டன. கோலம் எதிர்பார்த்ததைவிட அழகாக உருவானது. வண்ணப் பொடிகளை சுகுணாவும் அந்தப் பெண்ணும் கோலப்பகுதிகளில் தூவத் தொடங்கினர். அப்போதுதான் சுகுணாவின் கணவன் அந்தப் பக்கம் வந்து கொண்டிருந்தான். அவன் பார்வை கோலத்தின் மீது விழுந்தால் நன்றாக இருக்குமே. இல்லை. அந்தக் கட்டடத்தின் மேற்புறம்தான் அவன் பார்வை சென்றது. 'எத்தனை வருடங்களுக்கு முந்தைய கட்டடம் என்பதைக் கணித்துக் கொண்டிருப்பான்'. சுகுணா பெருமூச்செறிந்தாள்.
எதிர்பார்த்ததுதானே. ஆனால் எதிர்பாராத இன்னொன்றும் நடைபெற்றது. வானத்தில் மேக மூட்டம் உருவானது. இவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டு இவ்வளவு அழகாக போட்ட கோலம் சில நொடிகளில் அழிந்துவிடப் போகிறதா! ராகினி பதறினாள். 'என்னக்கா இது? மழை வரும் போல இருக்கு. நான் எங்க ஆளுங்க எல்லாரையும் இங்க கூப்பிட்டு இந்த கோலத்தை காட்டுறேன்'. அந்தப் பெண் உரத்துக் குரல் கொடுக்க முயற்சித்தாள்.
'எல்லாரும் உடனே வெளியே வாங்க'.
குரல் உரத்து வெளிப்பட்டது ராகினியிடமிருந்தல்ல, அவள் கணவனிடமிருந்து. அட, அவனுக்கும் இந்தக் கோலத்தின் அருமை புரிந்து விட்டதா?
அடுத்த நொடி அவன் வெகுவேகமாக அந்த அடுக்குமாடிக் கட்டடத்துக்குள் நுழைந்தான். போகும் அவசரத்தில் அவன் கால்கள் அந்தக் கோலத்தைத் தாறுமாறாக அழித்துக் கொண்டிருந்தன.
ராகினியின் கண்களில் நீர். ' என்னக்கா, நாம பாடுபட்டு வரைந்த கோலத்தை உங்க வீட்டுக்காரர் நொடியிலே அழிச்சிட்டாரே' என்றாள். சுகுணா உறைந்து போய் நிற்க, அவள் கணவன் மிக உரத்துக் குரல் கொடுத்தபடி அந்த கட்டிடத்தில் இருந்த அத்தனை பேரையும் வெளியே அழைத்துக்கொண்டு வந்தான். சுகுணாவையும் ராகினியையும் கூடத் தள்ளி வரச்சொன்னான். அடுத்த சில நிமிடங்களில் அந்தக் கட்டிடம் இடிந்து விழுந்தது. அந்தக் கட்டடத்தில் ஏற்பட்டுள்ள பிரம்மாண்டமான விரிசல்களை கவனித்த அவன் அதன் விளைவையும் தெளிவாகவே எதிர்பார்த்திருக்கிறான்.
உயிர்தப்பிய எல்லோருமே அவனை வான் உயரத்துக்கு பாராட்டினார்கள். 'அரசாங்கத்தின் மூலம் உங்களுக்கு வேற வீடு கட்டித்தர நான் முயற்சி எடுக்கிறேன்' என்று அவன் கூறிக் கொண்டிருந்தான்.
ராகினி சுகுணாவின் கைகளைப் பற்றிக் கொண்டாள். ' உங்க வீட்டுக்காரர் ரொம்ப பெரிய விஷயம் செய்திருக்கிறார். கோலத்தைவிட உயிர்கள் முக்கியமில்லையா?'
கான்கிரீட் அளவு, செங்கல் தரம் என்று தன்னைச் சுற்றியிருந்தவர்களிடம் ஏதேதோ அடுக்கிக்கொண்டு போன கணவனைப் பிரேமை பொங்கப் பார்த்தாள் சுகுணா.