மரபுகளை  உடைத்த மஹாராணி

மரபுகளை  உடைத்த மஹாராணி
Published on

 - வினோத்

லக வரலாற்றில் நீண்ட நாட்கள் ஆட்சி செய்த  சிறந்த  முடியாட்சியர்களில் ஒருவரான ராணி இரண்டாம் எலிசபெத் அண்மையில் காலமானார்

தனது 25வது வயதில் 1952ம் ஆண்டு பதவியேற்றார். பிரிட்டிஷ் அரசாட்சியில் 70 ஆண்டு 214 நாட்கள் ராணியாக அரியணையில் ஆட்சி செய்த அவருக்கு வயது 96.

உலக அரங்கில் பல நாட்டினராலும் மதிக்கப்பட்ட இந்த மஹாராணி பல அரச மரபுகளை உடைத்தவர். பிரிட்டிஷ் பிரதமர்கள் அரசியின் முன்  அமர்ந்து பேசவதில்லை. இது பக்கிங்ஹாம் அரண்மனையில் நீண்ட நாட்களாக கடைபிடிக்கப்படும் மரபு. ஆனால், தன் வாழ்நாளில் 16 பிரதமர்களுக்கு நியமன ஆணை வழங்கிய இந்த ராணி சர்ச்சிலுக்கு பின் வந்த பிரதமர்களுக்கு தன் முன் ஆசனம் தந்து பேசியவர்.

கட்சி தேர்தல்கள் முடிந்து பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அவரை நாட்டின் பிரதமராக அறிவிக்கும் சம்பிரதாய விழா  பக்கிங்ஹாம் அரண்மனையில் மட்டுமே நடைபெறும். இதற்கென உள்ள அறையில் இந்த விழா பிரபுக்கள் முன் நடைபெறும்.  ஆனால்,  அண்மையில்  தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் லிஸ் ட்ரஸ் நியமனத்தை லண்டனுக்கு வெளியே  தான் தங்கியிருந்த அரண்மனைக்கு அவரை வரவழைத்து   நியமன ஆணையைக் கொடுத்தார். பிரிட்டன் வரலாற்றில் முதல் முறையாக ஒரு பிரதமர் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியே நடந்த நிகழ்வில் பதவி ஏற்றார்.

1961ம் ஆண்டு  இந்தியா வந்தார். அப்போது பிரதமர் நேருவை சந்தித்தார். ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் அழைப்பை ஏற்று, குடியரசு தின விழாவில் கலந்துகொண்டார். அப்போது, தமிழக முதல்வராக இருந்த பெருந்தலைவர் காமராஜரை சந்தித்தார். அவரது எளிமையும், மக்கள் சேவையும் ராணியை மிகவும் கவர்ந்தது. அவரது சென்னை பயணத்தின் போது அவரது இரண்டாவது மகன் ஆண்ட்ரூவின் பிறந்தநாள் வந்தது. பொதுவாக இளவரசர்களின் பிறந்த நாள் லண்டன் அரண்மனையில்  விழாவாகக் கொண்டாடப்படும். வெளியிடங்களில் கொண்டாடப்படுவதில்லை, இளவசரின் பிறந்த நாளை அறிந்த காமராஜார் “இங்கேயே கொண்டாடலாமே” என்று சொன்னதை ஏற்று சென்னையிலேயே கொண்டாட விரும்பினார்  ராணி.   பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகள் விரும்பாத இந்த விஷயத்தில்  விழாவைத் தவிர்க்க சொன்ன பல யோசனைகளில் ஒன்று லண்டனிலிருந்து கேக்கை உடனே கொண்டுவர முடியாது. ஆனால், ராணி சென்னையிலேயே தயாரிக்கப்பட்ட கேக்கை வெட்டி கொண்டாட சம்மதித்தார். ஒரு பிரிடிஷ் இளவரசரின் பிறந்தாள் இங்கிலாந்துக்கு வெளியே கொண்டாடப்பட்டது அதுதான் முதல் முறை.  கிண்டி ராஜ் பவனில்  கவர்னர்  அமைச்சர்களின் முன்னிலையில் சென்னை ‘பசோட்டா’ என்ற பேக்கரியில் விசேஷமாக தயாரிக்கப்பட்ட கேக்கை வெட்டி பிறந்த நாள் கொண்டாடபட்டது. கிண்டி ராஜ் பவனில்  நடந்த விழா ராணியை மிக கவர்ந்தது. காமராஜரின் எளிமையையும் அன்பையும் கண்டு  ராணி வியந்தார்.

காமராஜர் இங்கிலாந்து சென்றபோது, ராணியின்  அரண்மனையில் விருந்து பரிமாறப்பட்டது. அந்த விருந்து நிகழ்ச்சியில் மரபை மீறி ராணி எலிசபெத், காமராஜருக்கு உணவு பரிமாறினார். வழக்கமாக  எந்த தலைவருக்கும் ராணி நேரடியாக உணவு பரிமாறுவது கிடையாது. ஆனால், காமராஜருக்கு உணவு பரிமாறி, அந்த மரபை உடைத்தெறிந்தார். காமராஜரின் மக்கள் சேவையும், எளிமையும் ராணியை வெகுவாக கவர்ந்ததே இதற்கு முக்கிய காரணம்.

வழக்கமாக தொண்டு நிறுவனங்களை நடத்துபவர்கள் லண்டனில் அரண்மனைக்கு சென்றுதான் ராணியை சந்திக்க முடியும்.  இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது 1983ம் ஆண்டு இரண்டாவது முறையாக ராணி எலிசபெத் இந்தியா வந்தார். அப்போது அன்னை தெரசாவை  அவரது நிறுவனத்திற்கு சென்று  சந்தித்தார்.

பொதுவாக பிரிட்டிஷ் ராணி சினிமா சம்பந்தபட்ட விழாக்களில் கலந்து கொள்வதில்லை. பொது அரங்கில் திரைப்படங்கள் பார்ப்பதுமில்லை. ஐ.கே.குஜ்ரால் பிரதமராக இருந்தபோது மூன்றாவது முறையாக 1997ம் ஆண்டு இந்தியா வந்தார். அப்போது சென்னை வந்த  ராணி, தரமணியில் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி முன்னிலையில், எம்.ஜி.ஆர். திரைப்பட நகரில் கமலஹாசனின் ‘மருதநாயகம் ’ படப்பிடிப்பை துவக்கிவைத்தார். சுமார் 20 நிமிடம் அந்த விழாவில் பங்கேற்றார். கமலஹாசனிடம் படம் பற்றி கேட்டும் மற்றவர்களிடம் சினிமா குறித்தும் பேசி  நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்கு அதிகமாவே செலவிட்டு ஆச்சரியப்படுத்தினார்.  (மருத நாயகம் படம் வளரவோ, வெளிவரவோ இல்லை என்பது வேறு விஷயம்)

இங்கிலாந்து அரசி தன்னை சந்திக்கும்  எல்லோருடனும் கைகுலுக்குவதில்லை.  உலக நாட்டு தலைவர்களுடன் கை குலுக்கும் போது நீண்ட வெள்ளை கையுறைகளை அணிந்திருப்பார். ஆனால் நமது பிரதமர் மோடியை சந்தித்த போது கையுறைகள் இல்லாமல் கை குலுக்கினார்.  அணிய மறந்தாரா. அல்லது  விசேஷமாக அதைச் செய்தாரா என்பது இன்று வரை தெரியாத அரண்மனை ரகசியம்.

இங்கிலாந்தில் மட்டுமில்லாமல் இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து போராடி வெற்றி பெற்ற நாடுகள் பலவற்றிலும்கூட இந்த மஹாராணி மக்கள் மனதில் இடம்பிடித்தவராக வாழ்ந்தவர்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com