மல்லேஸ்வரா கோயில் ‘தடியடி திருவிழா’!

மல்லேஸ்வரா கோயில் ‘தடியடி திருவிழா’!

ந்திர மாநிலத்தில் கர்னூல் மாவட்டம், ஆலூர் கிராமத்தில் இருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தேவாரகட்டா என்றொரு மலைக்கிராமம். ஆந்திரா மற்றும்   கர்நாடகா மாநில எல்லையில் ஆந்திரா எல்லைப்பகுதியில் உள்ளது அந்த ஆன்மீகத் தலம். அந்த மலைக்கிராமத்தில் புகழ் பெற்ற மல்லேஸ்வரா சாமி கோயில் அமைந்துள்ளது. அங்கு தான் வித்தியாசமான சற்றே விவகாரமான ஒரு திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதுவே “தடியடி திருவிழா” என்று அழைக்கப்படுகிறது.

இந்தத் ’தடியடி திருவிழா’ அந்த மலைக்கிராமப் பகுதியில் சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து விடாமல் நடைபெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது. சரி. நாம் அந்த “தடியடி திருவிழா”வுக்கு வந்து விடுவோம்.

ஆண்டுதோறும் ஆயுத பூஜைக்கு அடுத்த நாளான விஜயதசமி திருநாள் அன்று, அந்த மலைக் கிராம மக்களுக்குள்ளே இரு வேறு கிராமக் குழுக்களாகப் பிரிந்து திறந்த வெளியில் நிஜமாகவே தடியடி சண்டை நடத்தி “தடியடி திருவிழா” கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அந்தச் சண்டையில் கட்டாயமாக சிலர் இறந்து போகிறார்கள். மேலும் நூற்றுக் கணக்கானோர் காயங்கள் மற்றும் படு காயங்கள் அடைந்து விடுகிறார்கள். அதுவும் எதற்காகவாம்? அந்தத் தடியடிச் சண்டையில் எந்தக் குழுவினர் வெற்றி பெறுகிறார்களோ அந்தக் குழுவினர், மல்லேஸ்வரா சாமி உற்சவர் சிலையினைத் தங்கள் கிராமத்துக்குக் கொண்டு போய் விடுகிறார்கள். ஏதோ உலகக் கோப்பை விளையாட்டுப் போட்டியில் தீரமுடன் வெற்றி பெற்று கோப்பையைக் கொண்டு செல்வது போல.

அந்த உற்சவர் சிலையினை அடுத்த ஆண்டில் ஆயுத பூஜை திருவிழாவுக்கு முன்பாகக் கோயிலில் கொண்டு வந்து தந்து விடுவார்கள்.

இந்த ஆண்டு 24.10.2023  செவ்வாய்க்கிழமை விஜயதசமி. அன்றிரவு சாமி உற்சவம் தொடங்கியது. அப்போது மஞ்சள் பொடி தூவியும், பக்திப் பாடல்களைப் பாடியபடியும் சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. பல கிராமப் பொது மக்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். கல்யாண உற்சவம் முடிவடைந்த பின்னர், அந்தப் பகுதியைச் சேர்ந்த 23 கிராமங்களின் மக்களும் இரண்டு குழுக்களாகப் பிரிந்து, நள்ளிரவிலே அந்த இரண்டு குழுக்களுக்கும் இடையே ஆவேசமாக “தடியடி” சண்டை நடைபெற்றது.

இரண்டு குழுக்களில் திரண்டு இருந்தவர்களின் கரங்களில் நீண்ட கம்புகள், கட்டான் தடியடிகள் இருந்தன. இந்தப் பக்கம் நூற்றுக்கணக்கானோர். அந்தப் பக்கம் நின்றபடியாக நூற்றுக் கணக்கானோர். இரண்டு குழுவினரும் ஆக்ரோசமாக மிகவும் ஆவேசமாகக் கட்டைகளாலும் தடிகளாலும் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். 24.10.2023  விஜயதசமி செவ்வாய் இரவு நடைபெற்ற மல்லேஸ்வரா சாமி தடியடி திருவிழா வில் மூன்று பக்தர்கள் இறந்து விட்டார்கள். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்கள் அடைந்துள்ளனர். படுகாயங்கள் அடைந்தவர்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.

ஆண்டுதோறும் இந்தத் தடியடித் திருவிழாவில் பக்தர்கள் சிலர் இறந்து போவதும், நூற்றுக்கணக்கானோர் படுகாயங்கள் அடைவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாவட்ட நிர்வாகமும், அரசு வருவாய் மற்றும் காவல் துறையினரும் அந்தப் பகுதி மக்களிடம் இந்தத் தடியடி திருவிழாவினை தடுத்து நிறுத்திட எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். எனினும் ஊர் மக்கள் அதனை எல்லாம் ஏற்க மறுத்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com