மல்லிகாவின் வீடு - சிறுவர் சிறுகதைகள்

மல்லிகாவின் வீடு - சிறுவர் சிறுகதைகள்
Published on

ஜி.மீனாட்சி. (வானதி பதிப்பகம்).

‘அன்புள்ள அண்ணி’ - என்ற கதையை ரேடியோவில் இளையபாரதம் நிகழ்ச்சியில் எழுதிப்படித்த ஜி.மீனாட்சிக்கு வயது 12! அதுவே அவரது முதல் கதை. இப்போது ‘ராணி’ வார இதழின் ஆசிரியர். ஐந்து சிறுவர்களுக்கான புத்தகங்கள், எட்டு மற்றவர்களுக்கான புத்தகங்கள் என இலக்கியத்தில் இயங்கி வரும் ஜி.மீனாட்சி அவர்களுக்கு, 2022 ஆம் ஆண்டின் “பால் சாகித்திய புரஸ்கார் விருது” வழங்கப்பட்டுள்ளது - அவரது ‘மல்லிகாவின் வீடு’ , சிறுவர் சிறுகதைகள் புத்தகத்திற்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு நம்முடைய வாழ்த்துகள்!

பதிப்புலகத் தந்தை வை.கோவிந்தன் அவர்கள் அணில் (ஆசிரியர் தமிழ்வாணன்), பாப்பா, குழந்தைகள் செய்தி போன்ற சிறுவர் பத்திரிகைகளை நடத்தியவர். ‘ஈசாப் குட்டிக்கதைகள்’ போன்ற சிறுவர் நூல்களை எழுதியவர். அந்த வகையில் அருமையான சிறுவர் சிறுகதைகளை மீனாட்சி அவர்கள் எழுதியுள்ளார்கள். வாழ்க்கையில் தாம் கண்ட உண்மை நிகழ்வுகளையும், செய்திகளில் வாசித்தவற்றையும் தன் கற்பனையுடன் கலந்து, சிறுவர்களுக்கான சிறந்த அறநெறிக் கதைகளாக எழுதியுள்ள 16 சிறுகதைகளின் தொகுப்புதான் “மல்லிகாவின் வீடு”.

சிறுவர்கள் இலக்கியம் எளிமையான நடையில் சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். கதையோடு கதையாக நல்லொழுக்கங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும். வயதுக்கேற்ற வண்ணப்படங்கள், கதைக்களன்கள், நல்லது, தீயது என வேறுபடுத்தும் கருத்துக்கள், மொழி வளம், கற்பனை வளம் நிறைந்த கதைகள் என இருப்பது சிறுவர் இலக்கியத்திற்கு இன்றியமையாதவை. நல்ல ஆரம்பம், தொய்வில்லாத போக்கு, அறம் சார்ந்த நல்ல முடிவு என சிறுவர் கதைகள் இருக்க வேண்டும். இளம் உள்ளங்களில் அவை கொடுக்கும் தாக்கம், எதிர்காலத்தில் பிரதிபலிப்பவை என்பதைக் கவனத்தில் கொள்ளவெண்டும். மேற்கூறிய எல்லா குணங்களையும் கொண்டுள்ள சிறுகதைகளைப் படைத்துள்ளார் மீனாட்சி அவர்கள்!

அவரது முன்னுரையில் சொல்வதைப்போல, மரம் நடுவதின் அவசியம், சுற்றுச்சூழல் மேம்பாடு, நல்லொழுக்கம், நவீன தொழில்நுட்பத்தின் பாதிப்புகள் போன்றவைகளைக் கதைகள் மூலம் சொல்வதால், சமூக விழிப்புணர்வுக் கருத்துக்களை குழந்தைகளின் மனதில் பதிய வைக்க முடியும். தமிழில் வயதுக்கேற்ற சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து தொகுப்பது அவசியம். அந்த வகையில் மல்லிகாவின் வீடு பத்து வயது முதல் பதினாறு, பதினேழு வயதுவரையிலான சிறார்களுக்கு ஏற்றதாக இருக்கும் எனப்படுகின்றது.

படிக்கும் குழந்தைகளுக்குள் ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் கதை செல்லப்பெண். உருவமும், நிறமும் இறைவன் தந்தது; இதில் கேலி பேசுவதற்கோ, கிண்டல் செய்வதற்கோ இடமில்லை என்ற கருத்தைச் சொல்லும் ‘காகங்களின் சேவை’ பஞ்சதந்திரக் கதைகள் போல், பறவைகள் பேசிக்கொள்வதுபோல் எழுதப்பட்டுள்ள கதை.

பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்கக் கூடாது, வீட்டிலேயே இயற்கை உரம் தயாரிக்கலாம் போன்ற சமூக விழிப்புணர்வுகளை விளக்கும் கதை, ‘மல்லிகாவின் வீடு’. மண் குவளைகளில் இளநீர் குடிப்பது, தோட்டத்தில் பூச்செடிகளையும், தென்னை, மா, வாழை, வேப்ப மரங்களையும் வளர்ப்பது, குப்பைகள் இல்லா நகரங்களை உருவக்குவது, வாழை இலை போட்டு தரையில் அமர்ந்து உண்ணுவது எனப் பல நல்ல விஷயங்களைச் சொல்கின்றது இந்தக் கதை. சிறுவர்களுக்கு மட்டுமன்றி, பெரியவர்களுக்குமான கதையாக அமைந்துள்ளது சிறப்பு.

மெழுகுவர்த்திச் சுடர், கண்டு படிக்கலாம், ஃபேஸ்புக் நண்பர்கள், காட்டுக்குள் ஒரு விபத்து, புதன்கிழமை ரகசியம், வண்ணங்களும் எண்ணங்களும், மயில்சாமி வாத்தியார் ஆகிய கதைகள், மற்றவருக்கு நன்மை செய்தல், பிறரிடமிருக்கும் நல்ல பண்புகளைக் கடைபிடித்தல், மரக்கன்றுகள் நட்டுப் பராமரித்தல், தீ விபத்தில் முதலுதவி, ஏழைகளுக்கு உதவுதல், ஒற்றுமையே வலிமை என சுவாரஸ்யமான சம்பவங்கள் மூலம் பல அறிவுரைகளைச் சொல்கின்றன.

சிறு சேமிப்பு, தோல்வியில் துவளாமை, மற்றவர் பொருளுக்கு ஆசைப்படாமை (இதுவும் தேனீக்கள், நரி, காக்கை என விலங்குகளின் மூலம் சொல்லப்படும் கதை!) பரிசுப் பணத்தில் பகுதியை பொது நன்மைக்காக செலவிடுதல் போன்றவையும் சின்னச் சின்ன கதைகள் மூலம் சிறப்பாகச் சொல்கிறார் மீனாட்சி.

சமீபத்தில் காஷ்மீர் சென்றிருந்த போது, புகழ்மிக்க டால் ஏரி மாசு நிறைந்து இருப்பதையும், ஆக்கிரமிப்புகளால் சுருங்கி வருவதையும் காண நேர்ந்தது. மனதுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. மீனாட்சி அவர்களுக்கும் இந்த எண்ணம் வந்திருக்க வேண்டும். அவரது ‘பசுமைத் தூதர்’ கதையில், டால் ஏரியில் படகோட்டும் ராம்லாலும் அவரது பெண் லில்லியும், சுற்றுலாப் பயணிகள் எறியும் சிப்ஸ் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள், டெட்ரா பாக்கெட்டுகள் போன்ற கழிவுகளை காலையில் ஏரியிலிருந்து வலையில் அள்ளி, சாக்குப்பையில் போட்டு குப்பை சேகரிப்பவரிடம் கொடுத்துவிடுகிறார்கள். இதற்காக, ‘இளம் பசுமைத் தூதர்’ விருது லில்லிக்குக் கிடைப்பதாகக் கதையை முடித்திருக்கிறார். அழகான கதை.

சிறுவர் இலக்கியம் நலிந்து விட்டதா? எனப் பலரும் கேள்விகள் எழுப்பி வரும் நிலையில், மீனாட்சி அவர்களின் இந்தச் சிறுகதைத் தொகுப்பு, மிகவும் ஆறுதலான ஒன்றாகப் படுகிறது. மேலும் அவர் இம்மாதிரிக் கதைகளை எழுதி, சிறுவர் இலக்கியத்தையும், சிறுவர்களின் வாசிக்கும் பழக்கத்தையும் வளர்க்க வேண்டும் - அவரே சொல்வது போல, ‘இது காலத்தின் கட்டாயம்!’

- ஜெ.பாஸ்கரன்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com