'மனைவி சொல்லே மந்திரம்' என்பது மனைவியை ஏமாற்றும் ஒரு தந்திரம்! | கலைஞர் 100

கலைஞரும் கல்கியும்
'மனைவி சொல்லே மந்திரம்' என்பது மனைவியை ஏமாற்றும் ஒரு தந்திரம்! | கலைஞர் 100

கலைஞரின் நூற்றாண்டு விழாவினை ஒட்டி கல்கி இதழின் 80 ஆண்டு கால களஞ்சியத்தில் இருந்து நமது நிருபர் எஸ். சந்திர மௌலி மூழ்கி எடுத்த முத்துக்களின் தொகுப்பு.

கலைஞரது 75வது பிறந்த நாளை ஒட்டி வெளியான 07.06.1998 மற்றும் 14.06.1998 ஆகிய இரு கல்கி இதழ்களில் “கலைஞர் 75” என்ற தலைப்பில் அவரது முற்றிலும் மாறுபட்ட பேட்டி இரண்டு பகுதிகளாக வெளியானது.

07.06.1998 இதழில் வெளியான அந்தப் பேட்டியின் பகுதிகளை ஏற்கனவே படித்து ரசித்தோம். இதோ 14.06.1998 இதழில் வெளியான அதன் தொடர்ச்சி:

கல்கி : “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு" என்பதால் இந்தக் கேள்வி. அரசியல்வாதி ஜெயலலிதாவிடம் உங்களுக்குப் பிடித்த அம்சம் என்ன?

இந்தக் கேள்விக்கு கலைஞர் சொன்ன பதிலால் அவரது அறையே வெடிச்சிரிப்பில் அதிர்ந்தது. எவ்விதமான உணர்ச்சிகளையும் சுலபத்தில் வெளிக்காட்டிவிடாத கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் கூடத் தம்மை மறந்து சிரித்துவிட்டார்.

கலைஞர் சொன்ன அந்த பதில்தான் என்ன?

இதோ அந்த பதில்:

கலைஞர்: மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் போயஸ் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டா என்பது எனக்குத் தெரியாது.

கல்கி : உங்களுடைய முதல் சம்பாத்தியத்தை எப்படிச் செலவழித்தீர்கள்!

கலைஞர்: ஈரோட்லிருந்த பெரியாரின் குடியரசு அலுவலகத்தில் நான் பெற்ற சம்பளம்தான் எனது முதல் சம்பாத்தியம். மாதம் நாற்பது ரூபாய் சம்பளம். அதில் சாப்பாட்டுச் செலவுக்கும் சினிமா மாதிரியான பொழுது போக்குச் செலவுக்கும் போக மீதியுள்ள ஐந்து அல்லது பத்து ரூபாய் அளவுக்கு திருவாரூரிலிருந்த எனது பெற்றோருக்கு அனுப்பி வைத்து விடுவேன்.

கல்கி : அண்ணாவிடமிருந்து பாராட்டுதல்களைப் பெற்றது போல் எப்போதாவது அவருடைய கோபத்துக்கும் ஆளாகி இருக்கிறீர்களா?

கலைஞர் : அண்ணாவின் கோபத்துக்கும் ஆளாகியிருக்கிறேன். ஆனாலும் அது செல்லக் கோபமாக இருக்குமே தவிர, சீற்றமாக இருந்ததில்லை. சொல்லியும் கேட்காமல் 1959ம் ஆண்டு சென்னை மாநகராட்சித் தேர்தலில் அதிகமான வேட்பாளர்களை நான் நிறுத்தி விட்டடேன். அப்போது அண்ணா 'இத்தனை பேரை நிறுத்தியிருக்கியே. ஜெயிக்க முடியுமாய்யா? என்று கேட்டார். நான் “ஜெயிக்க முடியும்” என்றேன். “முடியாது” என்றார் அவர். 'நிச்சயமாக ஜெயிப்போம். கார்ப்பரேஷனை நாம் பிடிப்போம்' என்றேன், ‘என்ன பந்தயம் கட்றே?' என்றார், நான் எந்தப் பந்தயத்துக்கும் தயாராயிருக்கிறேன்' என்றேன். பட்டியலையே தூக்கிப் போட்டு விட்டு, 'ஜெயித்தால் நான் உனக்கு ஒரு மோதிரம் பண்ணிப் போடறேன் என்றார்; அந்தப் பந்தயத்தில் பண்ணிப் போட்டதுதான் இந்த மோதிரம். (விரலை உயர்த்திக் காட்டுகிறார்)

கல்கி : அண்ணா கொடுத்த இந்த மோதிரத்தை நீங்கள் எப்போதும் அணிந்திருக்கிறீர்களே. இது ஒரு சென்டிமெண்ட்டா?

கலைஞர்: சென்டிமெண்ட் என்று சொல்ல முடியாது. அன்பின் அடையாளம். இது எனது கடைசிப் பயணம் வரையில் என் கை விரலில்தான் இருக்கும்.

கல்கி: உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் கூட உங்களைத் 'தலைவர்' என்றுதான் குறிப்பிடுகிறார்கள், அப்போது உங்கள் மனநிலை எப்படியிருக்கும்?

கலைஞர் : என்னுடைய அக்கா என்னைத் ‘தம்பி' என்று தானே அழைக்கிறார்கள்.

கல்கி: ஸ்டாலினெல்லாம் உங்களைத் தலைவர் என்றுதானே குறிப்பிடுகிறார்.

கலைஞர்: பையன்கள் அப்படிக் குறிப்பிடலாம். குடும்பத்தில் வேறு சிலர் அப்படிக் குறிப்பிட்டாலும், கழகம் என்கிற குடும்பத்தில் அவர்களும் தொண்டர்கள்தானே! அதனால்தான் அப்படிக் குறிப்பிடுகிறார்கள் என்று நினைத்துக் கொள்வேன்,

கல்கி: ‘மனைவி சொல்லே மந்திரம்'- சரி தானா?

கலைஞர்: என் அளவில் இதில் ஒரு திருத்தம் இருக்கிறது. 'மனைவிகள்' என்று சொல்லணும்' (சிரிப்பு), வீணாகச் சண்டையை மூட்டி விடாதீர்கள்! (சிரிப்பு). 'மனைவி சொல்லே மத்திரம்" என்பது மனைவியை ஏமாற்றும் ஒரு தந்திரம். அவ்வளவுதான்" (மீண்டும் சிரிப்பு)

கல்கி: குடும்பத்தை நடத்தும் பொறுப்பில் உங்களுக்கு ஏதேனும் பங்கு இருக்கிறதா?

கலைஞர்: எந்த விதமான பொறுப்பான பங்கும் என்றைக்குமே இருந்ததில்ல. வீட்டில் உள்ளர்கள்தான் குடும்பத்தை நடத்துகிற பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

கல்கி : குடும்பத்தில் முக்கியமான விஷயங்களில் யார் முடிவெடுப்பார்கள்?

கலைஞர்: திருமணம் போன்ற முக்கிமான முடிவுகளை எடுப்பதுதான் என்னுடைய பொறுப்பாக இருக்கும் ஏனென்றால் என்னுடைய குடும்பத்தில் காதல் திருமணங்கள் நடத்திருக்கின்றன. அதற்கான முடிவுகளை நான்தான் எடுக்க வேண்டியிருந்திருக்கிறது.

கல்கி : நீங்கள் காதலுக்குச் சாதகமாகத்தான் இருப்பீர்கள். இல்லையா?

கலைஞர் : நிச்சயமாக.

கல்கி : உங்களுக்குச் சமைக்கத் தெரியுமா? எப்போதாவது சமைத்திருக்கிறீர்களா? என்ன சமைத்தீர்கள்?

இந்தக் கேள்விக்கு கலைஞர் சட்ட சபையில் எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் பாணியில் பதில் சொன்னார். அவர் சொன்ன பதில் என்ன?

நாளை பார்க்கலாம்.

கல்கி 14.06.1998 இதழிலிருந்து

தொகுப்பு: எஸ். சந்திர மௌலி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com