- மகேஷ் குமார் “இன்னிக்கு இஞ்சினியர் கந்தையா பேங்குக்கு வந்திருந்தார். நாளைக்கு கார்த்தால எட்டு மணிக்குள்ள அவரை வீட்ல போய்ப் பாரு. அண்ணா நகருக்குப் பின்னாலதான் இருக்கு வீடு” என்றார் அப்பா.மறுநாள் காலையில் சைக்கிளில் போய் அவர் வீட்டைத் தேடிக்கண்டுபிடித்தேன். ஊரில் உள்ள ஒரு பெரிய நூற்பாலையில் அவர் மூத்த இஞ்சினியர். அங்குள்ள பற்பல இயந்திரங்களைப் பராமரிக்கும் பெரிய குழுவின் தலைவர். ஆஜானுபாகுவாக நின்றிருந்தார். வேலைக்குக் கிளம்பத் தயாராக கருநீல பேண்டும் ‘இன்’ செய்யப்பட்ட வெளிர் நீல சட்டையுமாக பெல்ட் போட்டு கம்பீரமாக இருந்தார். கொஞ்சம் பெரிய தொப்பை அவர் உள்ளே போகுமுன் கதவை திறந்துவிடும்போல இருந்தது. உப்பும் மிளகுமாக தலை. படிய வாரியிருந்தார். முறுக்கு மீசை. முழுக்கை சட்டையை மடித்துவிட்டுக்கொண்டே வெளியே வந்தார். “வாப்பா... மகேஷ்.. வா.. வெகுநாளாச்சு பார்த்து. பெரிய ஆளாயிட்ட... பாலிடெக்னிக் முடிச்சுட்டு சும்மா இருக்க போல?” உப்புக்காகிதத்தை தகரத்தின்மீது தேய்த்தார்ப்போல கரகர குரலில் ஒரு புன்னகையுடன் வரவேற்றார்.“போன மாசந்தான் முடிஞ்சது. இன்னும் ரிசல்ட், சர்டிஃபிகேட் எல்லாம் வரலை சார்”“அதெல்லாம் வரப்ப வரட்டும். அப்பாட்ட நான்தான் சொன்னேன். சும்மா ஏன் இருக்க? நானெல்லாம் படிச்சு முடிஞ்சதும் அடுத்த நாளே நஞ்சன்கூடுல...” என்று ஆரம்பித்தவரிடம் “அதெல்லாம் அந்தக் காலம். இந்தக் காலத்துப் புள்ளைங்க கொஞ்சநாள்தான் ஜாலியா இருக்கட்டுமே” என்றார் அப்போது வந்த அவர் மனைவி. அவர் மகளிர் கல்லூரியில் ஆசிரியை.“அது சரிதான். அவன் வேணும்னா வந்துட்டுப் போறான். இல்ல வீட்டுல இருக்கான்...” என்று மனைவியிடம் சொல்லிவிட்டு, “இங்க பாரு. அடுத்த வாரம் புதுசா ரெண்டு ஆல்டர்னேடர்க இன்ஸ்டால் பண்ணப் போறோம். 800kv, 500kv ரெண்டுமே கிர்லாஸ்கர். நல்ல எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும். 3 மாசம் போல ஆகலாம். டே ஷிஃப்ட்தான். சம்பளம், ஸ்டைபண்ட் எல்லாம் எதிர்பார்க்காத. சர்டிஃபிகேட் தரேன். காலைல 8 மணிக்கு தயிர்சாதம் ஊறுகாயைக் கட்டிக்கிட்டு வந்துடு. டீக்கு கூப்பன் வாங்கித் தரேன். சரியா?” என்று மூச்சுவிடாமல் பேசினார்.எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஒருபுறம் விருப்பமாக இருந்தாலும் மறுபுறம் கொஞ்சம் கடுப்பாகவும் இருந்தது. ஆனாலும் மறுக்க தைரியம் வரவில்லை. ஒப்புக்கொண்டேன்.“சபாஷ்... பாத்தியா... அதெல்லாம் ஊக்கமிருந்தா தன்னால வருவான்” என்றார் மனைவியிடம்.“ம்க்கும்ம்.. ஈரச் சாக்கை கோழி மேல போட்டுட்டு.... இந்தாப்பா டீ சாப்பிடு” என்றார்.“அப்பறம்... அது டீசல், ஆயில், கிரீஸ்னு புழங்கற இடம்....”ஜாக்கி ஜோசஃப் நினைவுக்கு வர “தெரியும் சார்... ஒரு செட் ட்ரஸ் அதுக்குன்னு வெச்சுருக்கேன்” என்றேன்.“பார்ரா... ங்கொப்பன் தன்னானே...” என்று சிரித்தார். பிறகு தனது பச்சை புல்லட்டை உதைத்து தடதடவெனப் போய்விட்டர். அவர் உருவத்திற்கு அது சரியான வாகனமாகத் தெரிந்தது.மறு வாரம் திங்கட்கிழமை. காலை எட்டு மணிக்கு முன்பே நூற்பாலை வாசலில் பெரிய்ய்ய்ய இரும்பு கதவுக்கு அருகில் நின்றுகொண்டேன். சரியாக எட்டு மணிக்கு கந்தையாவும் தன் புல்லட்டில் வந்தார். கேட்டில் சொல்லிவிட்டு என்னையும் அழைத்துக்கொண்டு உள்ளே வந்தார். வெளியிலிருந்தே பார்த்திருந்த எனக்கு ஆலையின் உள்ளே பிரமாண்டமாகத் தெரிந்தது. அங்கங்கே பெரிய பரந்த மரங்கள், நிழல்கள். மக்கள், பஞ்சுப்பொதி, நூல்கண்டுகள், காடாத்துணிகள் ஏற்றிச் செல்லும் கைவண்டிகள் என அந்தக் காலையிலேயே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.“முதல்ல டைம் ஆபீஸ் போய் உனக்குக் கொஞ்சம் பந்தோபஸ்தெல்லாம் பண்ணணும்” என்று அங்கே அழைத்துப் போனார். அலுவலரிடம் பேசி எனக்கு தற்காலிக அடையாள அட்டை, சைக்கிள் நிறுத்துவதற்கான அனுமதி, தேநீர் வில்லைகள் என பெற்றுக்கொடுத்தார். பிறகு ஆலைக்குள் என்னென்ன இடத்தில் என்ன துறைகள் என்று பொதுவாகச் சொல்லிவிட்டு ‘டூல் ரூம்’ எனப்படும் பெரிய அறைக்குப் போனோம்.“இங்க நீ அடிக்கடி வரவேண்டியிருக்கும். நாளைக்கு கிர்லோஸ்கர்காரன் வந்து அதைக் கொண்டா; இதைக் கொண்டான்னு சொன்னா மளார்னு இங்க வந்து நின்னுடு. இங்க ஒரு டூல் இல்லைன்னா அது நம்ம டிஸ்டிரிக்ட்லையே இல்லைன்னு அர்த்தம்” என்று அந்த அறை மேலாளரைப் பார்த்து சிரித்தபடி சொன்னார்.“பின்ன... சார் அப்பிடி பார்த்துப் பார்த்து செட் அப் பண்ணியிருக்கார்” என்று அவரும் ஆமோதித்தார்.பிறகு என்னை அவருடைய குழுவில் இருக்கும் ரவி என்பவரிடம் சொல்லி ஒப்படைத்துவிட்டு காணாமல் போய்விட்டார்.அடுத்த நாலைந்து நாட்கள் தினமும் காலையில் 1 மணிநேரம் (முதல் தேநீர் வரை) என்னை ஆலைவலம் அழைத்துப் போனார் கந்தையா. ஒரு பஞ்சு நூற்பாலை எப்படி இயங்குகிறது; பஞ்சு உள்ளே வந்ததிலிருந்து அது நூலாகி, நெய்யப்பட்டு துணியாகி வெளியேறும் வரை அனைத்துத் துறைகள், அங்குள்ள இயந்திரங்களின் தன்மை, அவற்றின் பராமரிப்புத் தேவைகள் எல்லாம் விளக்கமாகச் சொன்னார். எனக்கு ‘இஞ்சின் ரூம்’ எனப்படும் மின்சக்தி உற்பத்தி நிலையத்தில்தான் வேலை என்றாலும் அதன் தேவையும் முக்கியத்துவமும் இப்படி மொத்தமாகத் தெரிந்துகொண்டால்தான் புரியும் என்றார்.அவர் உருவம் (குறிப்பாக மீசை !!) குரல், கம்பீரம் என்பதெல்லாம் கொஞ்சம் மிரட்டலாக இருந்தாலும் சாதாரணமாகத்தான் பழகினார். எந்த உற்பத்திக் கூடத்திற்குப் போனாலும் அங்குள்ள கடைநிலைத் தொழிலாளிகள் பலரை அவர் பேர் சொல்லி அழைத்துப் பேசியபோது ஒரு பெரிய இஞ்சினியர் நம்மிடம் நின்று பேசுகிறார் என்ற பெருமிதம் அவர்களிடம் தெரிந்தது.பின்னர் கிர்லோஸ்கர் பொறியாளர்கள் வந்து வேலை ஆரம்பித்த பிறகு இஞ்சின் அறையே கதி என்றாகிப் போனது. அந்தப் பெரிய இடத்தில் ஏற்கெனவே ராட்சதர்கள் போல நான்கு 1000kv இஞ்சின்கள் பெரும் இரைச்சலுடன் ஓடிக்கொண்டிருக்கும். நாம் பேசுவது நமக்கே காதில் விழாது. நிரந்தர வேலையிலிருக்கும் ஊழியர்கள் நாள் முழுதும் பரபரப்பாக தினப்படிப் பணிகளை முடித்துவிட்டு நேரமிருக்கும்போதுதான் இந்த புதிய நிர்மாணப்பணிக்கு வருவார்கள். வந்தவர்களோ நான் ஏதோ அங்கே பல வருடங்களாக வேலை செய்பவன்போல கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள். கந்தையாவுக்கு பல வேலைகள். அவ்வப்போது அவரை தேடிப் பிடித்து அவரிடம் கேட்டால் ரத்தினச் சுருக்கமாக ஏதோ சொல்லிவிட்டு ஒரு புத்தக எண்ணைச் சொல்லி அதில் பார்க்கச் சொல்லுவார். இஞ்சின் அறையிலேயே ஒரு பகுதியில் ஒரு நூலகம் போல கிட்டத்தட்ட 200 கையேடுகள், பதிவேடுகள், போன்றவை இருந்தன. அவற்றிலிருந்து வந்தவர்களுக்கு சில தரவுகள் கிடைத்தன.பல சமயங்களில் அந்தத் தரவுகள் புரிவதற்குள் மண்டை காயும். அந்தப் பொறியாளர்களோ பல்லைக் குத்திக்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். கந்தையாவும் இடையிடையே வந்து அவர்களை விரட்டுவார். என்னிடமும் கொஞ்சம் கோவமாக “இவங்களுக்கு வேண்டியதைக் குடுக்கத்தானே நீ இருக்க?” என்று என்னையும் கடிந்துகொள்வார். ஏதோ சம்பளம் இல்லாவிட்டாலும் கொஞ்சம் கற்றுக்கொள்ளலாம் என்று வந்தால் விவரமாகச் சொல்லாமல் இப்படி மாட்டிக்கொண்டோமே என்று அவர் மீது கடுங்கோவம் வந்தது.ஒருநாள் மாலை கந்தையாவுக்காகக் காத்திருந்து அவர் கிளம்பும்போது குறுக்கே சென்று பிடித்துவிட்டேன்.“சார்... கொஞ்சம் பேசணும்”“நாளைக்குப் பார்ப்போமே”“இல்லை சார். இப்பவே...” கொஞ்சம் எரிச்சலுடனே சொன்னேன்.“ம்ம்ம்... சரி. சைக்கிளை நாளைக்கு எடுத்துக்க. வண்டில ஏறு. வீட்டுக்குப் போய்ப் பேசலாம்”தேனீருடன் மொட்டை மாடிக்குப் போனோம்.“ம்ம்... சொல்லுப்பா... என்ன?”“இல்ல சார். மில்லுல எனக்கு எல்லாமே புதுசு. வந்த மறு வாரமே கிர்லோஸ்கர் இஞ்சினியர்க வந்துட்டாங்க. நீங்களும் கூட இருக்கறதில்லை. இருக்கற மத்தவங்களுக்கு நேரம் இல்லை. அவங்களுக்கு வேணுங்கறதைக் குடுக்க எனக்கு சரியாத் தெரியல. நீங்களும் என்னைத் திட்டறீங்க.. அதான்...” என்று தயங்கினேன்.சிறிது நேரம் ஒன்றும் பேசாம தேனீர் குடித்தபடி என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். சட்டெனெ சிரிக்க ஆரம்பித்தார். என் முதுகில் ஒரு தட்டு தட்டினார்.“கரெக்ட். ஒத்துக்கிறேன். பாரு... எனக்கு இந்த மில் ரெண்டாவது வேலை. முதல்ல 5 வருஷம் நஞ்சன்கூடுல ஒரு மில்லுல வேலை செய்தேன். நீ இப்ப இருக்கற அதே நிலைல நான் அப்ப அங்க. ரொம்ப சிரமப்பட்டுதான் பல விஷயங்கல கத்துக்கிட்டேன். நீயும் அப்பா சொன்னார்னு பயந்துக்கிட்டு வரயா.. இல்ல நிஜமாவே உனக்கு ஈடுபாடு இருக்கான்னு எனக்குத் தெரியல. எனக்கு பெரிய படிப்பெல்லாம் கிடையாது. வெறும் ஐடிஐ-தான். கஷ்டப்பட்ட குடும்பம். சட்டுனு வேலைக்கு வந்துட்டேன். திறமைனால முன்னுக்கு வந்தவன். நான் நல்ல வாத்தியார் கிடையாது. கிரமமா சொல்லிக்குடுக்கவெல்லாம் தெரியாது. உங்கப்பா இப்படிச் சொன்னார்னு அன்னிக்கு ராத்திரி வீட்டுல சொன்னபோது டீச்சரம்மா குடுத்த ஐடியா இது. போன வாரம் நீ அவங்களை சமாளிச்சதெல்லாம் எனக்கு நல்லாவே தெரியும். எலக்டிரீசியன் திருமூர்த்தியை உன்னை நிழல் மாதிரி பார்த்து என்கிட்ட சொல்லச் சொன்னேன். ‘சார்.. தம்பி கெட்டி சார்’னான். நீயும் தைரியமா இப்ப வந்து கேக்கற... இனிமே கவலையில்ல. தொழில் கத்துக்க எவ்வளவு ஊக்கம் வேணுமோ அந்த அளவுக்கு தைரியமும் வேணும். நம்மனால முடிஞ்ச வரைக்கும் மோதிப் பாத்துட்டு முடியாதபோது கைவிட்டுடாம அடுத்து என்னன்னு யோசிக்கணும். நான் திட்டினேன்னு கோவப்பட்டியே.. இந்த தன்மானமும் வேணும். நம்ம தனிப்பட்ட அடையாளத்தை விட்டுக்குடுக்காம தைரியமாவும் இருக்கணும்; தொழிலும் கத்துக்கணும்; முன்னேறவும் செய்யணும்” என்று சொல்லி நிறுத்தினார்.அவர் சொன்னபடிதான் என் மனநிலை இருந்ததா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. கோவப்பட்டேன் என்பது மட்டும்தான் தெரியும். அடுத்து என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றேன்.“பேயறஞ்சவனாட்டம் நிக்காத. அங்க பாரு... ” என்று பின்னால் பார்த்தார்.திரும்பியபோது கடைசிப் படியில் நின்றபடி டீச்சரம்மா சிரித்துக்கொண்டிருந்தார்.“உன்னைப் பார்த்தா என் தம்பி நஞ்சுண்டன் நினைவுக்கு வரான். இப்பிடித்தான் அவனும்..” என்று ஆரம்பித்தவர் எனக்குப் பின்னால் கந்தையாவின் கும்பிட்ட கைகளைப் பார்த்து சிரித்தபடி நிறுத்திவிட்டார்.அதன் பிறகு 4 மாதங்கள் அந்த இரண்டு இயந்திரங்களும் நிறுவப்பட்டு மின் உற்பத்தி தொடங்கும்வரை எவ்வளவோ சொல்லிக்கொடுத்தார். ஒன்றைக் கற்றுக்கொள்வது எப்படி என்பதைக் கற்றுக்கொடுத்தார்.பின்னர் சென்னை மணலி சுத்திகரிப்பு ஆலையில் பயிற்சிப்பணிக்குத் தேர்வானபோது சென்னயிலிருக்கும் தன் நண்பர்களுக்கு கைப்பட கடிதம் எழுதி என்னிடம் கொடுத்து தேவைப்பட்டால் அவர்களை சந்திக்கச் சொன்னார். மண்டலத தொழிலாளர் நிலையத்திற்கு அவர் ஒருமுறை வந்தபோது திருவல்லிக்கேணி அறைக்குத் தேடிவந்து பார்த்துவிட்டுப்போனார். இன்றுவரைக்கும் வேலை என்று வரும்போது என் முதல் குரு அவர்தான்.(தொடரும்)