
பத்து மாதகாலமாக எதிர்பாராத விதமாக விண்வெளியில் சிக்கிக்கொண்டிருக்கிற வீராங்கனை சுநிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர்.
குஜராத் மாநிலம் மேஹ்ஸானா மாவட்டம் ஜூலாஸானிலிருந்து ஐரோப்பாவின் வடமேற்கு ஸ்லோவேனியா வகுக்கும் போய் அங்கிருந்து அமெரிக்காவில் குடியேறிய குடும்பத்தில் பிறந்தவர்.
இவரும் இன்னொரு அமெரிக்கரான புச் வில் மோரும் கடந்த ஜுன் 24 அன்று ஒருவார ஆய்வுப் பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணமானார்கள்.
இவர்கள் சென்ற போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட ஹீலியம் கசிவு போன்ற தொழில்நுட்பக் கோளாறுகளால் திட்டமிட்டிருந்தபடி பூமிக்குத் திரும்பிவர முடியாமல் போய்விட்டது.
நல்ல காலமாக அவர்களுக்கு சர்வதேச விண்வெளி நிலையம் அடைக்கலம் தந்திருக்கிறது. அங்கு இவர்கள் வழக்கமான ஆய்வுப் பணிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இந்த மாதம் 16ஆம் நாளன்று அவர்கள் பூமிக்குத் திரும்பி வருவார்கள் என்று நாஸா அறிவித்துள்ளது.
செப்டம்பரில் இவர்களுக்காக இரண்டு காலியிடங்களோடு சென்ற ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் விண்வெளி நிலையத்துக்கு இரண்டு மாற்று வீரர்களையும் நிலையத்துக்குத் தேவையான பொருள்களையும் சுமந்து சென்றது.
அது பூமிக்குத் திரும்புகிறபோது முந்தைய அணியின் இரண்டு வீரர்களோடு இவர்களைத் திரும்ப அழைத்து வருவதாக ஏற்பாடாகியிருக்கிறது.
வரும் மார்ச் 12 அன்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 10 ஆவது குழு ஆன்னி மக்ளெய்ன் உள்ளிட்ட நால்வர் அணியோடு விண்வெளி நிலையம் புறப்படுகிறது.
எடை குறைவு, எலும்புகள் வலுவிழப்பு, இரத்த அழுத்தக் குறைவு, கண்பார்வை பாதிப்பு போன்ற பல உபாதைகளை சுனிதாவும் வில்மோரும் இங்கே சமாளித்தாக வேண்டியிருக்கும் என்கிறார்கள். எலும்பு முறிவு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகமாம்.
எனவே, விண்கலம் பூமிக்குத் திரும்பியதும் அவர்கள் உடனடியாக வெளியே வராமல் நேராக மருத்துவ நிலையத்துக்கே அழைத்துச் செல்லப்படவிருக்கிறார்கள்.
மிக நீண்டகாலம் விண்வெளியில் zero gravity நிலையில் இருக்க நேர்ந்திருப்பதால் பூமிக்கு வந்ததும் இதன் வழக்கமான புவி ஈர்ப்பு விசையைச் சமாளித்தாகவேண்டும்.
"எனக்கு நடப்பது என்பதே மறந்து போய்விட்டது. முதலில் அதைப்பழகியாக வேண்டும்" என்கிறார் சுனிதா வில்லியம்ஸ்.
உலகமே அவர்கள் இருவரும் தல்லபடியாகத் திரும்பி வரவேண்டும் என்று கவலையோடிருக்கிறது
சுசீலா வில்லியம்ஸின் தாய்வழிக் கொள்ளுப் பாட்டி மாரிஜா மோஹிஞ்ஜெக் 1891 ஆம் ஆண்டில் பிறந்து ஸ்லோவேனியாவுக்கு இடம் பெயர்ந்திருக்கிறார்.
அவர் வழியில் வந்த தீபக் பாண்டியா - மோன்னி பாண்டியா இணையரின் மகள்தான் சுநீதா. 59 வயதாகிறது.
சுநிதா தம்முடைய பதினோராம் வயதில் அமெரிக்காவில் குடியேறினார். கணவர் மைக்கேல் ஜி வில்லியம்ஸ். சுனிதா இப்போதும் ஹிந்து மத வழியிலேயே வாழ்கிறாராம்.
இருமுறை தன்னுடைய மூதாதையரின் நிலமான குஜராத்துக்கு வந்திருக்கிறார். தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தில் மாணவர்களோடு உரையாடியிருக்கிறார்.
இந்திய அரசு இவருக்கு 2008 ஆம் ஆண்டில் 'பத்ம பூஷண்' விருது வழங்கிப் பெருமைப்படுத்தியது.
இவர் இந்தியா வந்தபோது பாபுஜியின் சபர்மதி ஆசிரமத்திலும் சில நாள்கள் தங்கியிருந்திருக்கிறார்.
2012 இல் வந்தபோது அஹமதாபாத் நகரிலிருந்து ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்க்க விருப்பம் தெரிவித்தாராம்.
முந்தைய விண்வெளிப் பயணங்களின்போது இவர் தன்னுடன் ஓம் வடிவம், பகவத்கீதை, உபநிஷத நூல்களை எடுத்துச் சென்றாராம்.
இம்முறை பகவத்கீதை நூலுடன் கணேசர் படம் ஒரு பாக்கெட் சமோசா இவற்றை எடுத்துச்சென்றிருக்கிறார்.
இவர்கள் பூமிக்குத் திரும்புகிற பரபரப்பான காட்சியை நேரடியாக ஒளிபரப்புவார்கள்.
நீண்ட காலத்துக்குப் பிறகு தாய்நிலம் திரும்பும் இருவரையும் வாழ்த்தி வரவேற்கலாம்.