அம்மைவடுப் பள்ளங்கள்!

அம்மைவடுப் பள்ளங்கள்!

சிறுவயதில் மாலை நேரங்களில் பாட்டியோ அம்மாவோ பிள்ளைகளுக்கு வானத்து நிலவைக்காட்டிச் சோறூட்டுகிற வழக்கம் இருந்தது.

மாதம் முழுவதிலும் இல்லாவிட்டாலும் முழுநிலவு நாளை ஒட்டி நான்கைந்து நாள்களுக்காவது அந்த நிலாச்சோறு ஆனந்தம் கிடைக்கும்.

நிலாவில் முயலைத்தான் என் அம்மா எனக்குக் காட்டியதாக நினைவு. பின் நாள்களில் யாரோ பாட்டி வடைசுடுகிற காட்சி,  வைக்கோல் போர் என்றெல்லாம் அறிமுகப்படுத்தினார்கள்.‌

தொலைநோக்கி வழியாக நிலவைப் பார்க்கும் வசதி வாய்ப்புகள் இல்லாத தலைமுறை அது!

பள்ளிப் பாடங்களில் நிலாத்தரைப் பள்ளங்களைப் பற்றிப் படித்ததும் அந்தப் படங்களைவிழி விரியப் பார்த்ததும் நினைவிருக்கிறது.

அவை முயலோ பாட்டி அத்தை வடைசுடுகிற காட்சிகளோ இல்லை என்பது புரிந்தது.

நானே 'டார்ச் லைட்'டின் முகப்புக் கண்ணாடி (லென்ஸ்) வழியே நிலவைப் பார்த்தபோது உருகிய மெழுகுத் துளிகள் சிந்தியிருப்பதுபோல் தெரிந்ததும் நினைவிருக்கிறது.

இப்போது அந்தப் பள்ளங்கள் கையருகே வந்து விட்டன. நிலவு மட்டுமில்லை, செவ்வாயிலும் புதனிலும் வெள்ளியிலும்கூட 'அம்மைவடு'ப்  பள்ளங்கள் உண்டு என்று கண்டறிந் திருக்கிறார்கள்.

பள்ளங்களுக்கெல்லாம் விதம்  விதமாகப் பெயர்களும் சூட்டியிருக்கிறார்கள்.

செவ்வாய்த் தரையில் ஜெஸரோ பள்ளத்தில் நாஸாவின் தரை ஊர்திகள் இறங்கி மேய்ந்துகொண்டிருக்கின்றன.

பட்டாம்பூச்சி மாதிரி குட்டி ஹெலிகாப்டர் (ingenuity) ஒன்றையும் பறக்க விட்டிருக்கிறார்கள்.

45 கி.மீ. குறுக்களவுள்ள ஜெஸரோ பள்ளம் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் நதிநீர் ஓட்டத்தில் நிரம்பிய ஏரியாக இருந்தது என்று சொல்கிறார்கள். 

ந்தப் பகுதியில்தான் நாஸாவின் பெர்ஸிவரன்ஸ்  ஊர்தி தரை மேய்கிறது. இதற்கு முன்னால் 'க்யூரியாஸிட்டி' ஊர்தி தரை இறங்கிய 'கேல்' பள்ளம் 154 கி.மீ. குறுக்களவுடையது.

அரிஸ்டார்ச்சஸ்
அரிஸ்டார்ச்சஸ்

ந்து கி.மீ. குறுக்களவுக்கும் கூடுதலான அளவுடைய 83,000 பள்ளங்கள் நிலவில் உள்ளன.

நிலவின் முக்கியமான பள்ளங்கள் என்று டைக்கோ, கோபர்னிக்கஸ், அரிஸ்டார்ச்சஸ், தேபிட் எனாறெல்லாம் பெயரிட்டிருக்கிறார்கள்.

நிலவின் தென்துருவப் பகுதியில் நம் பார்வை படாத நிலவின் மறுபக்கத்தில் ஐட்கேன் பேஸின் (AITKEN BASIN) என்ற பகுதியில் உள்ள பள்ளம்தான் சூரியக்குடும்பத்தில்  உள்ள பள்ளங்களிலேயே ஆகப் பெரியது  என்கிறார்கள். இதன் அகலம் 2500 கி.மீ. ஆழம் 6 முதல் 8 கி.மீ.

அண்மையில் இந்தியாவின் இஸ்ரோ விண்கலமான சந்திராயன்-3 தரையிறங்கியிருப்பது நிலவின் தென்துருவப் பகுதியில்தான். இந்தப் பள்ளத்தில் இருந்து எவ்வளவு தொலைவில் என்பது தெரியவில்லை.

செவ்வாயில் மட்டும் ஒரு கி மீ. க்கும் கூடுதலான குறுக்களவுள்ள பள்ளங்களின் எண்ணிக்கை 3,85,000 என்கிறார்கள்.

மிகப் பெரியதான உடோப்பியா பள்ளத்தின் குறுக்களவு 3300 கி.மீ. அடுத்து ஹெல்லாஸ் (2300), ஆர்கையர் (1800) ஐஸிடிஸ் (1500 கிமீ) என்று பட்டியல் நீள்கிறது.

பல யுகங்களாக விண்கற்கள் குறுங்கோள்கள் என்று இந்தக் கோள்களின் தரையில் வந்து மோதிக்கொண்டு இருப்பதால் உண்டாகும் பள்ளங்கள்தான் இவை. எப்போதோ நிலத்தடி எரிமலைக் குழம்புகள் வெளியேறியதாலும்சில பள்ளங்கள் உண்டாகி இருக்கலாம்.

கலீலியோ கலீலி
கலீலியோ கலீலி

இவற்றை crater என்று குறிப்பிட்டார்கள். எரிமலைகள் கனல் குழம்பை வெளியிடுகிற சிகரப் பள்ளத்துக்கும் இதே பெயர்தான் முதலில் வந்தது. (Vulcanic craters)

நிலாப்பள்ளங்களுக்கு crater என்று பெயரிட்டது ஒரு சுவையான கதை. மதுவையும் தண்ணீரையும் கலக்கும் கிண்ணத்துக்கு கிரேக்க மொழியில் crater என்று பெயர்.

1609 ஆம் ஆண்டில் கலீலியோ கலீலி என்ற இத்தாலிய வானியலாளர் தொலைநோக்கியை உருவாக்கி முதன் முதலாக நிலவைப் பார்த்த நாள் 1609 நவம்பர் 30.

 துவரை  ஒழுங்கான வட்டவடிவத்தில் சமதளமானது என்று கருதப்பட்டுவந்த நிலாத்தரை 'அப்படி ஒன்றும் சமதளமாக இல்லை. பாறை மேடுகளும் பள்ளங்களும் நிறைந்திருக்கின்றன' என்று முதன்முதலாக அறிவித்தவர் கலீலியோதான்.

ஆனால் எரிமலைப் பள்ளங்களை மட்டுமே அடையாளப்படுத்தும் crater என்ற சொல்லை 1791 ஆம் ஆண்டில் நிலாப்பள்ளங்களைக் குறிப்பிடவும் பயன்படுத்தியவர் ஜோஹான் ஹியரோநிமஸ் ஷ்ராட்டர் (Johann hieronymus schroter) என்பவர்.

அழகான முகத்தில் அம்மை வடுப் பள்ளங்கள் மாதிரி இவை நிலாத் தரை முழுவதிலும்  காணப்படுகின்றன.

2017 ஆம் ஆண்டுவரை பெயரிடப்பட்ட பள்ளங்கள் மட்டும் 5211 என்று கணக்கிட்டு இருக்கிறார்கள்.

அதிக அளவாக நிலவில் 1624, செவ்வாயில் 1092, புதனில் 397, வெள்ளியில் 900, பிற இடங்களில் 1198.

வானப் பொருள்களுக்கு நாம் விருப்பம்போல் எல்லாம் பெயரிட முடியாது. சர்வதேச வானியல் கழகம் (international astronomical union) என்கிற அமைப்பே இந்தப் பெயர்களுக்கு அங்கீகாரம் தரமுடியும்.

அரிஸோனா பள்ளம்
அரிஸோனா பள்ளம்

விண்கல் பள்ளங்கள் 60 கி மீ.க்குக் குறைவாக இருந்தால் உலகத்தின் நகரங்களின் பெயரை வைக்கிறார்கள்.

அமெரிக்காவிலுள்ள புகழ்பெற்ற 'அரிஸோனா பள்ளம்', நம்முடைய மத்தியப் பிரதேசத்திலுள்ள 'லோனார் பள்ளம்' மாதிரி.

கூடுதலான குறுக்கள வுள்ளவற்றுக்கு புகழ்பெற்ற அறிவியல் சாதனையாளர்கள், அறிவியல் புனைகதை ஆசிரியர்கள் என்பதுபோல் பெயர்சூட்டுகிறார்கள்.

சந்திரயான்கள் நிலவில் தரைதொட்ட புள்ளிகளுக்கு 'சிவசக்தி'. திரங்கா என்றெல்லாம் பெயரிடுவதற்குக்கூட சர்வதேச அங்கீகாரம் கிடைக்குமா என்பது தெரியவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com