உருகும் உலகம்!

உருகும் உலகம்!
Published on

இவ்வருடம் சர்க்கஸ் எகிப்திற்கு வருகிறது!

ஆம், பருவ நிலை மாற்றம் குறித்தான ஐக்கிய நாடுகள் அவையின் 197 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் 27வது மாநாடு இம்மாதம் 6 முதல் 18 வரை எகிப்தின் ஷர்ம் எல் ஷேக்கின் செங்கடல் கடற்கரை ரிசார்ட்டில் "செயல்படுத்தல்" (implementation) எனும் கருப்பொருளில் நடைபெறும் மாநாட்டைத்தான் சொல்கிறேன்.

1992இல் ஐக்கிய நாடுகள் சபையின் முதல் காலநிலை உடன்படிக்கைக்குப் பின்னர் ஆண்டுதோறும் இந்த மாநாடு நடத்தப்பட்டாலும் முன்னெடுப்புகள் என்னவோ நத்தை வேகத்திலேயே நகர்கின்றன. கொள்கை இழுபறிகள், வணிக நோக்குள்ள காய் நகர்த்தல்கள், உறுதிமொழிப் பல்டிகள், கம்பியில் நடக்கும் அரசியல் சாகசங்கள், மந்திரவித்தையாய் மறையும் வாக்குறுதிகள் என பல வீர தீர செயல்களுடன் நடந்தேறும் இந்த மகாநாடுகளை ‘சர்க்கஸ்’ என அழைக்காமல் எப்படித்தான் அழைப்பதாம்? இங்கும் கோமாளிகள் உண்டு. அதை பின்னர் பார்ப்போம்.

நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும்போது COP27 (Conference of the Parties of the UNFCCC) எனும் செல்லப் பெயரில் அழைக்கப்படும் இம்மகாநாடு எகிப்திய வெளியுறவு அமைச்சர் சமே ஷோக்ரியின் தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும். இதில் 90க்கும் மேற்பட்ட நாட்டுத் தலைவர்கள் மற்றும் 190க்கும் அதிகமான நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள். ஆனால் பல முன்னணி நாடுகளின் தலைவர்கள் இம்மகாநாட்டில் பங்கேற்கவில்லை.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உயர்ந்து வரும் பணவீக்கம் மற்றும் ஆழமடைந்துவரும் புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில், இது போன்ற உயர்மட்ட தலைவர்கள் ஒன்று கூடல் சர்வதேச காலநிலை ஒத்துழைப்பை மறுசீரமைப்பதற்கான ஒரு தருணம் என்றே கருதப்பட்டது.

ஆனால், சீனாவின் தலைவர் ஜி ஜின்பிங் மற்றும் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இம்மகாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. எனினும் COP27க்கான இந்திய குழுவுக்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையில் பங்கேற்கிறது.

அவுஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பானீஸி இந்த மகாநாடு "செயல்படுத்தல்" எனும் தொனிப்பொருளில் நடப்பதால் இங்கு தலைவர்களுக்கு வேலை இருக்காது எனக் கூறி, ஒரு சிரேஷ்ட அமைச்சரை மட்டும் அனுப்பி வைத்திருக்கிறார்.

பிரித்தானியாவின் பிரதமர் ரிஷி சுனக் முன்னர் வரமாட்டேன் என்று அடம்பிடித்து இப்போது மனம்மாறி மகாநாட்டிற்கு வந்து இறங்கியிருக்கிறார். ஆனால் அவர் கைகுலுக்கத்தான் ஆள் தேடவேண்டியிருக்கும்!

கனடா, அர்ஜென்டினா, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ மற்றும் துருக்கி ஆகியவை தேசங்களும், தலைவர்களை அனுப்பாத நாடுகள் பட்டியலில் சேர்ந்துள்ளன.

நவம்பர் 8 ஆம் தேதி அமெரிக்க இடைக்காலத் தேர்தல் நடைபெற்றதால் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் ஆரம்பம் முதல் கலந்துகொள்ளவில்லை. எனினும் பைடனும் நவம்பர் 11 ஆம் தேதி ஷர்ம் எல்-ஷேக்கிற்குச் செல்வார் என்று வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.

"சீனாவும் இந்தியாவும் இல்லாதது பேச்சுக்களில் மிகவும் தேவையான அரசியல் அழுத்தத்தை புகுத்த உதவாது" என ஐ.நா உயர் அதிகாரி ஒருவர் கூறியது உண்மையே!

காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய உலகளாவிய வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள அரசாங்கங்களால் இம்மகாநாடு பயன்படுத்தப்படுகிறது.

கடந்த வருட உச்சிமாநாட்டிற்கு பின்னதாக எகிப்தில் COP27ஐ நடத்துவதாக முடிவெடுக்கப்பட்டாலும் அந்நாட்டின் மனித உரிமைகள் மீறல்கள் காரணமாக சர்ச்சைகள் எழுந்தன. எனினும் எத்தடங்கல்களும் இன்றி இம்மகாநாடு இவ்வாரம் இங்கு தொடங்கியுள்ளது.

பருவநிலை மாற்றம் சம்மந்தமான மகாநாடுகள் ஒரு திடமான முடிவுகளை எடுக்கும் ஒன்றுகூடலாகவே இதுவரை காலமும் நடைபெற்று வந்திருக்கின்றன. காலத்தின் கட்டாயம் கொடுத்த அழுத்தத்தின் வெளிப்பாடே இது. மேலும் இங்கு எடுக்கப்படும் தீர்மானங்கள் மனிதவள மற்றும் சூழல் மேம்பாட்டை முன்நிறுத்தி எடுக்கப்படுபவை. எனவே, இந்த ஒன்றுகூடல்கள் உலக நாடுகளின் அதிலும் விசேஷமாக இளம் சந்ததியரின் கவனத்தை ஈர்க்கத் தவறுவதில்லை.

2022 ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் சாத்தியமான காலநிலை மாற்ற நடவடிக்கைகள் விவாதிக்கப்பட்டன. இதில் 18 பசிபிக் தீவு நாடுகளின் அரசாங்கங்கள் ரைசிங் நேஷன்ஸ் (Raising Nations) முன்முயற்சி எனும் தலைப்பில் தம் எதிர்காலம் பற்றி கவலையுடன் பதில் தேடி நின்றன. உதாரணமாக 1947 தொடக்கம் 2014 வரை சலோமன் தீவு நாட்டின் ஆறு தீவுகள் கடலுக்கு தீனியானது. மேலும் இந்நாடுகளின் கரையோரப் பகுதிகளை தினமும் கடல் அலைகள் தம் பசிக்கு இரையாக்கிக் கொண்டிருக்கின்றன. இச்செயல்பாடுகளின் எதிர்வினையாக உலகில் சில சகாப்தங்களில் 'காலநிலை மாற்ற அகதிகள்' (Climate Change Refugees) எனும் ஒரு புதிய வகை நாடற்றவர்கள் உருவாகத்தான் போகின்றனர்!

21ம் நூற்றாண்டின் இறுதிக்குள் பூகோள பருவநிலை மாற்றத்தினால் உலகின் கடல் மட்டம் 1990ல் இருந்ததை விட 0.44 மீட்டர் வரை உயரும் எனவும், இதன் விளைவாக அனேக சிறு தீவு நாடுகளான மாலைதீவு, ஃபீஜி, மற்றும் பசிபிக் சமுத்திர நாடுகள் முற்றாக உலகப் படத்தில் இருந்து மறைந்தே போய்விடும் ஆபத்து உள்ளது என IPCC (Intergovernmental Program on Climate Change) எனும் சர்வதேச அமைப்பு எச்சரித்துள்ளது கவலையளிப்பதே.

இதுபோன்ற அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்கும் வளரும் நாடுகளின் நிதித் தேவைகளை வளர்ந்த நாடுகள் முன்நின்று பூர்த்திசெய்ய வேண்டும் என்ற குரலும் இம்மகாநாட்டில் பலமாக ஒலிக்கும் என எதிர்பார்க்கலாம்.

அக்டோபர் 2022இல் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், 2022 இல் காணப்பட்ட காலநிலை மாற்றத்தின் தாக்கங்களால் பாக்கிஸ்தானின் பாரிய வெள்ளம், ஐரோப்பாவில் வெப்ப அலைகள், ஆஸ்திரேலிய - அமெரிக்க காட்டுத்தீ மற்றும் புளோரிடாவின் 'இயன்' சூறாவளி, போன்றவற்றைக் கருத்தில் கொண்டு மாநாட்டின் முக்கியத்துவத்தை வலியுறித்திப் பேசினார்.

உலக வெப்பமயமாதலில் மாட்டிக் கொண்டு விழிக்கும் நாடுகளில் பல மேற்கத்திய நாடுகளும் அடங்கும். ஆஸ்திரேலியாவில் இவ்வருடத்தின் ஆரம்பத்திலும் இறுதியிலும் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கில் பல நகரங்கள் முழுவதுமாக நீரில் மூழ்கின. வெள்ளத்தில் நீர் மட்டம் முன்னெப்போதும் இல்லாதவாறு உயர்ந்து சோக சாதனைகள் படைத்தன. சில நகரங்கள் ஒரே ஆண்டில் மீண்டும் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியதால் மாநில அரசு பள்ளப்பூமிகளில் உள்ள வீடு காணிகளை "திரும்ப வாங்கி" (buy back) அந்த நகரத்தையே மேட்டு நிலங்களுக்கு நகர்த்தியது. காப்புறுதிக் கம்பெனிகளும் கையை விரித்ததால் வேறு வழியின்றி இங்கு வாழ்பவர்கள் மேட்டுநிலத்தை நாடுவதே இறுதித் தீர்வானது.

புவி வெப்பமயமாதல் மானுடர்களை பாதிப்பதுடன் மட்டும் நின்று விடவில்லை. ஆஸ்திரேலியாவின் பல காய்கறி, பழவகை பண்ணைகள் வெப்பநிலை மாற்றத்தினால் முன்பு போல் தக்க சமயத்தில் பூப்பூக்க மறந்தன. இதனால் பழ உற்பத்தி வீட்சியடைந்து வருகின்றது. இதனை வெற்றிகரமாக எதிர்கொள்ள தக்காளி, ஸ்டாபெரி போன்ற செடிகளை தற்போது பல ஏக்கர்கள் விஸ்தீரணமுள்ள பசுமை வீடுகளினுள் (Green house) வளர்க்க ஆரம்பித்துள்ளனர். இதற்கு ஆகும் செலவு நிச்சயம் செடி வளர்ப்பவர்களின் கையைக் கடிக்கும் என நம்பலாம்.

வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் அடர்த்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கை வகிப்பது புதைபடிவு எரிபொருள் (Fossil fuels) பாவனையே என விஞ்ஞானம் சொல்லிற்று. எனவே, உலகநாடுகள் மாற்று எரிபொருள் தேடுதலையும் எரிபொருள் பாவனைக் குறைப்பையும் ஊக்குவிற்கும் நிலைப்பாடுகளை முடுக்கி விடத்தொடங்கின.

2050ல் பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை (Net Zero emissions target) அடைய வேண்டும் என்ற முன்னெடுப்பில் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டாலும் பல உலக நாடுகள் இந்த காலக்கெடு தமக்கு உகந்ததல்ல என முனுகத் தொடங்கியுள்ளன.

அதிகப்படியான கரியமில வாயுவை வெளியேற்றும் முதல் ஐந்து நாடுகளில் முதல் ஸ்தானத்தை வகிக்கும் சீனாவின் ஜனாதிபதி இம்மாநாட்டில் பங்கேற்கவில்லை. பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை 2060ல் தான் தம்மால் அடைய முடியும் என அடம்பிடிக்கும் நாடு சீனா என்பது அறிந்ததே. மற்ற நான்கு நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, ரஷ்யாகூட இலக்கை நிர்ணயிப்பதில் இழுபறி நிலையிலேயே உள்ளன. ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் தம் அரசு நாட்டின் இடைக்கால உமிழ்வு இலக்கான 43%ஐ 2030ல் அடையும் என அறிவித்தது மகிழ்ச்சியளிப்பதே.

கடந்த வருட COP26 மகாநாட்டில் பிரதமர் மோடி “பருவநிலை மாற்றத்துக்கு கூட்டு முயற்சி மூலமே தீர்வு காண முடியும் என்றும், 2070ல் இந்தியா பூஜ்ய உமிழ்வு இலக்கை அடையும்” என்றும் அறிவித்தார். இந்த இலக்கை அடைய 5 வாக்குறுதிகளையும் வழங்கினார். அதில் 2030 ஆம் ஆண்டளவில் 'புதுப்பித்த எரிசக்தித் திறனை' (Renewable energy) 500 கிகாவாட்டாக அதிகரிக்கவும், அது எரிபொருள் தேவையின் 50% ஐ பூர்த்தி செய்யும் என்றும் அறிவித்தார். மேலும் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது கரியமில உமிழ்வில் 1 பில்லியன் டன் அளவைக் குறைக்கும் எனவும், அது பொருளாதாரத்தின் 45% கரியமில சார்பை குறைக்கும் எனவும் கூறினார். இது வரவேற்கத்தக்க அறிவிப்பே.

புவி வெப்பமயமாவதால் பல அனர்த்தங்களை உலகு எதிர் நோக்க வேண்டி இருப்பினும் போக்குவரத்து, உற்பத்தி, கட்டுமான, விண்வெளி பயண துறை சார்ந்த நிறுவனங்கள் புதைபடிவு எரிபொருள் பாவனையை எவ்வாறு தவிர்க்கலாம் என சிந்தித்து செயலாற்ற முனைவது ஒரு வரவேற்கத்தக்க மாற்றமே.

டெஸ்லர் நிறுவனம் போக்குவரத்துத் துறையில் ஒரு முன்னோடியாக தடம் பதித்து மின் வாகனங்களை உற்பத்தி செய்வது மட்டுமில்லாமல், அவற்றின் விலையை எவ்வாறு சாமானியனும் வாங்கச் செய்யும் வண்ணம் குறைக்கலாம் என சிந்திக்கத் தொடங்கியுள்ளது.

ஐரோப்பிய யூனியன் 2035ல் பெற்றோலிய ஏரிபொருட்களில் இயங்கும் வாகனத் தயாரிப்பை முற்றாக நிறுத்தப்போவதாய் அறிவித்திருப்பது மகிழ்ச்சியான செய்தி.

புதைபடிவு எரிபொருள் பாவனைக்கு ஆப்பு வைக்கும் நாட்கள் மிக தூரத்தில் இல்லை என்பதை மசகு எண்ணையை உற்பத்தி செய்யும் அரேபிய நாடுகள் சமீபகாலங்களில் உணரத் தொடங்கியுள்ளன. கடந்த வாரம் சவுதி அரேபியாவின் தொழில் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் பந்தர் பின் இப்ராஹிம் அல்-கொராயேஃப் ஆஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்தார். இவர் வருகையின் முக்கிய நோக்கம் சவூதி அரேபியா இந்த தசாப்தத்தில் ஒரு சுரங்கத் தொழிலைக் (mining) கட்டியெழுப்பும் $170 பில்லியன் முதலீடு திட்டத்திற்கு ஆதரவளிக்க ஆஸ்திரேலிய சுரங்க கம்பெனிகளின் தொழில்நுட்ப உதவியை நாடுவதே ஆகும். தாமிரம், துத்தநாகம், பாஸ்பேட் (copper, zinc, phosphate) மற்றும் தங்கம் உள்ளிட்ட 1.3 டிரில்லியன் டாலர் மதிப்பிலான தாதுப் படிவுகள் பயன்படுத்தப்படாத நிலையில் தமது நாட்டில் இருப்பதாக சவூதி இராச்சியம் கூறுகிறது. சவூதி அரேபியா "விஷன் 2030" (Vision 2030) திட்டத்தின் கீழ், புதைபடிவ எரிபொருட்கள் உற்பத்தியை குறைத்து 'கட்டித்தங்கம் வெட்டியெடுக்கும்' துறையில் நாட்டம் செலுத்த ஆரம்பித்திருப்பது ஒரு வரவேற்கத்தக்க மாற்றமே!

இதே வேளையில் சர்வதேச வான் போக்குவரத்து சங்கம் (International Air Transportation Association - IATA) 2050 ஆம் ஆண்டளவில் பூஜ்ய உமிழ்வு இலக்கை அடையும் என அண்மையில் அறிவித்ததும் வரவேற்கத்தக்கதே.

உலக நாடுகளில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் எவ்வாறு பசுமைப்புரட்சிக்கு குழிதோண்டின என்பதையும் நாம் இங்கு பார்த்தாக வேண்டும்.

பருவ நிலை மாற்றம் குறித்தான ஐரோப்பிய நாடுகளின் எதிர்கால நிலைப்பாடுகளை அங்கு நடந்தேறும் அரசியல் மாற்றங்களே நிர்ணயிக்கும். 2015- 2020 காலப்பகுதியில் பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 'வலதுசாரி அலை' வீசத்தொடங்கி அது ஆட்சிமாற்றங்களுக்கு வித்திட்டது. Populism எனும் ஜனரஞ்சகவாதத்தின் தாக்கம் இது.

ஆட்சிமாற்றத்தினால் போலாந்து, ஆஸ்திரியா, இத்தாலி, ஹங்கேரி, சுவீடன் ஆகிய நாடுகள் வலதுசாரிகளின் பிடிக்குள் சிக்கியுள்ளன. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தல்களின் பின் ஸ்பெயின், பின்லாந்து நாடுகளும் வலதுசாரி பட்டியலில் சேர்ந்து கொள்ளும் என கணிப்புகள் கூறுகின்றன. வாக்காளர்களின் இந்த மன மாற்றத்திற்கு முக்கிய காரணம் அகதிகள் வருகையும் இதன் விழைவாக ஏற்பட்ட சமூக எதிர்ப்பலையுமே ஆகும். இந்த அலையில் கப்பலோட்டிய வலதுசாரிகள் ஆட்சிபீடத்தில் அமர்ந்து கொண்டனர். ஆனால் இவர்களில் அனேகர் புவிவெப்பமாதல், பருவநிலை மாற்றம் போன்ற முன்னேடுப்புகளில் காதல் கொள்வதில்லை. எனவே இவர்களின் அரசியல் நிலைப்பாடு பசுமை உலகை நோக்கிய பயணத்தில் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குமா என்பது ஐயமே.

மேலும் 2024ல் நடைபெற இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலும் குடியரசு கட்சியே ஆட்சியமைக்கும் என கணிப்புகள் கூறுகின்றன. இக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஐனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் 2017ல் 'காலநிலை மாற்றத்திற்கான பாரிஸ் ஒப்பந்தத்தில்' இருந்து வெளியேறியது மட்டுமல்லாமல் அமெரிக்கா உறுதியளித்த பல பில்லியன் டாலர் உதவித்தொகையையும் ரத்து செய்தது ஞாபகத்தில் இருக்கலாம்.

இன்றய உலகில், காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களை கண்டுகொள்ளாமல் கண்மூடி, 'காலநிலை மாற்ற மறுப்பாளர்களாக' ஆட்சிசெய்யும் இவர்களை கோமாளிகள் என்று அழைப்பதில் தவறில்லையே?

இதேவேளையில் லத்தீன் அமெரிக்க நாடுகள் இடதுசாரி சார்பு அரசை தம் தேசங்களில் தெரிவு செய்துள்ளனர் என்பதையும் மனதில்கொள்ள வேண்டும். கொலம்பியா, சிலி, ஹோண்டுராஸ், பெரு, பொலிவியா, ஆர்ஜென்டினா ஆகிய நாடுகள் இதற்கு நல்ல உதாரணம். ஒட்டுமொத்தமாக இந்த நாடுகளின் மக்கள் எல்லாம் இடதுசாரி ஆதரவாளர்களாக மாறிவிட்டார்கள் என எண்ணவேண்டாம். இந்நாடுகளில் முன்னர் இருந்த அரசுகள் கொரோனா அனர்த்தத்தை மிக மோசமாக கையாண்டமையே வாக்காளர்களின் இந்த மனமாற்றத்திற்கு காரணம். எது எப்படியோ, அமேசான் காடுகள் இம்மாற்றத்தினால் காப்பாற்றப்படும் என நாம் நிச்சயம் நம்பலாம்!

காடு என்றதும் ஞாபகத்தில் வருவது சிறுத்தை. அதுவும் இளம் சிறுத்தை! ஆம், பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை உலகிற்கு எடுத்துரைக்க பல பிரபலங்கள் முன் வந்திருந்தாலும் சுவீடனைச் சேர்ந்த இளம் சிறுத்தை கிரேட்டா துன்பெர்க்கை பற்றி சொல்லித்தான் ஆகவேண்டும். 19 வயதே நிரம்பிய கிரேட்டா 2018ல் அந்நாட்டு பாராளுமன்றத்திற்கு வெளிய பருவநிலை மாற்ற விழைவுகளை வலியுறுத்தும் கோஷங்களை எழுப்பி தன் நீண்ட போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

இன்று அனைத்துலகும் இளம் சமுதாயத்தின் பருவநிலை மாற்ற பிரதிநிதியாக இவரை பார்க்கின்றது. இவர் பல உலக மேடைகளில் நிகழ்த்திய அனல் பறக்கும் பேச்சுக்களை கேட்க புல்லரிக்கும்!

2019 ஐக்கிய நாடுகள் சபையின் 'பருவநிலை நடவடிக்கை' (Climate Action Summit) மகாநாட்டில் இவர் உலக அரசியல் தலைவர்களை நோக்கி "என்ன துணிவிருந்தால்....." (How dare you?) என முழங்கியதை எப்படி மறக்க முடியும்?

துன்பெர்க் தன் அன்றாட வாழ்விலும்கூட கார்பன் உமிழ்வை (carbon emission) குறைக்கும் செயல்பாடுகளை கடைப்பிடிக்கிறார். சைவ உணவை மட்டுமே உட்கொள்ளும் இவர் சுற்றாடலை மாசுபடுத்தும் விமானப்பயணங்களை தவிர்த்து சூரியசக்தியில் இயங்கும் படகு மூலம் அட்லாண்டிக் பெருங்கடலை இருமுறை கடந்து அமெரிக்காவிலும் ஸ்பெயினிலும் நடந்த காலநிலை மாற்ற மகாநாடுகளில் கலந்துகொண்டவர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

இவர் அண்மையில் வெளியிட்ட "த க்ளைமேட் புத்தகத்தில்" (The Climate Book) நூற்றுக்கும் மேற்பட்ட நிபுணர்களின் சுற்றாடல் பற்றிய பங்களிப்புகளை அவணப்படுத்தியுள்ளார். இவர்களுள் புவியியலாளர்கள், வானிலை ஆய்வாளர்கள்; பொறியாளர்கள், கணிதவியலாளர்கள்; வரலாற்றாசிரியர்கள் மற்றும் பழங்குடியின தலைவர்களும் அடங்குவர். உலகெங்கிலும் "கிரீன்வாஷிங்" (Greenwashing) எதிர்ப்பு மற்றும் அதை வெளிக்கொணர்தல் பற்றிய தனது சொந்த கதைகளையும் இவர் இப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளார்.

கிரீன்வாஷிங் என்பது ஒரு நிறுவனம் சந்தைப்படுத்தல் / விளம்பர நோக்கங்களுக்காக சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடன் இருப்பதாக கூறினாலும் உண்மையில் எந்த குறிப்பிடத்தக்க உணர்வுபூர்வமான முயற்சிகளையும் செய்யாமை ஆகும்.

இதே வேளையில் தமிழகத்தைச் சேர்ந்த வினிதா உமாசங்கரைப்பற்றியும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதற்காக 'எர்த் ஷாட்' எனும் பெயரில் பிரிட்டன் அரச குடும்பத்தின் “ராயல் அறக்கட்டளை” ஆண்டுதோறும் 5 பேரை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கி வருகிறது. கடந்த ஆண்டுக்கான அந்த பரிசுப் போட்டியின் இறுதி சுற்றுக்கு இந்தியாவைச் சேர்ந்த வினிதா உமாசங்கர் மற்றும் வித்யூத் மோகன் உட்பட 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வினிதா, சூரிய சத்தியின் மூலம் இயங்கும் தள்ளுவண்டி இஸ்திரி பெட்டி ஒன்றை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கரியின் பாவனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியே இது. இவர் பல சர்வதேச மேடைகளில் இப்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றி பேசி வருகிறார்.

எதிர்காலம் இவர்களைப் போன்ற இளம் சமுதாயத்திற்கே உரியது. சூழல் மாசுபடுதலைத் தடுக்கும் ஒரு வேட்கையில் பயணிக்கும் இவர்களின் பாதையில் குறுக்கிடும் தடைக்கற்களை அகற்றும் உன்னத பணியில் உலக நாடுகளின் தலைவர்கள் முன்னெடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் ஆதரவளிப்பது ஒவ்வொரு மானுடனின் கடமையாகும்.

கோமாளிகளுக்கு இங்கு இடமில்லை!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com