
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆரம்ப காலத் திரைப்படம் சர்வாதிகாரி. 1951ம் ஆண்டில் வெளியான இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக அஞ்சலி தேவி நடித்திருப்பார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆர். அவர்களும் அங்கு இருந்தார். ஒருகட்டத்தில் அஞ்சலி தேவி ஒரு சுற்று சுற்றி விட்டு, கீழே விழுவது போன்று அந்தக் காட்சி அமைய வேண்டும்.
அந்தக் காலத்தில் இப்போது உள்ளது போல் நவீன உடைகள் எல்லாம் கிடையாது அல்லவா? பாவாடை தாவணி அல்லது பாவாடை சட்டை போன்றுதான் அணிந்திருப்பார்கள். இயக்குநர் சொல்லிக் கொடுத்தபடி அஞ்சலி தேவியும் ஒரு சுற்று சுற்றி விட்டு, அவர் அணிந்திருந்த அந்தப் பாவாடை ஒரு வட்டமடிக்க கீழே விழுந்தார்.
அப்போது உடனே எம்.ஜி.ஆர் அவர்கள் எழுந்து வந்து இயக்குநரிடம், “இந்தக் காட்சியை தயவு செய்து ரீடேக் எடுங்கள்” என்று கூறினார். அந்தப் படபிடிப்பு தளத்தில் இருந்தவர்கள் அனைவருக்கும் வியப்பு ஏற்பட்டது. இயக்குநரும், “ஏன்? காட்சி சரியாகத்தானே இருக்கிறது. மறுபடியும் ஏன் அதைப் படமாக்க வேண்டும்?” என்று கேட்டார். அஞ்சலி தேவியும் எம்.ஜி.ஆரிடம், “சரியாகத்தானே செய்தேன். இதில் என்ன தவறு உள்ளது?” என்று கேட்டார்.
அப்போது எம்.ஜி.ஆர். சொன்னார், “அஞ்சலி ஒரு சுற்று சுற்றி கீழே விழும் சமயம் அவரது பாவாடை முழங்காலுக்கு மேலே ஏறி விட்டது. அவருக்கு என்று ஒரு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இந்தக் காட்சியைப் பார்க்கும் அவர்கள், ‘அஞ்சலி தேவியா இப்படி?’ என்று முகம் சுளிக்கக் கூடாது. அதனால்தான் சொன்னேன்” என்றார்.
அஞ்சலி தேவி அதிர்ந்து போனார். இருகரம் கூப்பி எம்.ஜி.ஆருக்கு மனதார நன்றியும் தெரிவித்தார். எம்.ஜி.ஆர். கூறியபடியே அந்தக் காட்சி மறுபடியும் படமாக்கப்பட்டது. நடிகைகளுக்கும் மானம், மரியாதை உண்டல்லவா? அவர்களின் நடை, உடையிலும் ஒரு கண்ணியம் இருக்க வேண்டும் என்று நினைத்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.