
இரும்பன் வேகமாக ஊருக்கு மேற்கே இருந்த பொத்தையை நோக்கி ஓடினான். மனதின் படபடப்பு அவன் கால்களின் அசைவில் தெளிவாகத் தெரிந்தது. ஒவ்வொரு வீச்சும் ஐந்து அடியை தாராளமாகத் தாண்டியது. ஓடிக்கொண்டே இருந்தான். கன்னக் கதுப்புகள் ஓட்டத்துக்கு ஈடு கொடுத்து தாளம் போட்டுக் கொண்டிருந்தன. அவனது ஓட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாத சிட்டுக்குருவியொன்று, பொத்தையின் தெற்கு பக்க அடிவாரத்தில் இருந்த பெரிய உடைமரத்தில் இளைப்பாறத் தொடங்கியது. உடை மரத்தை ஒட்டியபடியே இரண்டு பெரிய பனை மரங்கள் நொங்குகளையும் கடுக்காய்களையும் தாங்கிக் கொண்டிருந்தன. இதன் பாரத்தை விட அவன் மனதின் பாரம் அதிகமாக இருந்தது. அதனை சுமந்து கொண்டு ஓடினான்.
தோசை சட்டியில் போட்ட சப்பாத்தி சில இடங்களில் கருப்பு நிறமாய் மாறுவது போல 50 மீட்டர் உயர பொத்தையில் மழை நீர் உருண்டோடி ஆங்காங்கே கருப்பு நிறம் திட்டுதிட்டாக படிந்திருந்தது. சிறு வயது முதலே அடிக்கடி அங்கு சென்று வந்த பழக்கம் இருந்ததால் எளிதாக ஏறி விட்டான் இரும்பன். வேகமாக ஏறியதால் மூச்சு வாங்கியது.