
ஆடி மாதம் 15 ஆம் தேதி திருவிழா ஆரம்பமானது. அன்று சாமி ஆடும் நாள். வழக்கம் போல மிருதங்கம், நாயனம், கரகம் என கோவில் வளாகம் பரபரப்பாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக சுதி கூடி மிருதங்கமும் நாயனமும் சத்தப் போட்டியில் கலந்து கொண்டன. உற்சாகமான தென்றல் காற்றும் அந்த சத்தத்தை அப்படியே இரும்பன் வீட்டுக்கு எடுத்துச் சென்றது. மேளத்தின் ராகமும் தாளமும் வீட்டுக்குள் இருந்த இரும்பனை ஏதோ செய்தது. அவனை அறியாமலேயே வெளியே வந்தான். சத்தம் வந்த திசை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தான்.