
இரவு முழுக்க யோசித்தும் அவனுக்கு என்ன முடிவு எடுப்பது என்று தெரியவில்லை. ஊருக்கு போய் குலசாமியை பார்க்கவேண்டும் போல இருந்தது. காலையிலேயே வேலைக்கு விடுமுறை சொல்லிவிட்டு ஊருக்கு சென்று விட்டான். ரொம்ப நாளைக்கப்புறம் செல்லும் போது ஊரின் வழித்தடமே மாறிப் போயிருந்தது. வீடுகள் எதையுமே காணவில்லை. பெரிய பெரிய குழிகள்,அருகிலேயே மண் குவியல்கள் என வித்தியாசமாக காட்சி அளித்தது. பொத்தையையும் பாதி குடைந்திருந்தார்கள். மேலேறி கோயிலுக்கு சென்றான். குலசாமி பராமரிப்பு இல்லாமல் கரைந்து போயிருந்தார். அருகில் உட்கார்ந்து மெதுவாக விரல்களால் சாமியை தடவினான். எங்கிருந்தோ பறந்து வந்த ஊர் குருவி அவன் தோள் மீது உட்கார்ந்தது. கால் மாற்றி மாற்றி உட்கார்ந்து கொண்டிருந்த குருவி அவனுக்கு மசாஜ் செய்வது போல இருந்தது. பெரிய கூடை நிறைய தென்றல் காற்றை அவன் முகத்தில் அள்ளி வீசியது அருகில் இருந்த வேப்பமரம். சாரு குட்டி அவனை மடியில் கிடத்தி முகத்தை வருடி தலை முடியை கோதுவது போல சுகமாக இருந்தது அவனுக்கு. மீண்டும் குலசாமியை தடவிக் கொடுத்தான்.