
விடிகாலை நேரம். சேவல் தன் உடலில் உள்ள சக்திகள் அனைத்தையும் திரட்டி 'கொக்கரக்கோ' என்று கூவி எல்லோரையும் எழுப்ப முயன்றது. மிகவும் மெதுவாக கதிரவன் தன் கதிர்களை பரப்பிக்கொண்டிருந்தான். இருள் லேசாக விலகி வெளிச்சம் வர தொடங்கியிருந்தது. பக்கத்துவீட்டு இட்லிக்கடை ஆயா தன்னுடைய அலுமினிய இட்லி கொப்பரை, தட்டு முட்டு பாத்திரங்களை தெரு ஓரத்திலுள்ள தன் இட்லிக் கடையில் அடுக்கிக் கொண்டிருந்த சப்தத்தை கேட்டு லேசாக கண்விழித்தாள் பூக்கடை பூங்காவனம்.
கடிகாரத்தைப் பார்த்தாள். அது மணி ஐந்தரையை காட்டிக்கொண்டிருந்தது. 'நான் தொடர்ந்து ஓய்வு ஒழிச்சலின்றி ஓடிக்கொண்டிருக்கிறேன், ஆனால் நீ சௌகர்யமா படுத்து சுகமாக தூங்கி இப்பொழுதுதான் கண்விழிக்கிறாய்' என்று கேட்பதுபோல் இருந்தது. எட்டி வாசலை பார்த்தால், அங்கே சூரியனின் செங்கதிர்கள் பளிச்சென்று பரவிக்கொண்டிருந்தன.