
அன்று வெள்ளிக்கிழமை. கோவிலுக்கு வருகை தருபவர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். மற்ற நாட்களைவிட அன்று அதிகமாகவே பூ வியாபாரமிருக்கும். இந்த வெள்ளிக்கிழமை வியாபாரத்திற்காக அவளிடம் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். மற்றவர்கள் மாதத்தின் முதல் தேதியை எதிர்பார்பதுபோல், இவள் வாராவாரம் வெள்ளிக்கிழமையை எதிர்பார்ப்பது வழக்கம்.
அன்றும் அப்படித்தான். விறுவிறுப்பாக பூ விற்றுக் கொண்டிருந்தாள். மாலை ஒரு ஆறுமணி இருக்கும். கோவிலுக்கு வழக்கமாக வரும் பெண்மணி, எதிர் திசையில் காரை நிறுத்தி விட்டு சாலையை கடக்க முயற்சிக்கும் பொழுது, கண்ணிமைக்கும் நேரத்தில், கோவில் மதிலை ஒட்டியுள்ள சந்திற்குள்ளிருந்து, மோட்டார் சைக்கிளில் நண்பருடன் கைபேசியில் பேசிகொண்டு திடீரென்று சற்றுவேகமாக வந்தவன், அந்த பெண்மணியின் மீது மோத, இருவரும் கீழே விழுந்து உருண்டனர். அந்த பெண்மணியும் சாலையில் தள்ளப்பட்டார்.