“விவசாயம் மிகவும் ரிஸ்க்கான தொழில்” பசுமை புரட்சி நாயகன் எம்.எஸ் சுவாமிநாதன்!

கல்கி களஞ்சியத்தில் இருந்து..
“விவசாயம் மிகவும் ரிஸ்க்கான தொழில்”  பசுமை புரட்சி நாயகன் எம்.எஸ் சுவாமிநாதன்!
Published on

சுதந்திர இந்தியாவில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திய விவசாய வித்தகர் எம்.எஸ்.சுவாமிநாதன். விவசாயத் துறையில் இவருடைய பங்களிப்புக்காக இந்திய அரசின் ‘பத்மவிபூஷன்,’ ஃபிலிபைன்ஸ் நாட் டின் ‘ரோமன் மகசேசே’ விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகள் பெற்றவர். சென்னையில், எம்.எஸ் சுவாமிநாதன் அறக்கட்டளை (MSSRF) என தன்னுடைய பெயரில் ஓர் ஆராய்ச்சி நிறுவனத்தை ஏற்படுத்தி தொண்ணூறு வயதிலும் தொய்வில்லாமல் மாறிவரும் பருவநிலை மாறுபாடுகளுக்கு ஏற்ப தன் பணிகளை தொடர்ந்து கொண்டிருந்தார்.

98 வயதான எம்.எஸ் சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக சென்னையில் உள்ள தன்னுடைய வீட்டில் இன்று காலை காலமானார். இந்திய விவசாய துறை மட்டுமல்லாது உலகளவில் விவசாயத்தின் முக்கியத்துவதை உணர்ந்து வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தன் அறிவாற்றல் மூலமாக உலகம் முழுவதும் அறியப்பட்ட விஞ்ஞானி புகழ்பெற்றார். விவசாய துறையில் தொடர்ந்து ஆய்வுகள், விவசாயிகளுடனான கலந்துரையாடல்கள் மற்றும் பெண் விவசாயிகள் ஊக்குவித்தால், விவசாயம் மட்டுமல்லாது உணவு துறை சார்ந்து பல்வேறு துறைகளில் ஆராய்ச்சியாளர்களை கொண்டு களப்பணிகள் மேற்கொண்டு நாட்டின் விவசாயத்தை செழுப்படுத்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் மேற்கொண்ட பணிகள் ஏராளம்.

இந்நிலையில் கல்கி பத்திரிக்கைக்கு கடந்த 2015ம் ஆண்டு தீபாவளி மலருக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் விவசாயம் சார்ந்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக்கொண்டுள்ளது. பசுமை புரட்சி நாயகன் என போற்றப்படும் எம்.எஸ் சுவாமிநாதன் மறைந்துள்ள இந்நாளில் விவசாயம் குறித்த அவரின் பார்வையை மீண்டும் வாசகர்களிடம் நினைவஞ்சலியாக அன்று கல்கிக்கு அளித்த பேட்டியை மீண்டும் பிரசுரம் செய்கிறோம்.

Dr. M. S. Swaminathan
Dr. M. S. Swaminathan

2015 கல்கி தீபாவளி மலருக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் அளித்த பேட்டி இதோ..

கேள்வி:கடந்த 60 ஆண்டுகளில் இந்திய விவசாயம் எப்படிப்பட்ட முன்னேற்றத்தைக் கண்டுள்ளது?

எம்.எஸ்.சுவாமிநாதன் பதில்: “சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் இந்தியாவில் கடுமையான உணவுப் பஞ்சம் நிலவியது. பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, ‘ஒரு குடும்பத்தில் ஒரு நபர் ஒருநாள் உணவைத் தியாகம் செய்யுங்கள்’ என்று வேண்டு கோள் விடுத்தார். ‘பட்டினிச்சாவு என்பது இந்தியாவில் வெகுசகஜமான ஒன்றாக இருக்கும். இந்தியா இந்தப் பிரச்னையைச் சமாளிக்க முடியாமல் திணறும்’  என்று அமெரிக்கப் பத்திரிகைகளில் எழுதினார்கள். அந்தக் கொடுமையான கால கட்டத்தையெல்லாம் தாண்டி, உணவு உற்பத்தியை அதிகப்படுத்தி, இன்று தன்னிறைவு காணும் அளவுக்கு இந்திய விவசாயம் முன்னேறி உள்ளது. இந்திய அரசாங்கம், இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில்  சட்டம் இயற்றியுள்ளது. இது ஒரு மகத்தான சாதனை. ஆங்கிலத்தில் இதனை 'From begging bowl to bread basket' என்று குறிப்பிடுவார்கள். என் வாழ்நாளிலேயே இந்த அபார சாதனையைக் காணும் பேறு பெற்றது என் பாக்கியம் என்று கருதுகிறேன்.

கேள்வி:விவசாயத்தையும் கிராமங்களையும் விட்டுவிட்டு, விவசாயிகள் குறிப்பாக விவசாயக் குடும்ப இளைஞர்கள் வேலை தேடி நகரங்களுக்கு வருவது அதிகரித்து வருகிறதே?

எம்.எஸ்.சுவாமிநாதன் பதில்: விவசாயம் மிகவும் ரிஸ்க்கான தொழில். எனவே, இன்றைய இளைஞர்கள் அதில் ஈடுபட விரும்பவில்லை. விவசாயத்துடன்கூட பண்ணைசாரா தொழில்களையும் வளர்க்க வேண்டும். அப்போதுதான் ஆண்டு  முழுவதும் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும். அதன் காரணமாக அவர்கள் விவசாயத்திலேயே தொடர்ந்து ஈடுபடுவார்கள்.  விவசாய வேலைகளைச் சுலபமாகச் செய்துமுடிக்க கையாளு வதற்குச் சுலபமான கருவிகளை அறிமுகப்படுத்த வேண்டும். பெண்கள் எளிமையாகக் கையாளக்கூடிய கருவிகள் வரவேண்டும். இதன் மூலமாகக் கிராமப்புற மக்கள், நகர்ப்புறங்களுக்கு வேலை தேடி இடம்பெயர் வதைக் கட்டுப்படுத்த முடியும்.

கேள்வி:உணவு உற்பத்தியில் தன்னிறைவு கண்டபோதிலும் நாட்டில் ஏழைமை நிலவுகிறதே?

எம்.எஸ்.சுவாமிநாதன் பதில்:இங்கே உணவுப் பொருளுக்குப் பஞ்சமில்லை. தராளமாகக் கிடைக்கிறது. ஆனால், அதை வாங்கும் சக்தி எல்லா மக்களுக்கும் இல்லை என்பதுதான் இதற்குக் காரணம்.

கேள்வி:ஏராளமான உணவு தானிய உற்பத்தி இருந்தாலும், கிடங்குகளில் கணிசமான அளவு தானியம் வீணாகிறதே? இதைத் தடுக்க வழி என்ன?

எம்.எஸ்.சுவாமிநாதன் பதில்:மொரார்ஜி தேசாய் காலத்திலேயே நான் இது பற்றி அவரிடம் பேசி இருக்கிறேன். விவசாயத்துக்கு பயனற்ற நிலங்களில் உணவு தானியங்களைச் சேமிக்க போதுமான அளவு தானிய சேமிப்புக் கிடங்கு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று  கூறினேன். ஆனால், சேமிப்புக் கிடங்கு வசதிகள் அதிகரிகப்பட வேண்டும்.”

கேள்வி: விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க வழியே இல்லையா?

எம்.எஸ்.சுவாமிநாதன் பதில்: கடன் தொல்லையில் சிக்கிய விவசாயிகளுக்கு மனநல ஆலோசனை அளித்து, அதன் மூலமாக அவர் மனத்தில் தற்கொலை எண்ணம் வராமல் தடுக்க வேண்டும். விவசாய விஞ்ஞான கேந்திரம் போன்ற அரசு மையங்களிலும், கிராம அளவில் பஞ்சாயத்துக் களிலும் இதற்காக உதவிகள் கிடைக்க வழி செய்ய வேண்டும். விவசாயத்தில் ஏற்படும் எதிர்பாராத நஷ்டங்களிலிருந்து பாதுகாக்க சிறந்த இன்சூரன்ஸ் திட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும். கிராமப் பஞ்சாயத்து அளவில் நிதியை ஏற்படுத்தி, கடனிலிருந்து மீள முடியாது தவிக்கும் விவசாயிகளுக்கு வட்டி இல்லாத கடன் வழங்கி உதவ வேண்டும்.

கேள்வி: பயிர்களுக்கு மிக அதிக அளவில் ரசாயன உரமும், பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்தி, உணவை  விஷமாக் குவதாகக் குற்றம் சாட்டப்படுகிறதே?

எம்.எஸ்.சுவாமிநாதன் பதில்: பயிர்களுக்கு ரசாயன உரமும், பூச்சிக்கொல்லிகளும்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை.  இயற்கை உரமும், வேம்பு போன்ற இயற்கை பூச்சிக் கொல்லிகளையும் கூடப் பயன்படுத்தலாமே.

கேள்வி: சமீபகாலமாகப் பிரபலமாகி வரும் இயற்கை விவசாயம் பற்றி உங்கள் கருத்தென்ன?

எம்.எஸ்.சுவாமிநாதன் பதில்: ஒரு டன்  நெல் விளைய 20 கிலோ நைட்ரஜன் அவசியம். அது இயற்கை உரத்திலிருந்து கிடைத்தால் நல்லதுதானே? ஆனால் விவசாயிகளுக்குத் தேவை யான இயற்கை உரங்கள் போதிய அளவில் கிடைப்பதில்லை. ஆகவேதான் ரசாயன உரங்களைப் பயன் படுத்த வேண்டி உள்ளது. ரசாயன உர உற்பத்திக்குக் கொடுப்பதைப் போல, இயற்கை உர உற்பத்திக்கும் அரசாங்கம் மானியம் அளிக்க வேண்டும்.

கேள்வி: மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் குறித்த சர்ச்சை பற்றி உங்கள் கருத்து என்ன?

எம்.எஸ்.சுவாமிநாதன் பதில்: மரபணு மாற்ற முறை மூலமாகப் புதுமைகள் செய்ய முடியும். பல்லாண்டுகளுக்கு முன்பாகவே, நாமே உருளைக்கிழங்கில் அதைச் செய்திருக்கிறோம். ஆனால், மரபணு மாற்றம் செய்த பி.டி. பருத்தியை புழு தாக்காது என்று சொல்லி, அதிக விலைக்கு விற் கிறார்கள். ஆனால், அதுவும் புழு தாக்குதலுக்குள்ளாகி, விவசாயிகளை சிக்கலில் சிக்க வைத்துவிடுகிறது என்பது வேதனையான உண்மை.

-சந்திரமெளலி

கல்கி 15-11-2015

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com