சிரித்து வாழ வேண்டும்: பகுதி 2 - குகனுக்கு மரியாதை

நகைச்சுவை நடிகர் நாகேஷ் கல்கி வார இதழில் எழுதிய 'சிரித்து வாழ வேண்டும்' தொடரின் சுவாரஸ்யமான நாடக மற்றும் சினிமா அனுபவங்களைப் படியுங்கள்.
நடிகர் நாகேஷ் தொடர் - சிரித்து வாழ வேண்டும்
நடிகர் நாகேஷ் - எம்.ஜி.ஆர்
Updated on
Kalki Strip
Kalki Strip

2003 ஆம் ஆண்டு 03.08.2003 முதல் கல்கி வார இதழில், நடிகர் நாகேஷ் அவர்கள் 'சிரித்து வாழ வேண்டும்’ என்ற தலைப்பில் கட்டுரைகளை தொடர்ந்து பல வாரங்கள் எழுதினார். சுவாரசியமான சம்பவங்கள், நாடகம் சினிமா சார்ந்த பல அனுபவங்கள், சிரிக்க சிந்திக்க தகவல்கள் கொண்ட அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...

தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.

சந்தா செலுத்த...

சிரித்து வாழ வேண்டும்: பகுதி 2

குகனுக்கு மரியாதை

நாகேஷ்

நாடகத்தில் ஒரே ஒரு காட்சியில் சில நிமிடங்கள் மட்டும் வயிற்று வலிக்காரராக வந்த என்னைச் சிறந்த நடிகன் என்று பாராட்டி, பரிசுக் கோப்பை அளித்து கெளரவித்த வி.ஐ.பி. யார் தெரியுமா?

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்தான்.

அதற்கு முன் நான் எம்.ஜி.ஆரைப் பார்த்தது இல்லை. எனவே, அவரை எனக்கு அடையாளம் தெரியவில்லை. எம்.ஜி.ஆர். எனக்குப் பரிசு கொடுத்தபோது அதை வாங்கச் சென்ற நான், என் பக்கத்தில் இருந்த இன்னொரு நடிகரிடம், 'இவரு யாரு?' என்று கேட்ட எனது அறியாமையை நினைத்து, நான் பலமுறை சிரித்திருக்கிறேன்.

அன்று இரவு படுத்தவுடன், சுமார் ஒன்றரை மாதத்துக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் என் மனத்திரையில் ஓடியது. வழக்கம்போல, நான் ரயில்வே ஆபீசிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தேன். வழியில் ஒரு கூரைக் கொட்டகை. வெளியில் ஒரு போர்டு. 'தேவி நாடக சாலை' என்று அதில் எழுதப்பட்டிருந்தது. உள்ளே சிலர் உரக்கப் பேசிக்கொண்டிருப்பது வெளியில் கேட்டது.ஏதோ நாடகத்தின் ஒத்திகை நடந்துகொண்டிருந்தது.

நாடகத்தின் ஒரு கதாபாத்திரம் பேசிய வசனங்கள் எனக்கு ரொம்பவும் பரிச்சயமானவைபோல இருக்கவே, வசனங்களைக் கவனித்தேன்.

உள்ளே நடப்பது ராமாயண நாடக ஒத்திகை என்பதும், வசனம் பேசிக்கொண்டிருக்கும் கதாபாத்திரம் குகன் என்றும் நான் கண்டுபிடித்துவிட்டேன். அந்தக் கொட்டகையின் நுழைவாயிலுக்குப் போய் உள்ளே எட்டிப் பார்த்தேன்.

நாற்காலியில் ஒருவர் உட்கார்ந்துகொண்டிருந்தார். எதிரே நடிகர்கள் நின்று கொண்டிருந்தனர். அதில் ஒடிசலான ஒருவர் நின்று கொண்டு "அஞ்சன வண்ணன்.... நின் ஆருயிர் நாயகன்' என்று கம்பராமாயணத்தில் குகன் சொல்கிற வரிகளைப் பேசிக்கொண்டிருந்தார். “ஓ.கே... எங்கே இன்னொரு தடவை சொல்லுங்கள்" என்று அவரை இயக்கிக்கொண்டிருந்தார் நாற்காலிக்காரர்.

குகனாக நடித்தவர் வசனம் பேசக் கேட்ட எனக்கு, உடம்பெல்லாம் பற்றி எரிந்தது. ஒரு கட்டத்தில், இனியும் பொறுத்துக்கொள்வது முடியாத காரியம் என்று தோன்றியது.

நாற்காலியில் அமர்ந்திருந்தவரை நெருங்கினேன். சில நிமிடங்கள் காத்திருந்துவிட்டு, மென்மையான குரலில் "குகன் எத்தனை கம்பீரமான கதாபாத்திரம்! கம்பராமாயணத்து வரிகளை, குகன் பாத்திரம் சொல்கிறபோது குரலில் கம்பீரமான ஏற்ற, இறக்கம் வேண்டாமா? என்ன அற்புதமான வரிகள் அவை! குகனைப் போன்ற ஆஜானுபாகுவான பர்சனாலிடி இல்லாமல் போனாலும், வசனம் பேசுவதிலாவது வீரம் வேணாமா? இவர் என்னவோ, பஜனை கோஷ்டியில் கடைசி வரிசை ஆசாமி, கடனே என்று பாடுவதைப்போல வசனம் பேசுகிறாரே!" என்றேன்.

நடிகர் நாகேஷ் தொடர் - சிரித்து வாழ வேண்டும்
நாகேஷ் தொடர்

சட்டென்று என்னைத் திரும்பிப் பார்த்தவர், ஒன்றும் பேசாமல் இருந்தாலும், அவரது பார்வைக்கு 'நீ யார்? உனக்கு இங்கே என்ன வேலை! உனக்கு நாடகம், நடிப்பு பற்றி என்ன தெரியும்? பெரிசாய்க் குறை கண்டுபிடிக்கிறாயே!' என்று அர்த்தம் புரிந்துகொள்ள முடிந்தது. அடுத்த விநாடியே அவர் என்னை அலட்சியப்படுத்திவிட்டு, அந்த நடிகரைப் பார்த்து, 'நீங்க வசனம் பேசுங்க!" என்றார்.

'பளார்' என்று அறைந்ததுபோல உணர்ந்தேன். அந்த நடிகர் டைரக்டருக்கு மிக வேண்டியவராக இருக்கலாம்; நாடகத்துக்கு நிதி உதவி செய்திருக்கலாம்; அல்லது நடிக்கத் தகுதி இல்லாத அவருக்கு, நடிக்க வாய்ப்புக் கிடைக்க, திறமை தவிர வேறு ஏதாவது ஒன்றுதான் காரணமாக இருக்கும் என்று மட்டும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது. அதற்கு மேல் அங்கே நிற்கப் பிடிக்காமல் வெளியேறினேன்.

தெருவோடு போய்க்கொண்டிருந்த என் கவனத்தை ஈர்த்தது, உள்ளே போய், வசனம் பேசப்பட்ட முறையைப் பார்த்து, கோபப்பட்டு விமர்சனம் செய்யத் தூண்டியது எது? கம்பராமாயணத்தில் ராமன், லட்சுமணனைவிட குகன் என்கிற கதாபாத்திரத்தின் மீது எனக்கு இருந்த மிகவும் ஆழமான மதிப்பும், மரியாதையும்தான் என்றால் நீங்கள் நம்பமாட்டீர்கள். ஆனால் அதுதான் நிஜம். எனக்கு குகன் மீது அப்படி ஓர் அபார மதிப்பு ஏற்படக் காரணமானவர், நான் படித்த பள்ளிக்கூடத்தின் தமிழாசிரியர்தான்!

நான் தாராபுரம் போர்டு ஹை ஸ்கூல் மாணவன். அங்கே எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களில், இன்றைக்கும் என் நெஞ்சில் நிறைந்து இருப்பவர் தமிழாசிரியர்தான்!

கம்பீரமான தோற்றம்; ஆழமான தமிழ்ப்புலமை. மாணவர்கள் மீது ஆழ்ந்த அக்கறை. படு சுவாரசியமாகப் பாடம் எடுப்பது எப்படி, என்று எல்லா ஆசிரியர்களுக்கும் பாடம் எடுக்கும் தகுதி அவருக்கு உண்டு என்றால் அது மிகையில்லை. அதுவும் அவர் கம்பராமாயணம் நடத்தினால் நேரம் போவதே தெரியாது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், கம்பராமாயணத்தில் அவர் குகப்படலம் நடத்தியதைக் கேட்டது முதல்தான் எனக்கு குகன் மீது அப்படி ஒரு பிடிப்பே ஏற்பட்டது.

ராமனை நாட்டுக்குத் திரும்ப அழைத்துப் போக வரும் பரதனை, போரிட வந்திருப்பதாக, தவறாக குகன் நினைத்துப் பேசுகிற காட்சியை அவர் நடித்து, நடத்தியது இன்னமும் என் நெஞ்சில் பசுமையாக இருக்கிறது. ஓர் இடத்தில், (மக்கள்) 'நாய்குகன் என்று என்னை ஏசாரோ?" என்று வரும். அதைச் சொல்கிறபோது, காலால் தரையை ஓர் உதை உதைத்துவிட்டு, தலையைக் கம்பீரமாக உயர்த்திச் சொல்கிறபோது, ஆஜானுபாகுவான அவரது தோற்றமும், நடிப்பும், குகனை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிடும்.

அப்படி அனுபவித்து குகப்படலம் படித்தவன் நான். யாரோ ஒரு ஒல்லிக்குச்சி உடம்புகொண்ட ஆசாமி, குரலில் ஏற்ற, இறக்கமில்லாமல் கம்பரது வரிகளைச் சொல்வதை எப்படிச் சகித்துக்கொள்ள முடியும்? எனவேதான், அந்த நாடகத்துக்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லாவிட்டாலும் கூட, வலியப் போய் விமர்சனம் செய்தேன்!

அங்கே நான் உதாசீனப் படுத்தப்பட்டதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அதே சமயம் அங்கே நின்று பிரச்னை கிளப்பவும் எனக்கு விருப்பமில்லை. எனது தார்மிகக் கோபத்துக்கு, ஆக்கபூர்வமான ஒரு வடிகால் தேடினேன். அதனால்தான் நான் வேலை பார்த்து வந்த ரயில்வே அலுவலகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கும் சென்று, இங்கே கல்சுரல் கிளப் ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டேன். எனது தேடல் என்னை ம.ராவிடம் கொண்டு சேர்த்தது.

நடிப்புக்காக பரிசு வாங்கிவிட்டேனே யொழிய, நடிப்புக்கும் எனக்கும் துளியும் சம்பந்தமே கிடையாது. பள்ளிக்கூட நாடகத்தில் நடித்த அனுபவம், அல்லது சினிமாக்கள் நிறைய பார்த்து, நாமும் சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆசை வந்தது என்பதெல்லாம் இல்லை. எங்கள் குடும்பம் ரொம்பவும் ஆசாரமான கன்னடம் பேசும் பிராமணக் குடும்பம். அப்பாவுக்கு ரயில்வேயில் வேலை. பூர்வீகம் மைசூர். கர்நாடக மாநிலம் அரிசிகேராவில் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்தார். என் அப்பா. அம்மாவுக்கு, தன் குடும்பம்தான் உலகம். நன்றாகச் சமைப்பது, பூஜைகள் செய்வது, குடும்பத்தைப் பராமரிப்பது போன்ற விஷயங்களுக்காகவே தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக்கொண்ட பாரம்பரிய அம்மா அவர்.

ஆனால், என்னை வளர்த்தது எல்லாம் என்னுடைய அக்கா கெங்கு பாய்தான். ஒரு தாயைப் போன்ற பாசத்தை என் மீது பொழிந்தவர் என் அக்கா. தொண்ணூறு வயசாகிவிட்டது. இன்னமும் இருக்கிறார்.

என் அப்பா ரொம்பக் கண்டிப்பானவர். நான் நன்றாகப் படிக்கணும்; நல்ல மார்க் வாங்கணும் என்று எப்போதும் சொல்லும் டிபிகல் அப்பா.

தாராபுரத்தில் அக்ரஹாரத்தில் கடைசி வீடு எங்களுடையது. எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் ராமகாந்த ராவ் என்று ஒருத்தர் இருந்தார்.

பள்ளிக்கூட ஆசிரியர். அவருக்கு கோபால் என்று பையன். தினமும், பையனை விடியற்காலை நாலரை மணிக்கெல்லாம் எழுப்பிவிட்டு விடுவார். பையனும், எழுந்தவுடன் சத்தம் போட்டுப் படிக்க ஆரம்பித்து விடுவான். நிசப்தமான விடியற்காலை நேரத்தில், எதிர்வீட்டு கோபால் படிப்பது ஊருக்கே கேட்கும். எதிர்வீட்டில், விடியற்காலை எழுந்து, சப்தம் போட்டு ஒரு பையன் படிக்கிறான் என்றால், மற்ற அப்பாக்கள் சும்மா இருப்பார்களா? என் அப்பாவும் என்னை தினமும் நாலரை மணிக்கு எழுப்பி விட்டுவிடுவார். எழுந்திருக்காவிட்டால் அடிதான்!

எதிர்வீட்டுப் பையன் அக்பர், அசோகர் என்று உரக்கப் படிப்பது, எனக்குப் படிக்கத் தொந்தரவாக இருக்கும் என்பது ஒரு பக்கம். 'மனசுக்குள்ளேயே படிக்காதே! உரக்க வாய்விட்டு சத்தம் போட்டுப்படி... இல் லைன்னா நீ முழிச்சிக்கிட்டு இருக்கியா? தூங்கிட்டியான்னு எனக்குத் தெரியாது" என்ற அப்பாவின் தொல்லை இன்னொரு பக்கம். எனவே, எதிர்வீட்டு சத்தத்தைவிட அதிகக் குரல் எடுத்து (a+b)2 = a²+2ab+b²' என்று நான் உரக்க சொல்லிக்கொண்டிருப்பேன்.

இந்த மாதிரிக் கூத்து பல நாள் அதிகாலையில் நடந்திருக்கிறது. நான், கோபால் உட்பட, எங்கள் தெருவிலிருந்து ஏழெட்டுப் பேர் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை எழுதினோம்.

ரிசல்ட்?

பரீட்சை எழுதிவிட்டு நான் காத்திருந்தது மாதிரி நீங்களும் ஒரு வாரம் காத்திருங்களேன்...!

(சிரிப்பு தொடரும்...)

படங்கள்: யோகா

கல்கி வார இதழ் - 10.08.2003

குறிப்பு: இக்கட்டுரை கல்கி குழுமத்தின் அச்சுக் காப்பகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இதில் உள்ள தகவல்கள் முதலில் வெளியான காலகட்டத்தைச் சார்ந்தவை. 
logo
Kalki Online
kalkionline.com