

2003 ஆம் ஆண்டு 03.08.2003 முதல் கல்கி வார இதழில், நடிகர் நாகேஷ் அவர்கள் 'சிரித்து வாழ வேண்டும்’ என்ற தலைப்பில் கட்டுரைகளை தொடர்ந்து பல வாரங்கள் எழுதினார். சுவாரசியமான சம்பவங்கள், நாடகம் சினிமா சார்ந்த பல அனுபவங்கள், சிரிக்க சிந்திக்க தகவல்கள் கொண்ட அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
சிரித்து வாழ வேண்டும்: பகுதி 3
மார்க் வாங்கினால் புத்திசாலியா?
நாகேஷ்
எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை ரிசல்ட் வெளியானது. விடியற்காலையில் எழுந்து, சப்தம் போட்டுப் படித்து, ஊரை எழுப்பி, எனக்கும் திட்டு வாங்கிக்கொடுத்த எதிர் வீட்டுப் பையன் கோபாலைத் தவிர, எங்கள் தெருவிலிருந்து பரீட்சைக்குப் போன நாங்கள் எல்லோரும் பாஸ் பண்ணிவிட்டோம்.
நான், எப்போதுமே புத்திசாலி மாணவர்களில் ஒருவனாக இருந்தேன். ஆனால், வீட்டில், தினமும் புத்தகத்தை வைத்துக்கொண்டு படித்ததையே திரும்பத் திரும்பப் படித்துக்கொண்டிருப்பது என்பது எனக்கு வேப்பங்காய். வகுப்பில், ஆசிரியர் பாடம் நடத்துகிறபோது, ரொம்பக் கூர்ந்து கவனிப்பேன். அப்படி என் மனத்தில் நான் பதிய வைத்துக் கொள்ளுகிற பாடங்களும் சரி, மற்ற விஷயங்களும் சரி, எனக்கு மறக்கவே மறக்காது.
என் புத்திசாலித்தனம் ஒரு பக்கம் இருந்தாலும், நான் வகுப்பில் ரொம்ப விவகாரமான மாணவன். பரீட்சையில் ‘திருக்குறளை எழுதியது யார்?' என்று கேள்வி கேட்டால், ‘ஒரு புலவர்' என்று பதில் எழுதுவேன். ஆசிரியர் விடைத்தாள்களைக் கொடுக்கிறபோது என்னைக் கூப்பிடுவார். போய் நிற்பேன்.
"திருக்குறளை எழுதினது திருவள்ளுவர் என்று உனக்குத் தெரியாதா?"
"தெரியும்."
"அப்புறம் ஏன் ஒரு புலவர் என்று பதில் எழுதியிருக்கிறாய்?"
"ஏன் சார்! திருவள்ளுவர் ஒரு புலவர் இல்லையா?"
“அவர் புலவர்தான். ஆனால் திருவள்ளுவர் என்று ஏன் பதில் எழுதவில்லை?"
''நீங்க திருக்குறளை எழுதியவர் யார்? என்றுதானே கேள்வி கேட்டிருக்கீங்க! எழுதியவர் பேர் என்னன்னு கேட்கலையே! அப்படிக் கேட்டிருந்தா நானும் திருவள்ளுவர்னு எழுதியிருப்பேன்!" என்று இடக்காக பதில் சொல்லுவேன்.
இன்னொரு நாள், ஆசிரியர் போர்டில் ஏதோ எழுதின சமயம், மாணவர்கள் எல்லாம் தங்களுக்குள் ஏதோ கிசுகிசுத்துக் கொண்டனர். என்ன விஷயம் என்று அவர் கேட்டபோது, யாரும் பதில் சொல்லவில்லை. அந்தச் சமயம் பார்த்து நான் 'களுக்' என்று கொஞ்சம் சிரித்துவிட, என்னைப் பிடித்துக்கொண்டார்.
"எதற்காகச் சிரித்தாய்?"
"உங்க சட்டையில் இங்க் கறை பட்டிருக்கிறது."
''ஓ! அதுவா! பேனாவுக்கு இங்க் போட்டபோது, கைதவறி சட்டையில் பட்டிருக்கும்?"
எனக்கு மறுபடியும் சிரிப்பு வந்துவிட்டது.
"எதற்காகச் சிரிக்கிறாய்?"
"சாதாரணமாய் பேனாவுக்கு இங்க் போட்டிருந்தால், சட்டையின் முன் பகுதியில்தான் கறை பட்டிருக்கும். உங்கள் சட்டையிலோ முதுகுப் பக்கம் கறை இருக்கிறது. அப்படியென்றால் விசித்திரமாக வளைந்து, நெளிந்தல்லவா நீங்கள் இங்க் போட்டிருக்க வேண்டும். நீங்கள் வளைந்து, நெளிந்து இங்க் போடுவதாக கற்பனை செய்து பார்த்தேன். சிரிப்பு வந்துவிட்டது" என்று விளக்கம் நான் கொடுக்க, அவர் எனக்கு கொடுத்ததென்னவோ ஒரு பிரம்படி!
இப்படிப் பள்ளிக்கூட நாட்களில் நிறைய சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஆனாலும், நான் வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்துகிற சமயத்தில் ரொம்ப கவனமாய்க் கேட்டுக் கொள்ளத் தவற மாட்டேன். பரீட்சைகளையும் நன்றாக எழுதி, நல்ல மார்க் வாங்கி விடுவேன். வகுப்பில் நான் கவனமாய் இருந்தேன் என்றால், அதற்கு, ஆசிரியர்கள் எல்லாரும் அவ்வளவு சுவாரசியமாக, மிகுந்த ஈடுபாட்டோடு பாடம் நடத்தினார்கள் என்பதுதான் முக்கியக் காரணம்.
வகுப்பில் புத்திசாலிப் பையன். துறுதுறு என்று இருப்பேன் என்றாலும், மிகவும் ஆசார, அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்கிற குடும்பம் என்பதால், வீட்டில் பரம சாதுவாக இருப்பேன்.
காலையில் எழுந்தவுடன், அம்மாவுக்காக ஒரு பித்தளைக் குடத்தை எடுத்துக்கொண்டு, அதன் கழுத்துப் பகுதியில் கொஞ்சம்போல புளியை ஒட்ட வைத்துக் கொள்ளுவேன். ஊரை ஒட்டி, ராஜ வாய்க்கால் என்று ஒரு ஒடை. அங்கே போய், பாறைமீது, கீழே கிடக்கும் செங்கல்லை எடுத்து உரசினால் பொடியாக செங்கல் தூள் வரும். அதை அப்படியே விரலில் எடுத்து, பல் துலக்கி, முகம் கழுவிக்கொள்ளுவேன். போகிறபோது, அம்மாவின் புடைவை ஒன்றை எடுத்துக்கொண்டு போய், அதைத் தோய்த்து உலர்த்திவிட்டு, புளியைப் போட்டு, குடத்தை 'சும்மா' கண்ணாடிபோல பளபளவென்று தேய்த்து வைத்துவிட்டு, வாய்க்காலிலேயே குளித்து முடிப்பேன். பின் குடத்தில் தண்ணீர் பிடித்துக்கொள்வேன். உலர்ந்த புடைவையையும், தேய்த்த குடத்தில் பிடித்த தண்ணீரையும் எடுத்துக்கொண்டு புறப்படுவேன். பூஜைக்கும், சமையலுக்குமான தண்ணீர் அது என்பதால், மான் தோல் பைபோல ஒன்றை எடுத்துக்கொண்டு போய், அதற்குள் தண்ணீர்க் குடத்தை வைத்து, அதைத் தலையில் சுமந்துகொண்டு வருவேன்.
ராஜ வாய்க்காலில் நீர் வற்றிய நாட்களில், ஆறு மைல் தூரம் வரப்புகளின் மீது நடந்து அமராவதி ஆற்றுக்குப் போய், அம்மாவின் புடைவை மற்றும் துணிகளைத் துவைத்துக்கொண்டு, குடத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வருவது வழக்கம்.
அப்போது நான் அணிந்த டிராயர், சட்டைகள்கூட ஒன்று சிவப்பில் இருக்கும்; இல்லை பச்சை நிறத்தில் இருக்கும். காரணம், கர்நாடக மாநிலம் அரிசி கேராவில் ஸ்டேஷன் மாஸ்டர் பணியில் இருந்த என் அப்பா, ரயிலை நிறுத்த, புறப்பட அசைக்கிற கொடி தைக்கிற துணியை எடுத்துக்கொண்டு வந்து எனக்குச் சட்டை, டிராயர் தைத்துக் கொடுத்து விடுவார்.
ஸ்கூல் விட்டு வந்தவுடன் விளையாடலாம். ஆனால், தெருவிளக்குகள் எரிய ஆரம்பித்த மறு நிமிடம் வீட்டில் இருக்க வேண்டும். கைகால் கழுவிக்கொண்டு ஹோம் ஓர்க் இருந்தால் முடிக்க வேண்டும். முனிசிபாலிடி சங்கு பிடிக்கிறவரை படிக்க வேண்டும். அடுத்து இரவுச் சாப்பாடு. சாப்பிட்டுவிட்டுப் படிக்கலாம், அல்லது தூங்கப் போய்விட வேண்டும். இதுதான் தாராபுரத்தில் ஸ்கூல் வாழ்க்கை.
பரீட்சைகளில் நல்ல மார்க் வாங்கினேன் என்றாலும் எனக்குப் பரீட்சை என்றால் பயமோ, பரீட்சை முறைமீது அபார மதிப்போ கிடையாது. எண்பது, நூறு பக்கங்களில் ஒரு புஸ்தகம். அதில் உள்ளதை வருஷம் முழுக்கச் சொல்லித் தந்து, வருஷக் கடைசியில் பரீட்சை. அந்த புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை, புரிந்தாலும் சரி, புரியாவிட்டாலும் சரி, நெட்டுருப் போட்டு, அப்படியே பரீட்சைப் பேப்பரில் சுக்கி, மார்க் வாங்கிவிட்டால் ஒரு பையன் புத்திசாலி. மார்க் வாங்காதுபோனால் படிக்க லாயக்கில்லாத முட்டாள், என்று முத்திரை குத்தப்படுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது.
ஆனால் என்ன செய்ய? மார்க் வாங்கினால்தான் புத்திசாலி என்று அங்கீகாரம். இஞ்சினியரிங், மருத்துவக் கல்லூரிகளில் சீட் என்று இன்றைக்கும்கூட அதே நிலை நீடிப்பது என்பது பரிதாபமான விஷயம். படி படி என்று குழந்தைகளைப் பெற்றோர்கள் வாட்டி வதைப்பதைப் பார்க்கிறபோது, எனக்கு ரொம்பப் பாவமாக இருக்கிறது.
படிக்கிற காலத்தில் என்னுடைய பர்சனாலிடி பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும். வெள்ளைக்காரன் போல வெளிறிய கலர் இல்லை, செக்கச் சிவந்த நிறம். தலையில் கருகருவென்று அடர்த்தியான முடி, நெற்றியில் புரளும். என்னைப் பார்க்கிற யாரும், அட! பையன் பளீர்னு ரொம்ப அழகா இருக்கானே! என்று வாய்விட்டே சொல்லிவிடுவார்கள். அல்லது குறைந்தபட்சம் மனதுக்குள் நினைத்துக்கொள்ளுவார்கள். இதனால் எனக்கே என் அழகு பற்றி ஒருவித கர்வம் உண்டு.
யாராவது "நாகேஸ்வரா!" என்று என்னைப் பேர் சொல்லி அழைத்தால், 'என்ன?' என்று கேட்கமாட்டேன். ஸ்டைலாகத் தலையைத் திருப்பி, ஒரு பார்வை பார்ப்பேன்! அதற்கு 'ம். என்ன?' என்று அர்த்தம். அப்படி ஒரு திமிர் என்றுகூடச் சொல்லலாம். என் அக்காகூட, 'நாகேஸ்வரா! நீ சிரிக்கிறபோது கன்னத்தில் எத்தனை அழகாய் குழி விழுகிறது' என்று சொல்லி சந்தோஷப்படுவார்.
ஆனால், "அழகு என்பது நிலையில்லாதது! பின்னால், என் கன்னத்தில் மட்டுமில்லை. முகம் முழுக்க சென்னை மாநகரத்துச் சாலைகள் போல குழிகள் விழப்போகின்றன. நான் சிரித்தால் மட்டுமில்லாமல், எப்போதும் நிரந்தரமாய் அவை அங்கே குடியிருக்கப் போகின்றன" என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
(சிரிப்பு தொடரும்...)
படங்கள்: யோகா
கல்கி வார இதழ் - 17.08.2003
குறிப்பு: இக்கட்டுரை கல்கி குழுமத்தின் அச்சுக் காப்பகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இதில் உள்ள தகவல்கள் முதலில் வெளியான காலகட்டத்தைச் சார்ந்தவை.