

2003 ஆம் ஆண்டு 03.08.2003 முதல் கல்கி வார இதழில், நடிகர் நாகேஷ் அவர்கள் 'சிரித்து வாழ வேண்டும்’ என்ற தலைப்பில் கட்டுரைகளை தொடர்ந்து பல வாரங்கள் எழுதினார். சுவாரசியமான சம்பவங்கள், நாடகம் சினிமா சார்ந்த பல அனுபவங்கள், சிரிக்க சிந்திக்க தகவல்கள் கொண்ட அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
சிரித்து வாழ வேண்டும்: பகுதி 4
"நீ திருந்தவே மாட்டே!"
நாகேஷ்
எஸ்.எஸ்.எல்.சி. பாஸ். அடுத்தபடியாய் காலேஜ்தானே! என் அண்ணன் கோயம்புத்தூரில் டெலிபோன் துறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். நான் கோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி.ஆர்ட்ஸ் காலேஜில் கணக்கு, பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி கொண்ட முதல் குரூப்பில் இன்டர் மீடியட் சேர்ந்தேன்.
கல்லூரி வாழ்க்கையிலும் கலகலப்புக்குப் பஞ்சமில்லை. பார்க்க நல்ல பர்சனாலிடி என்பதால், கல்லூரி மாணவர்கள் மத்தியில் நான் கொஞ்சம் பாபுலர். ஆனாலும் வகுப்பில் பாடம் நடத்தும்போது கவனம் சிதறவிட மாட்டேன்.
பரீட்சை என்றால் சீரியஸாக எடுத்துக்கொள்கிற பழக்கம்தான் பள்ளிக்கூட நாளிலிருந்தே எனக்குக் கிடையாதே! ஒரு தடவை பரீட்சையின்போது ஏற்பட்ட அனுபவம் மறக்கவே முடியாது. காலையில் பத்து மணிக்குப் பரீட்சை. நான் போகும்போது, பரீட்சை ஆரம்பித்து நடந்துகொண்டிருந்தது.
நிதானமாகப் பரீட்சை ஹாலுக்குப் போனபோது, எதிரே வந்தவர் என்னுடைய கணித ஆசிரியர் அனுமந்த ராவ்.
"என்ன நாகேஸ்வரா இவ்வளவு லேட்?" என்று பரபரப்பாய்க் கேட்டார்.
''பரீட்சைதானே சார்! பரவாயில்லை! ஆமாம்! இன்றைக்கு என்ன பரீட்சை?"
அதிர்ந்து போய்விட்டார் கணித ஆசிரியர்.
"அடப்பாவி! என்ன பரீட்சை இன்னைக்குன்னே தெரியாம நீ பரீட்சை எழுத வந்திருக்கியா? இன்னிக்கு என் சப்ஜெக்ட்தான்! கணக்கு! போ... போ... மடமடன்னு பரீட்சை எழுது... லேட் ஆகுது பார்!"
என் இடத்தில் போய் உட்கார்ந்தேன். கேள்வித்தாளை ஒருமுறை படித்துப் பார்த்தேன். கிடுகிடுவென்று எழுத ஆரம்பித்தேன். அனலடிகல் ஜியோமெட்ரி, கால்குலஸ், ஒரு கிராஃப், ஒரு ரைடர் என்று போட்டு முடித்து, விடைத்தாளைக் கொடுத்துவிட்டு, ஹாலை விட்டு வெளியே வந்தால், மறுபடியும் கரெக்டாக என் கணித ஆசிரியர்.
"என்ன நாகேஸ்வரா? அதுக்குள்ள வந்திட்டே? கேள்வியெல்லாம் ரொம்ப கஷ்டமா? ஒண்ணுமே எழுதாம, பேப்பரை மடிச்சுக் கொடுத்திட்டு வந்திட்டியா?" என்றார்.
"யார் சொன்னது நான் ஒண்ணும் எழுதலைன்னு! நாற்பது மார்க் வாங்கினால் பாஸ்தானே! நான் பாஸ் மார்க்குக்கு எழுதிவிட்டேன். நூத்துக்கு நூறு மார்க் வாங்கினால் டபுள் பிரமோஷனா தரப்போறீங்க?" என்று கேட்டேன்.
"நீ திருந்தவே மாட்டே!" என்று ஆசீர்வாதம் செய்தார் கணித ஆசிரியர். பரீட்சை எழுதிவிட்டு, நேரே போனது சினிமா தியேட்டருக்குத்தான். பார்த்த படம்: ராம ராஜ்ஜியம்.
இரண்டாவது வருடம், இறுதிப் பரீட்சைக்கு முன்பு செலக்ஷன் தேர்வு என்று ஒரு பரீட்சை நடத்துவார்கள். அந்த செலக்ஷன் பரீட்சை கால அட்டவணையை அறிவித்தார்கள். பரீட்சைக்கு என்னை நான் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தேன். பாஸ் பண்ணினால் போதும்; பாஸ் மார்க் வாங்குவது ஒன்றும் கஷ்டமான காரியமில்லை, என்ற எண்ணமே எனக்குள் மேலோங்கி இருந்தது.
பரீட்சைக்கு இன்னும் நாலே நாள்தான். அன்றைக்கு, என் அண்ணி கடைத் தெருவுக்குப் போய் காய்கறி வாங்கிக்கொண்டு வரும்படிச் சொன்னார். பஸ் பிடித்து மார்க்கெட்டுக்குப் போனேன். பாதி வழியில் உடம்பு ரொம்ப கொதிப்பதுபோல உணர்ந்தேன். தலை சுற்றுவதுபோல இருந்தது. பஸ்ஸை விட்டு இறங்கினேன். வாந்தி வந்தது. மார்க்கெட்டுக்குப் போகாமலேயே, வீட்டுக்குத் திரும்பி வந்துவிட்டேன்.
"என்ன வெறும் கையோட வர்றே? காய்கறி வாங்கிட்டு வரலையா?"ன்னு அண்ணி கேட்டார்கள்.
"இல்லை... எனக்கு உடம்பை என்னவோ பண்ணுது; கொஞ்சம் படுத்து, ரெஸ்ட் எடுத்துக்கிட்டா தேவலைன்னு தோணுது" என்றேன். ஆனால் என் உடம்பு பட்டபாடு எனக்குத்தான் தெரிந்ததேயொழிய, மற்றவர்கள் யாரும் அதை உணரவில்லை. அப்போது படுத்தவன்தான். நாலு நாட்களுக்கு எழுந்திருக்கவே இல்லை. நூற்று நாலு, நூற்று ஐந்து டிகிரி வரை ஜூரம் இருந்தது.
எனக்கு அம்மை போட்டிருக்கும் விஷயமே, நாலு நாட்கள் கழித்துத்தான் தெரிந்தது. சாதாரணமாக வருகிற மாதிரி இல்லாமல், தலையில் தொடங்கி கால் வரை உடம்பு முழுக்க அம்மை போட்டது. எனக்கு அம்மை போட்டிருப்பது தெரிந்தவுடன், அதற்குரிய சிகிச்சை, பத்தியம் எல்லாம் ஆரம்பமானது.
அம்மைபோட்டு குணமாகி உதிர்ந்த பொட்டுகளைத் திரட்டி எடுத்துக்கொண்டு போய், தோட்டத்தில் ஒரு தென்னை மரத்தடியில் இருந்த பள்ளத்தில் கொட்டுவார்கள். ஒரு கட்டத்தில் அந்தக் குழியே நிரம்பும் நிலை ஏற்பட்டு விட்டது என்றால், அம்மன் என் உடம்பில் எந்த அளவுக்குப் விளையாடி இருக்கிறாள் என்று புரிந்துகொள்ளலாம்.
இதிலே சோகம் என்னவென்றால், முதல் தடவை அம்மை போட்டு, அது குணமான தருவாயில், மறுபடி அம்மை போட்டுவிட்டது. அது குணமடைகிறவேளையில் மூன்றாவது தடவையாக அம்மன் என் மீது ஊழித் தாண்டவமே ஆடிவிட்டாளோ, என்று சொல்லும்படியாக ஆகிவிட்டது. நான் பிழைத்ததே புனர்ஜென்மம்தான்.
இப்படி அடுத்தடுத்து மூன்று தடவை அம்மை தாக்குதல் காரணமாக என் உடம்பு மிகவும் பாதிப்புக்குள்ளாகிவிட்டது. பொதுவாக பூசணிமாதிரி உடம்பு என்பதால், எனக்கு வீட்டில் செல்லப்பெயர் குண்டப்பா. நண்பர்கள் வைத்த நிக்நேம்: குண்டு ராவ். ஆனால் அம்மனின் அதீத ஆசீர்வாதம் காரணமாக உடம்பு ரொம்ப இளைத்துவிட்டது. இதில் சுமார் மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. அம்மையிலிருந்து எழுந்து முதல் தடவையாக என்னை நான் கண்ணாடியில் பார்த்தபோது, நான் மிகவும் அதிர்ச்சிக்குள்ளானேன்.
முகமெங்கும் அம்மைத் தழும்புகள். உடம்பு முழுக்கவுமே குண்டும், குழியுமாகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். "ஒரு காலத்தில் இந்த முகம் எத்தனை வசீகரமாக இருந்தது! அந்த வசீகரம் மனத்துக்கு எவ்வளவு கர்வத்தைக் கொடுத்தது! இன்று உன் முகம் எப்படி இருக்கிறது என்று நீயே பார்த்துக்கொள்! இந்த முகத்துடன் நீ எப்படி வெளியில் போவாய்? நாலு பேரை நேருக்கு நேர் நிமிர்ந்து பார்த்து இனி உன்னால் பேசமுடியுமா?" என்றெல்லாம் என்னை நானே கேட்டுக்கொண்டேன். எனக்கு ஏற்பட்ட துக்கத்தை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. கைகளில் என் முகத்தைப் புதைத்துக்கொண்டு, குமுறிக் குமுறி அழுதேன்.
என்மீது ஏகமாய்ப் பாசத்தைப் பொழிந்த என் அக்கா என் நினைவுக்கு வந்தார். அவர் மடியில் நான் தலையை வைத்துக்கொள்ள, அவர் நீண்ட முடிகொண்ட என் தலையை அன்போடு தடவிக்கொடுப்பார். அந்த சுகத்தில், அப்படியே நான் பல நாட்கள் தூங்கிப் போயிருக்கிறேன். நான் சிரிக்கிறபோது, என் கன்னங்களில் குழி விழுந்து, என் முகப் பொலிவு அதிகரிப்பதாக அவர் பல தடவை சொல்லியிருப்பது, என் மனத் திரையில் ஓடியது.
இரண்டு நாட்கள் கழித்து, என் மனச் சுமைகளை எல்லாம் இறக்கி வைக்க வேண்டும் போல இருந்தது. என் அக்காவுக்கு ஒரு லெட்டர் எழுதினேன்.
அன்புள்ள அக்காவுக்கு,
குண்டப்பா எழுதுவது. ‘நான் சிரிக்கிறபோது, கன்னத்தில் குழிவிழக் கண்ட நீ, இனி நான் சிரிக்காமலேயே காண்பாய்!' என்று எழுத ஆரம்பித்த நான் கடிதத்தை எழுதி முடித்தபோது, கையெழுத்துக் கூடப் போடமுடியாமல் அழுகை வந்து, கண்ணீர்த் துளிகள் கடிதத்தில் தெறித்தன.
அப்புறம் என்ன? அம்மை போட்டதில் செலக்ஷன் பரீட்சையும், அதனைத் தொடர்ந்து நடந்த ஃபைனல் பரீட்சையும் எழுதமுடியாமல் போனது.
நான் உடல் ரீதியாக மட்டுமின்றி, மனோரீதியாகவும் வலுவிழந்து போனேன். 'அடுத்தது என்ன?" என்ற கேள்வி என் முன்னே எழுந்து நின்றது.
ஒரு நாள், அப்பா "அடுத்து என்ன செய்வதாகத் திட்டம்?" என்று கேட்டார். "நான் உங்க வார்த்தைக்குக் கட்டுப்பட்டவனில்லையா! நீங்க சொல்கிறாற்போலவே ஆகிவிடுவேன்னுதான் நினைக்கிறேன்!"
"என்ன சொல்கிறாய்?"
"நீங்கதான் அடிக்கடி சொல்வீங்களே; நான் உருப்படவே மாட்டேன்னு. அது மாதிரியே ஆகவேண்டியதுதான்" என்றேன் ரொம்ப யதார்த்தமான தொனியில்.
(சிரிப்பு தொடரும்...)
படங்கள்: யோகா
கல்கி வார இதழ் - 24.08.2003
குறிப்பு: இக்கட்டுரை கல்கி குழுமத்தின் அச்சுக் காப்பகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இதில் உள்ள தகவல்கள் முதலில் வெளியான காலகட்டத்தைச் சார்ந்தவை.