சிரித்து வாழ வேண்டும்: பகுதி 5 - "சபாஷ் நாகேஸ்வரா!"

நகைச்சுவை நடிகர் நாகேஷ் கல்கி வார இதழில் எழுதிய 'சிரித்து வாழ வேண்டும்' தொடரின் சுவாரஸ்யமான நாடக மற்றும் சினிமா அனுபவங்களைப் படியுங்கள்.
நடிகர் நாகேஷ் தொடர் - சிரித்து வாழ வேண்டும்
நடிகர் நாகேஷ்
Updated on
Kalki Strip
Kalki Strip

2003 ஆம் ஆண்டு 03.08.2003 முதல் கல்கி வார இதழில், நடிகர் நாகேஷ் அவர்கள் 'சிரித்து வாழ வேண்டும்’ என்ற தலைப்பில் கட்டுரைகளை தொடர்ந்து பல வாரங்கள் எழுதினார். சுவாரசியமான சம்பவங்கள், நாடகம் சினிமா சார்ந்த பல அனுபவங்கள், சிரிக்க சிந்திக்க தகவல்கள் கொண்ட அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...

தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.

சந்தா செலுத்த...

சிரித்து வாழ வேண்டும்: பகுதி 5

சபாஷ் நாகேஸ்வரா!

நாகேஷ்

"அடுத்து என்ன திட்டம்?" என்று என் அப்பா கிருஷ்ணா ராவ் கேட்க, நான், "நீங்கதான் அடிக்கடி சொல்லுவீங்களே! அதேபோல உருப்படாமப்போக வேண்டியதுதான்!" என்று யதார்த்தமான தொனியில் பதில் சொல்லிவிட்டாலும், என் நோக்கம் என் அப்பாவை அவமானப்படுத்த வேண்டும் என்பது இல்லை.

அடுத்தடுத்து மூணு தடவை அம்மை போட்டு நான் பரீட்சை எழுத முடியாமல் போனது, எனக்குள்ளே எதிர்காலம் குறித்து ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. அதுமட்டுமில்லாமல், அந்த அம்மை, அழகான என்னை, அலங்கோலப்படுத்தி விட்டதில், விரக்தியை ஏற்படுத்திவிட்டது. அவற்றின் வெளிப்பாடுதான் இப்படி விட்டேத்தியான ஒரு பதில்.

ஆனால் என் பதில், என் அப்பாவுக்குக் கோபத்தை ஏற்படுத்தவில்லை. "சொந்தக் காலில் நின்று, உனக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள உன்னால் முடியுமா? என்று கேட்டார்.

"என் கல்வித் தகுதிக்கு, எனக்கு என்ன வேலை கிடைக்கும்? அப்படியே, நான் ஏதாவது ஒரு வேலைக்கு அப்ளிகேஷன் போட்டு, அதையும் பரிசீலனை செய்து, என்னை இன்டர்வியூவுக்குக் கூப்பிடுகிறவர்கள், என் முகத்தைப் பார்த்தபிறகும் அந்த வேலைக்கு என்னைத் தேர்ந்தெடுப்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. அதையும் தவிர, வீட்டிலேயே அடைபட்டுக் கிடப்பதும் எனக்குப் பிடிக்கவில்லை. அதற்குக்கூட, வீட்டில் இருக்கிற நீங்கள் எல்லோருமே, என்னைக் கொஞ்சம் தள்ளி வைத்திருப்பதுபோல நான் உணர்கிறேன். நீங்கள் விலகி விலகிப் போகிறபோது, நான் உங்களிடம் நெருங்கி ஒட்டிக்கொள்ள மனசு இடம் தரவில்லை" என்று என் மனசுக்குள் இருந்த குமைச்சலைக் கொட்டித் தீர்த்தேன்.

அந்தத் தருணத்தில் எனக்குள்ளே ஒரு வேகம் வந்தது. "இந்தக் கணமே இந்த வீட்டை விட்டு வெளியேறு" என்று உள்மனம் சொன்னது. வேஷ்டி, சட்டை மாற்றிக்கொண்டேன்.

அம்மாவிடம் போனேன். "நான் போகிறேன். எங்கே போகிறேன்? எதற்காகப் போகிறேன்? எப்போ திரும்பி வருவேன்? என்றெல்லாம் கேட்காதீர்கள்! ஏனென்றால் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் என்னிடம் பதில் கிடையாது.

ஒரு விஷயத்தை மட்டும் நான் சொல்ல ஆசைப்படுகிறேன். நான் திரும்பி வருவேன். கண்டிப்பாக, நல்லபடியாகத் திரும்பி வருவேன்" என்று சொல்லிவிட்டு, அம்மாவையே ஆழமாகப் பார்த்துக்கொண்டு சில விநாடிகள் நின்றேன்.

அப்போது அவர் கன்னடத்தில் சொன்ன வார்த்தைகள், இன்றைக்கும்கூட என் அதில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கின்றன. "நாகேஸ்வரா! வெளி உலகத்துக்குப் போய்விட்டால், பலவிதமான மனிதர்களை நீ சந்திக்க வேண்டியிருக்கும். அவர்கள் தம் வார்த்தைகளால், உன்னைக் கோபப்படுத்தலாம். உனக்குக் கோபம் வந்துவிட்டது என்றால், அவர்கள் ஜெயித்துவிட்டதாக அர்த்தம். ஆனால், எப்பவுமே நீதான் ஜெயிக்கணும் என்பது என்னோட ஆசை," என்றார்.

என்ன வார்த்தைகள்! நான் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று மாபெரும் ஞானி ஒருவர் சொன்ன ஆலோசனைக்கு ஈடான வார்த்தைகள்! சொல்லி முடித்தபோது, அவரது கண்களில் ஈரம் கசிவதையும் நான் கவனித்தேன்.

நடிகர் நாகேஷ் தொடர் - சிரித்து வாழ வேண்டும்
நடிகர் நாகேஷ்

வீட்டை விட்டுப் புறப்பட்டேன். "டேய்.. டேய்.." என்ற அம்மாவின் குரல் என் காதில் விழுந்தது. ஆனால் அவரது குரல் என்னுடைய முடிவைத் தடுத்து நிறுத்தவில்லை. வீட்டை விட்டுக் கிளம்பி விட்டேனேயொழிய, கையில் காலணா கிடையாது. அடுத்தவேளைச் சோற்றுக்கு என்ன வழி என்பது தெரியாது.

உள்ளூரிலேயே சில நாட்கள் சுற்றிக்கொண்டிருந்தேன்.'யாரிடம் போய் வேலை கேட்பது? என்ன சொல்லி வேலை கேட்பது? நம்ம மூஞ்சிக்கு யார் வேலை கொடுப்பார்கள்?" என்றெல்லாம் குழப்பம். பசி வயிற்றைக் கிள்ளியது. என்ன செய்வது என்று யோசித்தேன்.

ஊரில் ஓரிடத்தில் இலவசமாய் ஒருவர் சாப்பாடு போடுவார். அங்கே போய் சாப்பிடலாம் என்று போனேன். சாப்பாடு போட்டுக்கொண்டிருந்தார்கள். நானும் உட்கார்ந்துகொண்டேன். சாப்பிட்டேன். "வீட்டை விட்டு, வீறாப்பாக வெளியேறி விட்டு, இப்படி ஓசியில் உட்கார்ந்து சாப்பிடுகிறாயே?" என்று என் மனத்துக்குள் ஒருவிதக் குற்ற உணர்வு ஏற்பட்டது உண்மை. ஆனால், அன்றைய தினம், என் வயிற்றுப் பசியைப் போக்கிக்கொள்ள வேறு வழி எனக்குத் தெரியவில்லை. இப்படியே இரண்டு, மூன்று நாட்கள் இலவசச் சாப்பாட்டில் வயிற்றைக் கழுவினேன்.

'நாலு காசு சம்பாதித்து, அதில் சாப்பிட வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்?' என்ற கேள்வி என் மனதைக் குடைந்தெடுத்தது. யோசித்தபடியே, சப்-ரிஜிஸ்திரார் ஆபீஸ் பக்கம் போனபோது, கால் வலிக்குச் சற்று இளைப்பாறலாம் என்று எண்ணி, ஒரு மரத்தடியில் உட்கார்ந்தேன்.

ஒரு வயதான ஆசாமி, தயங்கித் தயங்கி என்னிடம் வந்து, 'ஐயா! ஒரு மனு எழுதித் தரணும், எனக்கு எழுதத் தெரியாது. கொஞ்சம் எழுதித் தந்தீங்கன்னா மவராசனா இருப்பீங்க" என்றார் பணிவான குரலில்.

'என்ன விஷயம்' என்று கேட்டுக் கொண்டேன். அவர் கையோடு கொண்டு வந்திருந்த பழுப்பு நிறக் காகிதத்தில் அவரது மனுவை எழுதிக் கொடுத்தேன். நன்றி சொல்லி மறுபடியும் என்னை மனசார வாழ்த்திவிட்டு, தம் இடுப்பில் கட்டியிருந்த வேட்டியின் முடிச்சை அவிழ்த்து, அதிலிருந்து கொஞ்சம் சில்லறையை எடுத்து என்னிடம் நீட்டினார். நான் நாகரிகம் கருதி முதலில் மறுத்தேன். அவர் வற்புறுத்தினார்.

என் வயிறு உத்தரவிட, 'சரி! காசை வாங்கிக் கொள்' என்றது மனது. கையை நீட்டி, அவர் கொடுத்த சில்லறைகளை வாங்கிக்கொண்டேன். அவர் அந்த இடத்தைவிட்டு அகலட்டும் என்று சில நிமிடங்கள் காத்திருந்தேன். அவர் சென்ற பின்னர் சில்லறைகளைக் கூட்டிப் பார்த்தேன். ஏறத்தாழ இரண்டு ரூபாய்! அட! கால் மணி நேர உழைப்புக்கு இரண்டு ரூபாய் சம்பளமா? "சபாஷ்! நாகேஸ்வரா! உனக்கும் பிழைக்க ஒரு வழிகாட்டிவிட்டான் ஆண்டவன்!" என்று என் முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண்டேன்.

அன்று முதல், தினமும் காலை சப்-ரிஜிஸ்திரார் ஆபீஸ் திறக்கிற நேரத்தில் அங்கே போய் மரத்தடியில் உட்கார்ந்து விடுவேன். மனு எழுதித் தரச் சொல்லி ஐந்தாறு பேராவது வருவார்கள். தினம் பத்து, பன்னிரண்டு ரூபாய் தேறியது.

இதேபோல ஒரு பத்துப் பன்னிரண்டு நாட்கள் ஒட்டியிருப்பேன். வேலை போரடித்துவிட்டது. ஒவ்வொரு மனுவிலும், இன்ன ஊரைச் சேர்ந்த இன்னாரது பேரனும், இன்னாரது மகனுமான இத்தனை வயதுடைய... இவர் என்று எழுதி எழுதி, எனக்கு ரொம்ப அலுத்துப் போய்விட்டது.

ஒரு நாள் காலை சற்றுத் துணிச்சலாய் சப்-ரிஜிஸ்திரார் ஆபீசுக்குள்ளேயே போய்விட்டேன். அங்கே சப்-ரிஜிஸ்திரார் அறையில் காற்றோட்டத்துக்காகத் தொங்கவிடப்பட்டிருந்த 'பங்கா'வை, ஒரு வயசானவர் உட்கார்ந்து ஆட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். சட்டென்று ஒரு ஐடியா வந்தது.

அந்த பங்கா ஆட்டும் ஆசாமியிடம் சென்று, 'கொஞ்சம் நகர்ந்துகொள்ளுங்கள்' என்று சற்றே அதிகாரத் தோரணையில் சொல்லிவிட்டு, நானே பங்காவை ஆட்ட ஆரம்பித்தேன். இள வயசல்லவா? பங்காவை நான் வேகமாய் ஆட்ட, காற்றோட்டத்தில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்து, ரிஜிஸ்திரார் குரல் கொடுத்தார்.

நான் அவர் முன்னால் போய் நின்றேன். "நீ யாரு! புதுசா இருக்கே?" என்றார்.

"வேலை கிடைக்கவில்லை, பங்கா ஆட்டலாமே என்று நினைத்து, ஆட்டிக் கொண்டிருக்கிறேன்" என்றேன்.

உடனே அவர், "பங்கா ஆட்டுவதற்கென்று அரசாங்கமே ஒருவரை வேலைக்கு வைத்திருக்கு. நீ போகலாம்!" என்றார்.

சப்- ரிஜிஸ்திரார் ஆபீசில் வேலைக்கு வாய்ப்பில்லை என்று தீர்மானித்து, வெளியே வந்த எனக்கு, தாலுகா ஆபிஸுக்குப் போய் முயற்சி செய்தால் என்ன என்று தோன்றியது.

அங்கே நடந்த கலாட்டா.... அடுத்த வாரம்.

(சிரிப்பு தொடரும்...)

படங்கள்: யோகா

(கல்கி 31.8.2003)

குறிப்பு: இக்கட்டுரை கல்கி குழுமத்தின் அச்சுக் காப்பகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இதில் உள்ள தகவல்கள் முதலில் வெளியான காலகட்டத்தைச் சார்ந்தவை. 
logo
Kalki Online
kalkionline.com