

எழுதியவர்: வி. சுவாமிநாதன்
சொந்தமாக ஒரு சைக்கிள் கூட இல்லை. கைக்கு வந்த ரூபாய் ஒரு கோடியை வேண்டாம் என்று, மாதம் வெறும் ரூ.2000ல் வாழ்ந்த நல்லகண்ணு கதை தெரியுமா?
தமிழக அரசியலின் 'அறம்' என்கிற சொல்லுக்கு உருவம் கொடுத்தால், அது முதுபெரும் இந்திய கம்யூ. தலைவர் நல்லகண்ணுவாகத்தான் இருக்கும். 101-வது வயதில் அவர் இன்று விடைபெற்றிருப்பது, ஒரு கட்சியின் இழப்பல்ல; இந்த மண்ணின் அரசியல் எளிமையின் மறைவு!
அந்த ஒரு கோடி ரூபாய், அந்த ஒரு சொட்டு வியர்வை! அரசியல்வாதிகள் என்றால் 'சொத்து சேர்ப்பவர்கள்' என்கிற பிம்பத்தை உடைத் தெறிந்தவர் நல்லகண்ணு. அவரது 80வது பிறந்தநாளில், கட்சித்தொண்டர்கள் வியர்வை சிந்திச் சேர்த்த ஒரு கோடி ரூபாயையும், ஒரு புத்தம் புதிய காரையும் நல்லகண்ணுவிடம் அன்பளிப்பாக வழங்கினார்கள். மேடையில் அதனைப் பெற்றுக்கொண்ட அடுத்த நொடியே, "இது கட்சியின் பணம், கட்சிக்கே சேரட்டும்" எனச் சொல்லி அங்கேயே திருப்பிக் கொடுத்து விட்டார்.
சொந்தமாக ஒரு சைக்கிள் கூட வைத்துக்கொள்ளாத அந்தத் தியாகியின் கைகளில் ஒரு கோடி ரூபாய் என்பது வெறும் காகிதமாகத்தான் தெரிந்தது. சமீபத்தில் தமிழக அரசு வழங்கிய 'தகைசால் தமிழர்' விருதோடு கிடைத்த 10 லட்சம் ரூபாயையும்,, தன் கையில் இருந்த 5 ஆயிரம் ரூபாயையும் சேர்த்து முதலமைச்சர் நிவாரண நிதிக்குத் தந்துவிட்டு, வாடகை வீட்டுக்குத் திரும்பிய அந்த எளிமைதான் 'நல்லகண்ணு' எனும் மாமனிதரின் வரலாறு!
தன்னிடம் இருந்ததை எல்லாம் கொடுத்துவிட்டு.. கட்சியின் மாதம் ரூ.2000 ஊதியத்தில் வாழ்ந்து வந்த மனிதநேய பண்பாளர்!
எழுதியவர்: ரெ.ஆத்மநாதன்
நூறையும் கடந்து வாழ்ந்த
நுண்ணிய மனிதர் இவர்!
தேரையே இழுத்து ஓய்ந்த
தெய்வீகப் புதல்வர் இவர்!
காரையும் வேண்டாம் என்று
கட்சிக்கே அளித்தவர் இவர்!
போரையும் கண்ட இவர்
போதித்ததோ அமைதி ஒன்றே!
ஆண்டுகள் நூறைக் கடந்தாலும்
அவருக்காய்ப் பொருள் எதனையுமே
சேர்த்தே அழகு பார்க்காத
செல்வச் சீமான் இவரன்றோ!
பறவையும் கூடத் தனக்கென்று
பார்த்துப் பார்த்து கூடுகட்டி
அதனுள் வாழ ஆசைப்படும்
ஆனாலும் இவர் வாழ்ந்ததுவோ
அரசு தந்த வீட்டினிலே!
அதுவும் சொந்தப் பராமரிப்பினிலே!
போராட்டத் தேர் பலவற்றைப்
புளகாங்கிதம் மிகக்கொண்டே
இழுத்து இழுத்துக் கரைசேர்த்த
இதய நாயகன் இவரன்றோ!
கோயில் தேர்கள் எல்லாமே
குவலயம் நன்கு வாழ்ந்திடவே!
இவரின் தேர்கள் முழுவதுமே
இங்குள்ள ஏழையர் நலம்வேண்டி!
சுதந்திரம் நாடு பெறவேண்டி
சுகங்கள் தனையே துறந்தாரிவர்!
நீரும் ஆறும் இணைந்திங்கு
நீண்ட நிம்மதி கொடுத்திடவே
வாழ்நாள் முழுதும் போரிட்ட
வல்லவத் தலைவர் இவருந்தான்!
மணப்பாறை தனில் நடந்த
மாநிலத் தலைவர் முதல் கூட்டத்தில்
ஆட்டோவில் சென்று இறங்கி
அனைவரையும் வியக்க வைத்து
அந்த எளிமை தனையே
ஆயுள் முழுதும் கடைப்பிடித்தார்!
காரையோ காசு பணத்தையோ
கனவிலும் விரும்பாத இவர்
விருது தந்த பணத்தைக்கூட
விரும்பியே ஏழை எளியவர்க்கு
அளித்து மகிழ்ந்தவர் இவர்
அதுவே ஆனந்தமென்று உணர்ந்தவரிவர்!
போராட்டக்குணம் கொண்ட இவர்
போராடியதோ அமைதி வழியில்!
மனதில் நிறைந்த மாமனார் அன்னாசியை
வீணர்கள் வீடுபுகுந்து வெட்டியபோதும்
அமைதியைக் காக்க வேண்டி
அவலத்தை மனதில் புதைத்து
தீரமாய்க் களத்தில் நின்ற
தியாகியே நீ போய்விட்டாயா?
காமராஜர் கக்கன் வழியில்
எளிமையாய் வாழ்ந்த அண்ணலை
இனியும் நாம் காண்பதெப்போ?
ஓ! ஆர்என்கே தோழர்
நம் அனைவரின் மனதிலுமே
நிரந்தரமாய் அமர்ந்து விட்டார்!
நீளுலகில் நாம் வாழும்நாளில்
எளியவர்கள் நலம் பெறவே
எப்பொழுதும் உழைப்பதென்று
இதயத்தில் உறுதி ஏற்போம்!
இதுவே நாம் ஆர்என்கே க்கு
இதயசுத்தி மிகக் கொண்டே
செலுத்திடும் அஞ்சலி யாகும்!
சிறக்கட்டும் அவர்புகழ் பாரில்!