தேசிய மருத்துவர்கள் தினம்: மருத்துவர்களைப் போற்றுவோம்!

தேசிய மருத்துவர்கள் தினம்: மருத்துவர்களைப் போற்றுவோம்!
Published on

ம் பாரத நாடு ஆன்மீகத்தில் சிறந்தது. கண்ணுக்கு புலப்படாத கடவுளின் ஸ்தானத்தில் உயிர்காக்கும் மருத்துவர்களை தெய்வமாக நினைத்துப் போற்றுவதில் இந்திய மக்கள் சிறந்தவர்கள். இந்தியா மட்டுமல்ல. உலகம் முழுவதும் உள்ள உயிர்களுக்கு உடல்நலப் பாதிப்பு என்றால் அவற்றை சீர் செய்து நலத்துடன் வாழவைப்பதில் மருத்துவர்களுக்கே முக்கியப் பங்கு உள்ளது. இதை யாராலும் மறுக்க முடியாது.

மருத்துவரின் சிறப்புகளை சொல்ல நம் வீட்டுக் குழந்தைகளே சாட்சி. எதிர்காலத்தில் என்னவாக வர விரும்புகிறாய் என்று கேட்டால் அவர்கள் யோசிக்காமல் முதலில் சொல்வது டாக்டர் என்றுதான். அந்த அளவுக்கு மருத்துவத்துறை மதிப்பையும் மரியாதையையும் பெற்றுள்ளது. ஆகவே, நம் உயிர்காக்கும் மதிப்புறு மருத்துவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றியும் பாராட்டும் அங்கீகாரமுமே இந்த மருத்துவர்கள் தினத்தின் நோக்கம்.

  உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் வெவ்வேறு மாதம் தினங்களில் மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. நம் நாட்டில் மருத்துவத்துறையின் முன்னோடிகளில் ஒருவரும் சுதந்திர போராட்ட வீரர் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான டாக்டர் பிதான் சந்திரராய் அவர்களின் நினைவாக அவர் பிறந்த மற்றும் மறைந்த தினமான ஜூலை 1  அன்று தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் இந்திய மருத்துவ சங்கத்தினர் சார்பில் நாட்டில் ஜூலை 1ம் தேதியை   தேசிய மருத்துவர்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பி சி ராய் என அன்போடு அழைக்கப்படும் பிதான் சந்திரராய் அவர்கள் ஜூலை 1 , 1882  ஆம் ஆண்டு பிறந்த அதே தேதியிலேயே 80 ஆண்டுகள் கழித்து 1962 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். கல்கத்தா பல் கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்த பி சி ராய், அதன்பின்னர் இங்கிலாந்து நாட்டிற்கு சென்று ஒரே நேரத்தில் மருந்தியல் மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவத்துக்கான எம்.ஆர்.சி.பி. மற்றும் எஃப்.ஆர்.சி.எஸ் படிப்புகளை 2 ஆண்டு கள், 3 மாதங்களிலேயே முடித்து சாதனை படைத்தார்.கல்கத்தா மருத்துவக் கல்லூரி உட்பட பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றியவர். 1928-ல் இந்திய மருத்துவ நிறுவனத்தைத் தொடங்கி நிர்வகித்து வந்தார். பின்1931-ல் கல்கத்தா மேயராக நியமிக்கப்பட்டார்.காந்திஜியுடன் இணைந்து சுதந்திரப் போராட்டங்களிலும் பங்கேற்றார். சக அரசியல் நண்பர்களால் ‘பிதான் தா’ என அன்போடு அழைக்கப்பட்டார். நாட்டு மக்களுக்கு உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே சுயராஜ்ஜியக் கனவு நனவாகும் என்று நம்பினார்.

மருத்துவர், சுதந்திர போராட்ட வீரர் பிதான் சந்திர ராய்
மருத்துவர், சுதந்திர போராட்ட வீரர் பிதான் சந்திர ராய்Editor 1

வறுமையில் தவித்த மக்களின் நலவாழ்வுக்காக ஜாதவபூர் காசநோய் மருத்துவமனை, சித்தரஞ்சன் சேவா சதன், கமலா நேரு மருத்துவமனை, இந்திய மனநல சுகாதார மையம், விக்டோரியா இன்ஸ்டிடியூஷன், சித்தரஞ்சன் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றைத் தொடங்கினார். சுதந்திரத்துக்குப் பிறகு வங்காளத்தின் முதலமைச்சராக இவர்தான் பதவி ஏற்க வேண்டும் என்று கட்சி விரும்பியது. தன் சேவைகளுக்குப் பதவி இடையூறாகிவிடும் என்பதற்காக அந்தப் பதவியை மறுத்துவிட்டார்.அடுத்த ஆண்டு காந்திஜியின் ஆலோசனைப்படி முதல்வர் பதவியை ஏற்றார். 1948 முதல் 1962-ல் மரணமடையும்வரை தொடர்ந்து 14 ஆண்டுகள் மேற்கு வங்கத்தின் முதல்வராகச் செயல்பட்டார். ‘மேற்கு வங்காளத்தின் சிற்பி’ எனப் போற்றப்பட்டார். தன் வீட்டையே மருத்துவமனைக்கு நன்கொடையாக அளித்தார். முதல்வராக இருந்தபோதும் ஏழை மக்களுக்கு தினமும் இலவசமாக மருத்துவம் பார்த்தார்.

இவரது சேவையைப் பாராட்டி 1961-ல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. மருத்துவம், அரசியல், நிர்வாகம், கல்வி உள்ளிட்ட களங்களில் முத்திரை பதித்த, பிதான் சந்திர ராய் 1962-ம் ஆண்டு ஜூலை மாதம் அவரது பிறந்த நாள் அன்றே, 80-வது வயதில் மறைந்தார். இந்தியாவில் இவரது பிறந்த நாள் தேசிய மருத்துவர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. அறிவியல், கலை, இலக்கியத்தில் சாதனை படைப்போருக்கு இவரது நினைவாக பி.சி.ராய் விருது வழங்கப்பட்டு வருகிறது.

தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டு வரும் இந்நாளில் நம் தமிழ்நாட்டில் பிறந்து இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலெட்சுமி அவர்களின் மருத்துவ சேவையை உலகம் முழுவதும் அறிந்துக்கொள்வது அவசியமாகும். டாக்டர் முத்துலட்சுமி 1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக்கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர். மேலும் இவர் சுதந்திர போராட்டத்தின்போது இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றியவர். பெண் கல்வி மறுக்கப்பட்ட காலகட்டத்தில், பெண்களுக்கு கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி நாடே போற்றும் முதல் பெண் மருத்துவராக உயர்ந்த டாக்டர் முத்துலட்சுமிதான், அக்காலத்தில் நிலவிவந்த தேவதாசி முறையை ஒழிக்க அறும்பாடு பட்டவர். அவருடைய சீரிய முயற்சியினால்தான் தமிழ்நாட்டில் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. அதேபோல், தற்போது தமிழ்நாடு மட்டுமல்லாது நாட்டிற்கே புற்றுநோய் துறையில் கலங்கரை விளக்கமாக விளங்கும் அடையாறு புற்றுநோய் மையத்தில் உருவாக்கியவர் டாக்டர் முத்துலட்சுமி. தமிழகத்தின் பெருமையாக விளங்கிய பெண் மருத்துவரையும் இந்நாளில் நாம் நினைவு கூர்ந்து நன்றி தெரிவிப்போம்.

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி

      ஒவ்வொரு மனிதர்களுக்கும் பணம் பெயர் புகழை விட உயிரும் உடலாக ஆரோக்கியமும்தான் அதி முக்கியம். அந்த வகையில் மனிதர்களை மட்டுமின்றி அனைத்து உயிரினங்களின் உயிர்களையும் உடல் ஆரோக்கியத்தையும் காக்கும் மகத்தான பணியை தங்கள் குடும்பம் சுக துக்கங்களையும் மறந்து சேவையாகவும் நினைத்துச்  செய்பவர்கள் தான் மருத்துவர்கள். எங்கோ சில மருத்துவர்கள் பணத்தை மட்டும் பெருக்கும் குணம் உள்ளவர்களாக இருந்தாலும் பொதுவாக மருத்துவர் என்றாலே மனித நேயம் மிக்கவராகவே கருதப்படுவர்.

    இதற்கு சான்று, கொரானா பெருந்தொற்று காலத்தில் நம் உயிருக்கு பயந்து வீட்டுக்குள் முடங்க உயிரைத் துச்சமென மதித்து அல்லும் பகலும் அரும்பாடுபட்டு பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியது மருத்துவர்களும் அவர்கள் துறை சார்ந்தவர்களும் என்பதை அறிவோம் . உயிர் காக்கும் போராட்டத்தில் தங்கள் உயிரை இழந்த மருத்துவர்களும் உண்டு. இப்படிப்பட்ட மருத்துவர்களை என்றென்றும் மதித்துப் போற்றும் கடமை நமக்கு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவர் சிறப்பு தினத்தின் கருப்பொருளாக ஒரு விஷயம் எடுத்துக்கொள்ளப்படும். அந்தவகையில்,  “Celebrating Resilience and Healing Hands" என்பது கருப்பொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. ஆம். நாமும் நம்மைக் குணப்படுத்தும் கரங்களைக் கொண்ட மருத்துவச் செம்மல்களை கொண்டாடுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com