புதிய நம்பிக்கை

புதிய நம்பிக்கை
Published on

ன் லயன் ரம்மி விளையாட்டுகளினால் நமது இளைஞர்களும் குழந்தைகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.  இளைஞர்களின் தற்கொலைகள் குழந்தைகளின் மனச்சிதைவு போன்ற அவலங்கள் தொடர்ந்து  நிகழ்ந்து கொண்டிருக்கிறது.  “நம் கல்கி உட்பட பல பொறுப்புள்ள ஊடகங்கள்  இந்த ஆபத்தை தடை செய்யவேண்டும்” என்று குரல் எழுப்பியிருக்கிறது. முந்தைய அரசு சில முன்னெடுப்பகளை எடுத்தபோதும்  முழுவதுமாக இந்த சூதாட்ட அரக்கனை தடுக்க முடியவில்லை. பொதுமக்களை தடுக்க வேண்டிய காவலர்கள் கூட ரம்மி விளையாட்டு மயக்கத்தில் கடனாளியாகி தற்கொலை செய்து கொண்ட செய்திகள்கூட வெளியாகியிருந்தது.  

ஆன்லைன் ரம்மிக்கு எதிராக முந்தைய அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. உச்ச நீதிமன்றம், “அது ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு” என்று கூறிவிட்டது. ஆனால்,  ரம்மி  விளையாடும் பலர் சொந்த பணத்தை மட்டுமல்ல, கடன் வாங்கிகூட விளையாடும் அவலத்திற்கு சிக்குகிறார்கள். எளிதாக பணம் சம்பாதிக்கும் ஆசை தான் இதற்கு காரணமாகி விடுகிறது. அடுத்தது கடனை அடைக்க போடும் திட்டம் சமூகத்திற்கு எதிரானதாக மாறி விடுகிறது... அல்லது அவர்களின் உயிரை பறித்து விடுகிறது என்று சமூக ஆர்வலர்களும் ஊடகங்களும் மீண்டும்  குரல் எழுப்பினர். 

அதன் விளைவாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் முதல்வர் ஸ்டாலின்  குழு அமைத்தார். இந்த குழு உடனடியாக விசாரணை நடத்தி  அறிக்கை அளித்தது. மேலும் இணையதள விளையாட்டுகள் மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து பள்ளிக்கல்வித்துறை வாயிலாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் உறுதியான வரைவு சட்டம் தயார் செய்யப்பட்டது. இந்த சட்டவடிவுக்கு அண்மையில் தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. ஆளுநரின் ஒப்புதலுக்கு   அனுப்பப்பட்டிருக்கிறது. 

தமிழக அரசு எடுத்துள்ள இந்த முயற்சி ஆன்லைன் ரம்மியை முற்றிலும்  தடை செய்வதற்கான முதல்படி. சைபர் குற்றம் தொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்க, அதன் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு கொண்டு வந்த புதிய சட்டம் நிச்சயம் வழிவகுக்கும்.

ஆன்லைன் ரம்மியால் பலியாகும் பல உயிர்களை இந்த புதிய சட்டம் காப்பாற்றும் என்று நம்பலாம்.

“பல ஆயிரக்கணக்கான மாணவர்களின் நலன் கருதி ஆளுநர் இந்த சட்டத்தை  தாமதமாக்காமல் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்பதே தமிழக மக்களின்  நம்பிக்கை.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com