Online violations against individuals - Lawyer Venkatesh
Online violations against individuals - Lawyer VenkateshAI Image

Interview: இணையத்தில் தனிநபர் மீதான அத்துமீறல்கள்: சட்டம் என்ன சொல்கிறது? - வழக்கறிஞர் வெங்கடேஷ் விளக்கம்!

Published on
Kalki Strip
Kalki Strip

சமீபத்தில் கேரள பேருந்து ஒன்றில் பெண் யூடிபர் ஒருவர் தனது அருகில் நின்ற இளைஞர் தன்னை தவறான கண்ணோட்டத்துடன் உரசினார் என பாலியல் சீண்டல் குற்றச்சாட்டினை (Online violations against individuals) தானே எடுத்த காணொளி மூலம் பொதுத்தளத்தில் பகிர்ந்தார். அந்தப் பெண்ணிற்கு ஆதரவாக, (உண்மைத்தன்மையை அறியாமல்) இந்த காணொளியில் இருந்த இளைஞர் மீது சமூக வலைதளங்களில் வரைமுறையற்ற விமர்சனங்கள் எழுந்தன. இதனால் ஏற்பட்ட வேதனை மற்றும் மன உளைச்சலில் தீபக் எனும் அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இளைஞரின் குடும்பத்தினர் தற்கொலைக்கு காரணமான அந்தப் பெண்ணின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அந்த வீடியோவை நீக்கி விட்டு தலைமறைவான அந்தப் பெண் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பெண் என்பதால் அவர் எளிதில் சட்டத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்படலாம் எனும் கருத்துக்கள் வலம் வரும் நிலையில்...

இது போன்ற சமூக அவலங்கள் குறித்து திருப்பூர் சேர்ந்த வழக்கறிஞர் திரு. வெங்கடேஷ் அளித்த பேட்டி..

நாம் கேட்ட "சுருக்" கேள்விகளும் அவர் அளித்த "நறுக்" பதில்களும் இங்கு...

Lawyer Venkatesh
Lawyer Venkatesh
Q

தற்போதைய இணையதள கலாச்சாரம் பற்றி?

A

தற்போதைய இணையதள கலாச்சாரம் என்பது தங்கக் கூண்டில் இருக்கும் கிளி போன்றது. பறந்து விரிந்த உலகத்தை ரசிக்க மறந்து, தான் இருக்கும் இடத்தை பெரிதாக நினைக்கிறது.

Q

பெண்களுக்கு ஆதரவாகவே சட்டம் உள்ளதாக கூறப்படுவது எந்த அளவில் உண்மை?

A

சட்டத்தின் முன் ஆண் பெண் அனைவரும் சமமே. எப்போதும் அதிகம் பாதிக்கப்படுகிற, பாதிக்க வாய்ப்பு இருக்கிற, சமூகத்திற்கு நிச்சயம் ஆதரவாக சட்டம் இருக்கும். தற்போதைய சூழலில் கணவன்மார்கள் சந்திக்கும் துயரங்களையும் கூட நீதியரசர்கள் கவனித்து தங்களது தீர்ப்புகளில் மாற்றத்தை, புரிதலை கொண்டிருப்பது இதற்குச் சான்று.

Q

இணையதளத்தில் தனிநபர் மீது அவதூறு பரப்பினால் சட்டம் மூலம் நடவடிக்கை எடுக்க முடியுமா?

A

நிச்சயமாக. பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 356 இன் கீழ் வழக்கு தொடுக்க வாய்ப்பு உள்ளது.

Q

தற்போது பரபரப்பாக பேசப்படும் இளைஞர் தற்கொலை சம்பவத்தில் கேரள பெண் யூடிபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா?

A

நிச்சயமாக முடியும். பாரதீய நியாய சன்ஹிதா பிரிவு 108 -ன் படி தற்கொலைக்கு தூண்டுவது தண்டிக்கப்படும் குற்றம் ஆகும். 10 ஆண்டுகள் வரையிலும் கூட நீட்டிக்கும் அளவிற்கு சிறை தண்டனை கிடைக்கலாம்.

Q

இது போன்ற செயல்களுக்கு சமூக ஆர்வலராக தங்கள் கருத்து?

A

கேரளாவில் நிகழ்ந்த இந்த குறிப்பிட்ட சம்பவத்தில் இரு தரப்பிலும் அவர்களை நினைக்கிறபொழுது மிகவும் வருத்தமாக உள்ளது. சமூக வலைதள மோகத்தில் பின் விளைவுகள் பற்றிய புரிதல் இல்லாமல் இது போன்ற செயல்களை ஒருவர் செய்தால், நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. அதே சமயம் தன் மீது சுமத்தப்பட்ட பழிக்கு தற்கொலையின் வாயிலாக நியாயம் சொல்ல நினைப்பதும் சரி அல்ல.

Q

இன்றைய இளைஞர்கள் ஒரு பக்கம் புத்திசாலியாகவும், தன்னம்பிக்கையுடனும், மறுபுறம் பலவீனமாகவும் இருப்பது ஏன்?

A

சிறப்பான கேள்வி. நிச்சயம் இன்றைய இளைஞர்கள் புத்திசாலிகளாக தன்னம்பிக்கை உடையவர்களாக அதிகம் அறியப்படுவதையும் பார்க்கின்ற அதே தருணத்தில் பலவீனமானவர்களாக இருப்பதையும் நம்மால் காண முடிகிறது. அதற்கு நம் உலகம் நான்கு சுவற்றுக்குள், இரண்டு விரல்களில் அடங்கியது ஒரு முக்கிய காரணம். தற்போது இந்த உலகியல் சூழல் வெற்றியை மட்டுமே அங்கீகாரமாக நினைப்பதும், அப்படியான ஒரு கட்டமைப்பை உருவாக்கி வைத்திருப்பது இதற்கு மிகப்பெரிய காரணம். தோல்வியுற்றவன் தொடர்ந்து முயற்சிக்கிறான் அல்லது முயற்சித்து இருக்கிறான் என்பதை வெளி உலகத்திற்கு சொல்ல மறந்த, மறுக்கின்றன சமூகம் இதற்கு ஒரு காரணம்.

Q

இது போன்ற சமூக துஷ்பிரயோகங்களுக்கு மூல காரணமாக இருப்பது எது?

A

அங்கீகாரம் அல்லது அதீத கவனம் தன்னகத்தே தேவை என்கிற உணர்வு மட்டும் தான். சமூகத்தில் எல்லோருக்கும் நிச்சயமாக ஏதோ ஒரு வகையில் ஒரு அங்கீகாரம், ஒரு தேடல் இருக்கிறது. அரசியல், விளையாட்டு, தொழில், கலை என்று பல துறைகளில் பல ஆண்டுகள் தொடர் பயிற்சி, முயற்சி என கடும் உழைப்பால் கிடைக்கப்பெற்ற ஒன்று தற்போது சுருங்கி சுருங்கி இணையதளத்தின் வாயிலாக சமூக வலைதள பயன்பாட்டின் வாயிலாக தன்னை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அவர்கள் நினைப்பது மிகப்பெரிய அவலம்.

Q

சட்டத்தின் மூலம் தரப்படும் தண்டனையால் இத்தகைய செயல்கள் தவிர்க்கப்படும் வாய்ப்பு உள்ளதா?

A

நிச்சயம். ஆனால் சட்டத்தின் மூலம் தரப்படும் தண்டனைகளால் மட்டுமே இத்தகைய செயல்கள் தவிர்க்கப்பட வாய்ப்பு இல்லை என்பதே நிதர்சனம். தனிமனித ஒழுக்கமும், ஆரோக்கியமான சமூகத்தின் கட்டமைப்பும் நாம் ஒரு தவறு செய்தால் நிச்சயம் தட்டிக் கேட்க நம்மைச் சுற்றி ஆட்கள் உள்ளார்கள் என்கிற உள் உணர்வும், அத்தகைய ஆட்கள் பலமாக கேள்விகளை கேட்பது மட்டுமே இவ்வாறான தவறுகளில் இருந்து நம்மை மீட்டெடுக்கும்.

இதையும் படியுங்கள்:
மரணத் தண்டனை வழங்கிய பின் நீதிபதி ஏன் பேனாவை உடைக்கிறார்? யாரும் சொல்லாத ரகசியம்!
Online violations against individuals - Lawyer Venkatesh
Q

சோஷியல் மீடியாவை பயன்படுத்துவதில் உள்ள வரைமுறைகள்?

A

சரி எது, தவறு எது என்பதை பகுத்து ஆராய்ந்து இது உண்மை, இது பொய் என்பதை உணர்ந்து இந்த சமூக வலைதளம் மட்டுமே வாழ்க்கை அல்லது உலகம் என்கிற மாயையிலிருந்து வெளியே வருவது மட்டுமே நம் வரைமுறையாக இருக்கட்டும். சமூகத்தின் சரிபாதியாகி விட்ட சோஷியல் மீடியாக்கள் மூலம் நன்மைகளை விதைப்போம். வன்மங்களை புதைப்போம்.

இதையும் படியுங்கள்:
CBI: பெயரைக் கேட்டாலே சும்ம்ம்மா... அதிருதில்ல! அத்தனை கெத்தா?
Online violations against individuals - Lawyer Venkatesh

சட்டமும் சமூகப் பொறுப்பும்:

ஒரு உயிரைக் காப்பாற்றுவது மனிதநேயத்தின் உச்சம் மட்டுமல்ல; சட்டமும் சமூகமும் விதிக்கும் பொறுப்பாகும்.

V. VENKATESH MBA., LLB., ADVOCATE & LEGAL CONSULTANT TIRUPUR

இந்தியாவில், தற்கொலை என்பது பல குடும்பங்களையும், சமூகங்களையும் பாதிக்கும் ஒரு துயரமான உண்மை.

ஒருவரின் வாழ்க்கையை முடித்துக் கொள்வது பேரழிவை ஏற்படுத்தும் செயல் என்றாலும், இதற்கு முன் இருந்த “இந்திய தண்டனைச் சட்டத்தின்” பிரிவு 306 இன் கீழ் தற்கொலைக்குத் தூண்டுவது, தற்கொலை முயற்சியில் ஒருவருக்கு உதவுவது -ஐபிசி பிரிவு 107 உடன் படிக்கப்படும் பிரிவு 309 இன் கீழ் - பிரத்தியேகமாக குற்றமாகும்.

ஒருவர் தற்கொலை செய்து கொள்வது என்பது தனிநபரின் துயரமாக மட்டுமல்ல; அது சமூகத்தையே உலுக்கும் ஒரு மிகக் கடுமையான நிகழ்வாகும். இத்தகைய துயரமான முடிவுகளுக்குப் பின்னால், மன அழுத்தம், தொடர்ந்து ஏற்படும் அவமானப்படுத்தல், அச்சுறுத்தல், குடும்ப அல்லது சமூக அழுத்தங்கள், மற்றும் நேரடி அல்லது மறைமுக தூண்டுதல் போன்ற பல காரணங்கள் உள்ளன.

பாரதீய நியாயச் சட்டம், 2023 (Bharatiya Nyaya Sanhita, 2023) இன் பிரிவு 108-ன் படி, யாரேனும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டால், அந்தத் தற்கொலையைச் செய்யத் தூண்டியோ, உதவியோ, அல்லது எந்த வகையிலும் உடந்தையாக இருந்தவருக்கு, பத்து ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம் என்கிறது.

இந்த சட்டப்பிரிவு, “வார்த்தைகள் கூட உயிரைப் பறிக்கலாம்” என்பதைக் சமூகத்திற்கு வலியுறுத்துகிறது. ஒருவரை தொடர்ந்து மனவேதனைக்கு உள்ளாக்குவதும், அவமானப்படுத்துவதும், வாழ்வின் மீது நம்பிக்கையை இழக்கச் செய்வதும், சட்டரீதியாக கடுமையான குற்றங்களாகக் கருதப்படலாம்.

எனவே, மன அழுத்தத்தில் உள்ளவர்களை அலட்சியப்படுத்தாமல், அவர்களை புரிந்து கொண்டு, ஆதரவாக நின்று, சரியான ஆலோசனை மற்றும் உதவிகளைப் பெறச் செய்வதே சமூகத்தின் கடமையாகும்.

ஒரு உயிரைக் காப்பாற்றுவது மனிதநேயத்தின் உச்சம் மட்டுமல்ல; சட்டமும் சமூகமும் விதிக்கும் பொறுப்பாகும்.

logo
Kalki Online
kalkionline.com