ஆர்கானிக் உணவு - A to Z விளக்கம்!
ஆர்கானிக் என்றால் என்ன? ஆர்கானிக் உணவுகளில் உள்ள நன்மைகள் என்ன? அவ்வகை உணவு உற்பத்தியில் இருக்கும் சவால்களும், சிக்கல்களும் என்ன? போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு கிரியா அறக்கட்டளையைச் சார்ந்த வேளாண் ஆலோசகர் கே. சி. சிவபாலனின் விளக்கங்களை கல்கி ஆன்லைன் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பயனுள்ள பகுதி இது!
‘ஆர்கானிக்’ என்பதன் அடிப்படை என்ன சார்?
அனைத்து சத்தான உணவுகளும் ஆர்கானிக்காக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரம் ஆர்கானிக் உணவுகளில் மிகப் பெரும்பான்மையானவை சத்தானதாகவே இருக்கின்றன என்பதும் மறுப்பதற்கில்லை. இதுவே ஆர்கானிக் உணவை நோக்கி மக்கள் நகர காரணமாகி இருக்கிறது. உலகம் இன்று அவசர யுகத்தில் தன்னுடைய பயணத்தை மேற்கொண்டு வருகிறது. எல்லாவற்றிலுமே அவசரம் அவசரம் என்று ஓடிக்கொண்டே இருப்பதால் தான் ஒரு வேலையை முடிப்பதற்கு குறிப்பிட்ட நாட்கள் ஆகும் என்று தெரிந்தே அதை விரைவாக முடிப்பதற்காக குறுக்கு வழியை தேர்வு செய்கிறோம். இதனாலே லஞ்சம், ஊழலும் பெருக தொடங்கியது. இந்த அவசர கதி விவசாயத்துறையையும் விட்டு வைக்கவில்லை. மேலும் ஒருபுறம் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கம், பருவநிலை மாற்றம், விளைச்சல் பாதிப்பு, நகரமய வளர்ச்சி, விவசாய நிலங்களின் பரப்பு குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயம் அதிக விளைச்சலுக்கு கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் பூச்சி தாக்குதலை சமாளிக்கவும், காலச் சூழலை தாக்குப்பிடித்து வளரவும், இருக்கும் பரப்பில் அதிக விளைச்சலைப் பெறவும், கூடுதல் மகசூலுக்காகவும் என்று பல்வேறு காரணங்களுக்காக இன்று விளைநிலங்கள் முழுக்க ரசாயன நிலங்களாக மாறிவிட்டன. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஒருபுறம் விளைச்சலை மிகப்பெரிய அளவில் வளர்த்து இருக்கிறது. மற்றொருபுறம் எண்ணில் அடங்கா நோய்களுடைய வீரியத்தைக் கூட்டி, மக்களை நேரடியாக பாதிக்க செய்திருக்கிறது. உணவே மருந்து என்று இருந்த நிலை தற்போது உணவா? விஷமா? என்று பேசும் அளவிற்கு சென்றுள்ளது.
இந்த நிலையில் மக்கள் மத்தியில் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்க கூடிய ஆர்கானிக் உணவை பற்றி பார்ப்போம்.
ஆர்கானிக் என்றால் இயற்கையானது என்று பொருள். இன்று ஆர்கானிக் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே பெருமளவில் சென்று இருக்கிறது. மக்கள் தேடிச்சென்று ஆர்கானிக் உணவுகளை வாங்க முனைப்பு காட்டுகின்றனர். குறிப்பாக கொரோனா நோய் தொற்றுக்குப் பிறகு மிகப்பெரிய அளவில் மக்களிடையே உணவு பழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பெரிய அளவிலான பாதிப்பு, உயிரிழப்பு என்று ஏற்படுத்தும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தற்போது மீண்டும் உணவையே மருந்தாக பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர்.
ஆர்கானிக் உணவின் நன்மைகள்னு எதைக் குறிப்பிடலாம்?
உணவுகளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். ஒன்று வேளாண்மை மூலம் நிலத்தில் இருந்து எடுப்பது. மற்றொன்று கால்நடைகள் மூலம் கிடைப்பது. இந்த இரு உணவு வகைகளிலும் இயற்கை உணவு என்பது ஊட்டச்சத்து, ஆற்றல், ஆரோக்கியம் நிறைந்தது.
இதனாலே மக்கள் ஆர்கானிக் உணவு என்று தற்போது தேடி செல்கின்றனர். ஆர்கானிக் உணவு மூலம் விவசாயிகள் பல்வேறு வகைகளில் பயன் அடைகின்றனர். இயற்கை விவசாயத்தை மேற்கொள்வதன் மூலம் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றிற்காகும் செலவுகள் குறைகிறது. இதனால் குறைந்த செலவில் விவசாயத்தை மேற்கொள்ள முடிகிறது. நுகர்வோர்க்கு நஞ்சு இல்லாத உணவு கிடைக்கிறது. மேலும், உள்ளூரில் கிடைக்கும் இயற்கை பொருட்களை வைத்து உரங்களும் மருந்துகளும் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கோமியமும், ஆட்டுப்புழுக்கை, இலைகளும், செடிகளும், கொடிகளும் இயற்கை விவசாயத்தில் பயன்படுகின்றன. இதனால் உள்ளூர் நலன் பெருகும், உள்ளூர் பொருளாதாரம் மேம்படும். இயற்கை விவசாயத்தில் அனைத்துமே அருகாமையில் கிடைத்துவிடும் என்பதால் உள்ளூர் வேலை வாய்ப்புகள் பெருகும்.
இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் வேறு எந்த நிலப்பரப்புகளிலும் இல்லாத அளவிற்கு பாரம்பரிய வேளாண் விலை பொருட்கள் உள்ளன. பல்வேறு வகையான பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானிய வகைகள் தமிழ்நாடு நிலப்பரப்பில் கிடைக்கிறது என்பதாலே இயற்கை விவசாயத்தில் யாராலும் தமிழ்நாட்டை முந்த முடியவில்லை.
நஞ்சு நிறைந்த உணவுகளால் பல்வேறு வகையான நோய்கள், பாதிப்புகள் ஏற்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் இயற்கை உணவு சர்க்கரை கட்டுப் படுத்துவதாகவும், பல்வேறு வகையான நோய்களுக்கான மருந்தாகவும் இருக்கிறது. இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட எல்லா உணவுகளுமே அதிக அளவில் எதிர்ப்பு சத்து கொண்டவைகளாக உள்ளன.
அதனாலேயே நகரப் பகுதிகளிலும் பல ஆர்கானிக் விற்பனை கூடங்கள் பெருகிவிட்டன. மக்கள் பெருமளவில் ஆர்கானிக் கடைகளை தேடிச் சென்று வாங்க தொடங்கி இருக்கின்றனர். ஏன் தற்போது டெல்லியில் நடைபெற்று முடிந்த ஜி-20 மாநாட்டில் கூட ஆர்கானிக் சிறுதானிய உணவுகளே பரிமாறப்பட்டிருக்கிறது. இப்படி ஆர்கானிக் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்துள்ளது.
வேளாண் மூலம் ஆர்கானிக் விளைச்சல் என்பது புரிகிறது. கால்நடைகள் மூலம் கிடைக்கும் ஆர்கானிக் பால், ஆர்கானிக் தயிர், ஆர்கானிக் இறைச்சி என்பவை என்ன?
கால்நடைகளின் மூலம் கிடைக்கும் உணவுகளில் இயற்கைக்கு புறம்பான செயல்கள் என்ன என்பதைப் புரிந்துகொண்டால், ஆர்கானிக் என்பதும் புரியும். பசுக்கள் அதிகம் பால் சுரக்க வேண்டும் என்பதற்காக ஹார்மோன்கள் ஊசி செலுத்தப்படுகிறது. தீவனங்களிலும் இரசாயனங்கள் அதிகமாகத் தெளிக்கப்படுகின்றன. மேலும், மாமிசங்களுக்காகவும் இதுபோன்ற செயல்பாடுகள் கையாளப்படுகின்றன. கோழிகள் வளர குறிப்பிட்ட இத்தனை நாட்களாகும் என்பது இயற்கையான வளர்ச்சி. ஆனால், பிராய்லர் கோழிகள் ஊசி மூலமாக விரைவாக வளர்க்கப்பட்டு, உடனுக்கடன் மாமிசங்களாக மாற்றப்படுகின்றன.
இப்படி இயற்கைக்கு பறம்பான செயல்களால் உற்பத்தி ஆகும் உணவுகளில் நச்சத்தன்மை கூடி விடுகிறது. இத்தகைய செயற்கை முறைகளைப் பின்பற்றாமல் கால்நடைகளிடமிருந்து பெறப்படும் உணவே ஆர்கானிக் என்று கொள்ளலாம்.
இயற்கை உணவு பொருளினுடைய உண்மை தன்மையை எப்படி உறுதி செய்துகொள்வது?
வேளாண் உழவர் நலத்துறை சார்பில் ஆர்கானிக் பொருட்களுக்கு அங்ககச் சான்று வழங்கப்படுகிறது. எப்படி ஃபுட் சேப்டி டிபார்ட்மெண்ட் தரமான உணவு கடைகளுக்கு சான்று வழங்குகிறதோ அதே அடிப்படையில் தான் அங்ககச் சான்று இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் உணவுகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த சான்றை குழுவாகவோ அல்லது தனி நபராகவோ விண்ணப்பித்து பெற முடியும். இதைச் சான்று பெற்றால் மட்டுமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு மக்களும் அங்ககச் சான்று இருந்தால் மட்டுமே அதை ஆர்கானிக் உணவாக ஏற்றுக் கொள்கின்றனர்.
இதனாலையே பெரும்பான்மையாக இயற்கை விவசாயத்தை மேற்கொள்பவர்கள், விற்பனை செய்பவர்கள் அங்ககச் சான்றை கட்டாயம் வாங்க முனைப்பு காட்டுகின்றனர். மேலும் அங்ககச் சான்றில் உற்பத்தி செய்யப்பட்ட பருவம், எந்த நிலப்பரப்பு, எவ்வளவு நாள் உபயோகிக்க ஏற்றது என்ற முழு தகவல்களும் அடங்கி இருக்கும்.
ஆர்கானிக் உணவு சந்திக்கும் சவால்கள், சிக்கல்கள் குறித்து...?
பல்வேறு வகையான பிரச்னைகளுக்கு பிறகு ஆர்கானிக் உணவு குறித்து விழிப்புணர்வு மக்களிடையில் பெருகி இருக்கிறது. அதே நேரம், இதை பயன்படுத்தி லாபம் ஈட்ட பலரும் முயற்சித்து வருகின்றனர். அதனாலேயே ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்திய உணவுகளில் போலியாக ஆர்கானிக் என்று பெயரிட்டு விற்பனை செய்து வருகின்றனர்.
மக்கள் ஆர்கானிக் என்று பிரின்டிங் செய்திருந்தாலே அதை அதிக விலை கொடுத்து வாங்கவும் தயாராக இருக்கின்றனர். இதுவே மோசடிகளுக்கு முக்கிய காரணம். ஆர்கானிக் உணவு பொருட்களுக்கு வேளாண் துறையின் சார்பில் அளிக்கப்படும் அங்ககச் சான்று குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர்.
ஆர்கானிக் பொருட்கள் உற்பத்தி குறைவு. இதன் காரணமாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழை எளிய நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆர்கானிக் உணவு எட்டாக்கனியாக இருக்கிறது. அதனாலேயே பெரும்பான்மையாக வசதி படைத்த மக்களே ஆர்கானிக் ஷாப்களில் அதிகம் காணப்படுகின்றனர்.
ஆர்கானிக் உணவு குறித்த விழிப்புணர்வு எப்படி உள்ளது?
இந்தியாவில் எந்த அளவிற்கு ஆர்கானிக் உணவு குறித்த விழிப்புணர் வளர்ந்திருக்கிறது என்று கேட்டால், 50% அளவிற்கு கூட அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் படவில்லை என்பது வருந்தக்க விஷயம்.
ஆர்கானிக் பொருட்களின் உற்பத்தியை கூட்டவே முடியாதா?
இந்தியா 300 மில்லியன் டன் உணவுப் பொருட்களை ஒவ்வொரு ஆண்டு உற்பத்தி செய்கிறது. ஆனால் அவற்றில் 40% சரியான சேமிப்பு இல்லாமல் மதிப்பு கூட்டு செய்யப்படாமல் வீணாகுகின்றது. உதாரணத்திற்கு இந்தியாவில் 2 சதவீதம் மட்டுமே அரிசி மதிப்பு கூட்டப்பட்டு அவுலாக மாற்றப்படுகிறது. இவ்வாறு விளைப் பொருட்களை மதிப்பு கூட்டுவதில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. இந்தியாவை விட பிரேசில் மிகக் குறைந்த அளவிலேயே விளைச்சல் செய்தாலும் 70 சதவீதம் அளவிற்கு பதப்படுத்தி பாதுகாக்கிறது. மலேசியா 80 சதவீதம் அளவிற்கு பதப்படுத்தி பாதுகாக்கிறது. ஆனால் இந்தியா விளைவிக்கும் பொருட்களை வெறும் 2 சதவீதம் மட்டுமே பதப்படுத்தி பாதுகாக்கிறது. இதுவே விலையற்றத்திற்கு முக்கிய காரணமாகிறது. மேலும் அறுவடைக்குப் பிந்தைய வேளாண் தொழில்முறையில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. விளைவிக்கப்படும் உணவுப் பொருட்கள் சரியான முறையில் பாதுகாக்கப்படும் என்றால் தட்டுப்பாடு இருக்காது, தட்டுப்பாடு இல்லை என்றால் அவசரகுதியில் அதிக விளைச்சலுக்காக நடைபெறும் நஞ்சு நிறைந்த வேலைக்கு குறையும், இதனால் அதிக அளவிலான ஆர்கானிக் உணவுகள் மக்களை சென்றடையும்.