கடந்த ஆண்டு செப் 30 ஆம் தேதி லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, உலகமெங்கும் அமோக வரவேற்பினைப் பெற்றது. பொன்னியின் செல்வன் படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளரும், பாடலாசிரியருமான சிவா அனந்த் பொன்னியின் செல்வன் திரைப்பட தயாரிப்பு குறித்த அனுபவத்தினை கவிதை வடிவில் பகிர்ந்துகொள்கிறார் கல்கி வாசகர்களுடன்....
பொன்னியின் செல்வன் புனைகதை
எங்கள் திரைப்படத்திற்கு முதல் விதை
கல்கியின் கனவில் பிறந்த
மன்னர்கள் மதயானைகள்
குதிரைகள் குற்றவாளிகள்
ஒற்றர்கள் உத்தமர்கள்
வீராங்கனைகள் வீரர்களை
வெள்ளித்திரையில் வலம் வரச் செய்ய
புயலும் பெரும் போரும்
நதிகளும் நன்னகரங்களும்
படகும் பல்லக்கும்
வெண் மலர்களும் பொன் மகுடமும்
வார்த்தைகளில் இருந்து உருப் பெற்று வர
தமிழ் மொழிக்குப் பிறந்த கதையை
ரத்தினப் பூச்சு அளித்துத்
திரை மொழியில் வளர்க்க
நட்சத்திரங்கள் தரையிறங்கினர்
சிகை வளர்த்தனர்
செந்தமிழ் பேசிப் பயின்றனர்
பொன்காலைப் பொழுதுக்கும் முன்பாக
ஒப்பனை பூசினர்
அணிகலன் பூண்டனர்
ஓவியர்கள் அரங்கம் கட்ட
தையற் கலைஞர்கள் உடைகள் கூட்ட
கொல்லர்கள் வேல் தீட்ட
டீசல் விளக்குகள் ஒளி ஊட்ட
குதிரைகளும் யானைகளும் மனிதர்களும்
தினந்தினமும் ஒத்திகை பார்த்தோம்
கோவிட் அலையினில்
கண்ணயறாத காலையில்
இரண்டு மணி தொடங்கி
இரண்டாயிரம் பேரை சோதித்தோம்
ஏழு மணிக்குள்
இருநூறு இருநூறாக சோறிட்டோம்
தாய்லாந்து தமிழ்நாடு
ஆந்திரம் மத்தியப் பிரதேசம்
புதுவை பொள்ளாச்சி என்று
பல தேசங்களில் பாதம் பதித்தோம்
வாள் வீசி வசனம் பேசி
வரி வரியாகப் படம் பிடித்தோம்
ஆடல் பாடலுக்கு நடன மணிகள்
தங்க ஆபரணங்களைப் பாதுகாக்க
துப்பாக்கி ரவைகள்
இந்தோனேஷியாவிலிருந்து
கலிஃபோர்னியா வரை
இசை தேடினோம்
ஹங்கேரியிலிருந்து அரேபியா வரை
ஒலி கூட்டினோம்
காலம் காலமாக
உலகம் கொண்டாடும்
கனவுத்தேரை
ஊர் கூடி இழுத்தோம்
எத்திசையில் போக வேண்டும் என்று
இயக்குனர் வழிகாட்ட
கிட்டத் தட்ட எட்ட முடியாத
இலக்கு ஒன்றை எழுதி வைத்த
கல்கிக்கு எங்கள் வணக்கம்!
-சிவா அனந்த்