நமது மரபிலே காலமானார் என்று சொல்வர். கடந்த காலத்திலிருந்து வந்து நிகழ்காலத்தில் வாழ்ந்து நாம் அறிய ஒரு எதிர்காலத்தில் ஆன்மா பயணிக்கும். அது எந்த காலவரையறைக்குள்ளும் உட்படாமல் அதுவே ஒரு காலத்தின் குறியீடாக மாறிவிடுகிறது. அந்த ஆன்மா சிவனின் பதத்தை தஞ்சம் அடைகிறது. எனவே, அனுதாபம், இரங்கல் சொல்வது அவசியமற்றது. அவர் நினைவை அவர் அளித்த விஷய தானத்தை அசைபோடுவதே இந்தப் பதிவின் நோக்கம்.
காஞ்சிபுரத்துக்காரரான ஓவியர் தநுசுவின் இயற்பெயர் செந்தில் குமார். அந்த இயற்பெயரோடுதான் ஆரம்ப காலத்தில் அவர் ஓவியங்களை வரைய ஆரம்பித்தார். ஜோதிடப்படி அவரது லக்னம் தனுசு. எனவே, பின்னர் தனது புனைப்பெயராக தநுசு என்பதையே சூட்டிக்கொண்டார். எனக்குத் தெரிந்து கல்கி தீபாவளி மலர் ஆன்மிகக் கட்டுரைகளில் ஓவியர் தநுசுவின் ஓவியம் இடம்பெறாமல் இருந்ததில்லை.
மற்ற ஓவியர்களுக்கும் தநுசுவுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் அவர் கடவுள் படங்களைத் தவிர வேறு எதையும் வரைய மாட்டார். அதுவும் கோயில் கருவறையை பார்த்து வரைவதில் அவர் வித்தகர்.
முதன் முதலில் 1969ம் ஆண்டு காஞ்சி ஏகாம்பரநாதரை கோட்டோவியமாக வரைய ஆரம்பித்தார். அன்றிலிருந்து அவரது தூரிகையில் வந்தமர்ந்த கடவுளர்கள் அநேகம். தநுசுவின் ஓவிய பாணி என்பது கற்பனையில் உருவாக்குவதோ, ஏற்கெனவே புனையப்பட்டதை மீட்டுருவாக்குவதோ அல்ல. அவரின் தூரிகை நேரிடையாகக் கடவுள் ரூபத்தைத் தொட்டு கடவுளர்களின் ஆடை, ஆபரணங்களை ஸ்பரிசித்து அதை வெட்டவெளியாய் இருக்கும் தாளில் ஸ்தாபித்தல் எனலாம். அதனாலேயே அவரது ஓவியங்கள் பூஜை அறையில் வாசம் செய்யத் தகுதியானவை என மக்கள் நம்பினர். அதனாலேயே கல்கி தீபாவளி மலர் ஓவியங்கள் பூஜை அறைக்கு இடம்பெயர்ந்தது எனலாம்.
கல்கி குழுமத்தின் ‘தீபம்’ இதழுக்காக அவரைச் சந்தித்து பேட்டி எடுக்கையில், அவர் வரைந்த சிதம்பரம் நடராஜர் ஓவியத்தைப் பற்றிக் கேட்டபோது, அந்த ஓவியத்தை வரைய அவருக்குப் பல ஆண்டுகள் ஆனதாகக் குறிப்பிட்டார். காரணம், கருவறையை புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. மக்கள் வந்து போகும் அவ்விடத்தில் அங்கேயே உட்கார்ந்து வரையவும் அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, அவர் ஒரு நாள் விடாமல் தினமும் நடராஜரை தரிசித்து விட்டு நேராக வீட்டுக்கு வந்து தனது கண் முன் என்ன பார்த்தாரோ அதை நோட்டில் குறிப்பெடுத்து குறிப்பெடுத்து, பிறகு அந்த ஓவியத்தை வரைந்து முடித்தாராம்.
ஓவியத்தில் சிவபெருமானுக்கு சாத்தப்பட்டுள்ள ஆபரணங்கள் என்னென்ன தெரியுமா? ஒரு அங்குல ‘நெற்றி பச்சை ’எனும் 3 கற்களும் அதைச் சுற்றி வைரங்களுமான மாலை. அதையடுத்து நீலக்கல் பதக்கம், கும்பாபிஷேக பதக்கம், கௌரி சங்கரம் என்கிற சிவயவசி என்கிற எழுத்து பொறித்த மாலை, பின் மகர கண்டி மாங்காய் மாலை, அடுத்து பிரம்ம கபால மாலை எல்லாம் அந்த ஓவியத்தில் உண்டு.
எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து பலர், ‘அதென்ன பெரிய சிதம்பர ரகசியமா? என்னிடம் சொல்லாம மறைக்குற’ என்று சொல்லக் கேட்டிருக்கலாம். அதுகுறித்து ஓவியர் தநுசுவிடம், ‘சிதம்பர ரகசியம் என்றால் என்ன?’ என்று கேட்டேன்.
அதற்கு அவர் கூறியது, “இந்தக் கருவறையில் சிதம்பர ரகசியம் என்கிற ஒரு சிவ யந்திரம் உண்டு. அது பார்வைக்குத் தெரியாமல் மறைத்திருப்பர். அதன் மேல் அதற்கு இரு புறமும் தங்க வில்வ மாலை சாத்தப்பட்டு இருக்கும். நாம் மறைக்கும் ஒரு விஷயத்தைத்தான், ‘அதென்ன சிதம்பர ரகசியமா?’ எனக் கேட்கிறோம். ஆனால், ஒருபுறம் மட்டும் தெரியும்படி தொங்கிக்கொண்டிருக்கும் தங்க வில்வ மாலை ஏழு மட்டுமே இந்த ஓவியத்தில் உங்களுக்குத் தெரியும். அதற்கு பின் இருக்கும் சிவ யந்திரம் தெரியாது. அதுவே சிதம்பர ரகசியம்.
நடராஜ பெருமானின் பாதத்தின் கீழே பெரிய பெட்டியின் மேல் தெரியும் ரத்தின சபாபதியும், அதையொட்டி சின்ன பெட்டியின் மேல் தெரியும் ஸ்படிக லிங்கமும், ஓவியத்தின் ஓரத்தில் தெரியும் வெள்ளியாலான முகலிங்கமும் உங்களுக்குக் கூடுதல் தகவல்” என்றார். இந்தத் தகவல்கள் ஆன்மிகமாக இல்லாவிட்டாலும் நமது கலையின் ஆவணமாகக் கூட எடுத்துக்கொள்ளலாம்தானே.
ஓவியர் தநுசு வரைந்த ஓவியத்தில் எனக்கு மிகவும் பிடித்தது திருக்காளத்தி சிவன் கோயில் கர்ப்பகிரக ஓவியம்தான். சீ காளம் என்பது இத்திருத்தலத்தின் ஆதிபெயர். சீ என்பது சிலந்தி, காளம் என்பது யானை. இந்த இரு ஜீவராசியும் வழிபட்ட இடம். இது கண்ணைப் பெயர்த்துத் தந்த கண்ணப்ப நாயனார் வழிபட்ட திருத்தலம்.
ஓவியத்தை உற்றுப் பாருங்கள். சுவாமி திருமேனியில் சாத்தப்பட்ட தங்க ஏணியில் 9 படிக்கட்டு இருக்கும். அது நவக்கிரகத்தை குறிக்கும். கடைசி படி பெரிதாக இருக்கும். அது ராகு-கேது. 27 மலர்கள், 27 நட்சத்திரங்களைக் குறிக்கும். திருமேனியில் பாணத்தின் கீழ் சிலந்தி நடுவே 5 தலை நாகம்.
ஒரு ஓவியத்தில் எத்தனை தகவல். இதை நேரிடையாக அங்கேயே உட்காந்து 2005 வாக்கில் வரைந்தார் ஓவியர் தநுசு என்கிற செந்தில்குமார் ராமனாதன் (Sendil kumar Ramanathan).
இவ்விதமாக ஓவியத்தின் மூலம் ஆன்மிக சேவையாற்றியவர் ஓவியர் தநுசு. கலைகளின் நுட்பத்தை தமது ஆன்மிக மரபின் துல்லியமான செய்திகளை தூரிகை மூலம் செதுக்கியவர் தநுசு. நமது ஞான சிற்பிகள் உருவாக்கிய விக்கிரங்களையே வரைந்து கொண்டிருந்தவர், சிவனை நேரிடைய வரைய பயணப்பட்டார் போலும். போய் வாரும் கலைஞரே.