பாசம்

பாசம்
Published on

கு அலுவலகத்திலிருந்து மாலை சீக்கிரமாகவே வந்துவிட்டான்.

வீட்டினுள் நுழையும் பொழுதே வத்தல் குழம்பு வாசனை மூக்கை துளைத்தது.

மாடிப் படிக்கட்டில் உட்கார்ந்து ஷூக்களை கழற்றி வைத்துவிட்டு வீட்டினுள் நுழைந்தான்.

மனைவி உதயா துணி மடித்துக் கொண்டிருந்தாள்.

"அண்ணி வந்திருக்காங்கதானே?"

"ஆமாம்! எப்படி கண்டுபிடிச்சீங்க?"

"தெரு முனையிலேயே வத்தக் குழம்பு வாசம் காட்டிக் கொடுத்திடுச்சே! அவங்கள தவிர வேற யாரால இப்படி மணக்கும்படி செய்ய முடியும்? எப்ப வந்தாங்க? எங்கே உள்ள இருக்காங்களா?"அடுத்தடுத்த கேள்விகளை அடுக்கினான் ரகு.

"மதியம் வந்தாங்க.பிள்ளைங்கள கூப்பிட்டுகிட்டு கடைவீதி போயிருக்காங்க!"

"ஏன்?"

"உங்க பொண்ணு ஐஸ்கிரீம் வேணும்ன்னு அடம்பிடிச்சா...சொல்ல சொல்ல கேட்காம கடைக்கு கூட்டிட்டு போயிருக்காங்க.."

"என்ன விஷயமா வந்தேன்னு சொன்னாங்களா?"

"இல்லை.. எதுக்கு அவசரப்படுறீங்க? இப்ப வந்திடுவாங்க. போய் பிரஷப் ஆகி வாங்க.." உதயா சொல்ல, பாத்ரூம் நோக்கிப் போனான் ரகு.

'ம்.. இன்னும் இரண்டு நாள் அண்ணி புராணம் தான்..'மனதிற்குள் சொல்லிக்

கொண்டாள்.

"தம்பி வந்திடுச்சா?"கேட்டுக் கொண்டே வீட்டினுள் நுழைந்தாள் பார்வதி.

'அப்பா.. என்ன பாசம்!' உதயா நினைத்துக் கொண்டாள்.

"அக்கா இப்பதான் வந்தாரு. முகம் அலம்ப போயிருக்காரு.."

"அம்மா... அம்மா... பெரியம்மா பெரிய ஐஸ்கிரீம் வாங்கி தந்தாங்க... ஐயா... ஜாலி ஜாலி..."குதித்தான் சின்னவன்.

பிரஷ் அப் செய்து கொண்டு வேகமாக ஹாலுக்கு வந்தான் ரகு.

ரகுவின் அண்ணனை பார்வதி திருமணம் செய்து கொண்டபோது ரகு ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான்.

அம்மா இல்லாத பிள்ளை என்பதால் ரகுவின் அப்பா, அண்ணன் இருவரும் நிறைய செல்லம் கொடுத்து வளர்த்து வந்திருந்தனர்.

வீட்டிற்கு ஒரு பெண் சமைத்துப் போட தேவை என்ற அவசரத்தில் இருபத்தி நாலு வயசிலே ரகுவின் அண்ணனுக்கு பார்வதியை கட்டி வைத்து விட்டார் ரகுவின் அப்பா.

பார்வதி ரொம்ப பொறுப்பானவள். நன்றாக குடும்பத்தைக் கவனித்துக் கொண்டாள்.

சுட்டியாக இருந்த ரகுவை அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.

துடுக்காக இருந்த ரகுவை கண்டிக்கும் நேரத்தில் கண்டித்தும், செல்லம் கொடுக்க வேண்டிய நேரத்தில் செல்லம் கொடுத்தும் ஒரு அம்மாவைப் போல் பார்த்துக் கொண்டாள்.

'எல்லாம் அவளுக்குன்னு பிள்ளை பெறக்கட்டும்... அப்புறம் பார்வதி மாறிடுவா!'என்ற அக்கம் பக்கத்தினர் பேச்சை உதாசீனப்படுத்தினாள்.

பார்வதிக்கு அடுத்தடுத்து இரண்டு பெண்பிள்ளைகள் பிறந்தது.

தன் குழந்தையை கவனிப்பது போலவே ரகுவையும் பார்த்துக் கொண்டாள்.

"தம்பி எப்படிப்பா இருக்கிற? போன தடவை வந்தப்ப முதுகு வலின்னு டாக்டர்கிட்ட போயிட்டு வந்தேன்னு சொன்னியே, இப்ப வலி எப்படி இருக்கு?"அக்கறையுடன் கேட்டாள் பார்வதி.

"இப்போ சரியாயிடுச்சு அண்ணி! ஊர்ல அண்ணா, பிள்ளைங்க நல்லா இருக்காங்களா? நீங்க எப்படி இருக்கீங்க?"

"எல்லோரும் நல்லா இருக்காங்கப்பா!"

ரகு அண்ணி வந்த விஷயம் என்ன என்று அவர்கள் வாயாலேயே சொல்லட்டும் என காத்திருந்தான்.

"தம்பி…!"என்றவள் பேச்சை நிறுத்தி,யோசித்து, சொல்வதா? சொல்ல வேண்டாமா? எனத் தயங்கினாள்.

"என்ன அண்ணி தயங்காம சொல்லுங்க.."

"இல்லப்பா நம்ம பெரியவ நிர்மலா படிப்ப முடிச்சிட்டா. அவளுக்கு வரன் பார்க்கலாம்னு.."

"அதுக்கு எதுக்கு அண்ணி தயக்கம்? அதற்கென்ன தாராளமா வரன் பார்த்திடலாமே!"ரகுவின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.

பார்வதி முகம் வாடி இருந்தது.

"அது ஒண்ணும் இல்லப்பா.. வரன் பார்க்க முடிவு பண்ண மறுநாளே அவள் யாரோ ஒரு பையனை விரும்பறாளாம்.."பேச்சை நிறுத்திவிட்டு பார்வதி ரகுவின் முகத்தைப் பார்த்தாள்.

"பையன் சென்னையில்தான் வேலையில இருக்கானாம்.."

"எப்படி பழக்கமாம்?"

"போன வருஷம் ஒரு ப்ராஜக்ட் விஷயமா 15 நாள் இங்க தங்கி இருந்து ஒரு கம்பெனிக்கு போனாலே ஞாபகம் இருக்காப்பா?"

"ம்..."என்று சொல்லி தலையாட்டினான் ரகு.

"அதுல பழக்கமாயிடுச்சுன்னு சொல்றா... விஷயம் கேட்டதில் இருந்து உங்க அண்ணன் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கிறாரு.."

ரகு மௌனமாக இருந்தான்.

"இன்னொரு பெண் இருக்கிறா அவளை யார் கட்டிப்பா? அவன் வேற சாதி.. கோபமா கத்தறாருப்பா.."

அண்ணன் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது. 'அடுத்தவள் விமலா திருமணம் ஒரு கேள்வி குறியாக நிற்கும்... அவளைப் பெண் பார்க்க வர்றவங்ககிட்ட கூனிக்குறுகி நிக்கணும்!

பலமாக யோசித்தான் ரகு.

பாவம் ஒருவனை மனதார விரும்பி விட்டாள்... பெற்றோர் சம்மதம் கேட்கிறாள்..அவள் பக்கமும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது…

"சரி அண்ணி! நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை அந்த பையன் வேலை செய்யுற கம்பெனிக்கு போய் பார்த்து, விசாரிச்சுட்டு வர்றேன்... அதுக்கப்புறம் எதுவா இருந்தாலும் முடிவு பண்ணிக்கலாம்..."

"நீ தான் பா இந்த பிரச்னையை தீர்த்துவைக்கணும்!"

வருத்தத்துடன் சொன்னாள் பார்வதி.

"சரி அண்ணி.கவலைப்படாதீங்க ! நான் எந்த பிரச்சனையும் இல்லாமல் பார்த்துக்கறேன்.."

சொல்லி விட்டு ஆழ்ந்த யோசனையில் மூழ்கினான் ரகு.

பார்வதி சமையல் அறை சென்று இரவு டிபன் செய்யத் தொடங்கினாள்.

ரகுவிடம் பிரச்சினையை சொல்லிவிட்டதில் மன பாரம் குறைந்தது. நிம்மதியாக ரகுவிற்கு பிடித்த சப்பாத்தி,குருமா தயாரிக்கும் வேலையில் திளைத்தாள்.

"என்ன உதயா அண்ணி வந்ததும் சமையல் வேலையை அவங்க தலையில் கட்டிட்டியா?"

"ஆமாங்க. உதவிக்கு கூட வரவேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க!"

"இது என்ன புதுசா? அண்ணி இருக்கற இரண்டு நாளும் உனக்கு ஜாலிதான்!"சொல்லி விட்டு ரகு சிரித்தான்.

மறுநாள்.

நிர்மலா காதலிக்கும் பையனின் கம்பெனிக்கு சென்று விசாரித்தான்.எல்லோரும் நல்ல அபிப்ராயம் சொல்ல தன் அண்ணன் மகள் சரியான ஆளைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறாள் என மனதில் நினைத்துக் கொண்டான்.

இறுதியாக அந்தப் பையனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ரகு பேசினான்.

பார்க்க லட்சணமாக இருந்தான். நல்ல குணம் அவனுடைய பேச்சில் இருந்து தெரிந்தது.

நல்ல பையனாக இருந்ததால் சாதிப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை ரகு.

கிராமத்திற்கு அன்றே சென்றான்.நேரில் அண்ணனைப் சந்தித்து நிறையப் பேசி திருமணத்திற்கு சம்மதிக்கச் செய்தான்.

"பணத்தைப் பத்தி கவலைபடாதீங்கண்ணா... நான் பார்த்துக்கறேன்.."ரகு நம்பிக்கை கொடுத்தான். பார்வதியிடம் சொன்னபடியே திருமணத்தை நல்லபடியாக முடித்து வைத்தான்.

திருமணத்திற்கு வந்திருந்த உதயாவின் அக்கா பரிமளா,

"உன் வீட்டுக்காரர் எவ்வளவு கடன் வாங்கி கல்யாணம் நடத்தினாரு?"

"அஞ்சு லட்சம் அக்கா.."

"அஞ்சு லட்சமா?"

"ஆமாம்க்கா.."

"என்னடி உன் வீட்டுக்காரர் கையில காசு இருந்தா கொடுத்து உதவலாம். கடன் வாங்கி கல்யாணம் செய்து வைக்கிறாரே... வட்டி யார் கட்டறது? உனக்கும் பிள்ளை குட்டி இருக்கு... உன் பொண்ணு எப்ப வேணும்னாலும் வயசுக்கு வந்திடுவா போலிருக்கு.. அதுக்கு சடங்கு செய்ய காசு பணத்திற்கு எங்க போவ..?"

கொளுத்திப் போட்டாள் பரிமளா.

அமைதியான குடும்ப உறவில் விரிசலுக்கு அஸ்திவாரம் போட்டு விட்டு போய்விட்டாள் பரிமளா.

அதன் பின் ரகுவின் ஒவ்வொரு செயல்பாட்டையும் அதே கண்ணோட்டத்தில் பார்த்தாள் உதயா.

"இதோ பாரு உதயா... நான் என்னை வளர்த்து ஆளாக்கின என் அண்ணன்,அண்ணிக்கு நன்றி கடன் பட்டிருக்கேன். என்னை செலவு பண்ணி படிக்க வைச்சிருக்காங்க.."

"உங்களை என்ன சும்மாவா படிக்க வைச்சாங்க? உங்க பங்கு நிலத்தை வித்து படிக்க வைச்சாங்க.."

உதயாவின் பேச்சு ரகுவை சூடேற்றியது.

அமைதியாக அங்கிருந்து எழுந்து சட்டையை மாட்டிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தான்.

தொடர்ந்து உதயா பேசுவதைக் கேட்டால் கோபம் தலைக்கேறி ஏதாவது விபரீதத்தில் முடிந்துவிடுமோ என பயந்துதான்.

வீட்டைவிட்டு வெளியே வந்துவிட்டான்.

ஒரு மணி நேரம் லைப்ரரியில் கழித்தான்.

பின் வீட்டிற்கு வந்தான்.

பிள்ளைகள் படித்துக் கொண்டிருந்தனர்.

வீடு அமைதியாக இருந்தது.

உதயாவிற்கும் தெரியும் ரகு அவன் அண்ணன், அண்ணியைப் பற்றி குறை சொன்னால் கோபப்படுவான் என்று.

பார்வதி ஒவ்வொரு முறை வீட்டிற்கு வரும் பொழுதும் ஏதாவது ஒரு பணப்பலன் பெற்றுச் செல்வதை நினைத்து வயிரெரிந்தாள்.

'என்னதான் வளர்த்து ஆளாக்கி இருந்தாலும், அதுக்குன்னு பாசத்தை காட்டி இப்படியா பணம் பறிப்பாங்க? அவங்களை சொல்லி குத்தமில்லை.. என் வீட்டுக்காரர் தான் நல்ல ஏமாளியா இருக்கிறாரே!' என்று நினைத்தவாறே சமையல் செய்வதில் மும்முரமானாள்.

'இவ்வளவு நாள் உதயா எந்த எதிர்ப்பும் சொல்லவில்லை. ஆனால் இப்போது எதிர்கிறாளே!' யார் கண்பட்டதோ தெரியலை!'

வருந்தினான் ரகு.

அன்று மாலையே

பார்வதி ஊரிலிருந்து வந்திருந்தாள்.

மணி ஆறு இருக்கும்.

உதயா சரிவர முகம் கொடுத்து பேசவில்லை.

மனதிற்கு கஷ்டமாக இருந்தது பார்வதிக்கு.

அன்று பார்த்து ரகு அலுவலகத்தில் முக்கியமான வேலை.

வழக்கமாக ஆறரைக்கு வருபவன் எட்டு மணிக்கு சோர்வாக வந்தான்.

அண்ணியைப் பார்த்ததும் ரகுவால் முகத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியவில்லை.

ரகுவின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்தாள் உதயா.

ஏதாவது சண்டை இழுத்து,பார்வதி இனி வீட்டுப் பக்கம் வராமல் தடுக்க வேண்டும் என்று நினைத்தாள்.

ஆனால் அதற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை ரகு.

"அண்ணி ஆபிஸில டைட் ஒர்க். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து வந்திடறேன். தப்பா நினைக்காதீங்க.."

"சரி தம்பி!"பார்வதி பதில் அளித்தபோதிலும் உள்ளூர வருந்தினாள்.

வளர்த்தவளுக்கு தெரியாதா? ஏதோ மறைக்கிறான் ரகு என்று!

மனதிற்குள் அண்ணி வருத்தப்படும்படி ஏதாவது உதயா பேசி காயப்படுத்திவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.

படுக்கையில் விழுந்தவன் சங்கடத்தில் படுத்திருந்தான்.

ஓய்வெடுக்க அறைக்கு நுழையும் போது அண்ணியைப் பார்த்தான்.

அண்ணி முகம் வாடியிருந்தது.

கொஞ்ச நேரம் படுக்கையில் உருண்டான். போலியாக படுத்திருப்பது வேதனை தந்தது.

என்ன நடந்தாலும் சரி என படுக்கைஅறையிலிருந்து வெளிவந்தான்.

"எப்படிபா இருக்கிற?"

"நல்லா இருக்கேன் அண்ணி! அண்ணா, விமலா நல்லா இருக்காங்களா?"

"ம்.."சுரத்தை இல்லாமல் சொன்னாள் பார்வதி.

"நிர்மலா எப்படி இருக்கு அண்ணி?"

"ம்..நல்லா இருக்காப்பா.அவங்க வீட்டிற்கு போயிட்டு தான் வரேன்."

இருவருக்கும் டிபன் எடுத்து வந்து வைத்தாள் உதயா.

"உதயா! குழந்தைகளுக்கு முதல்ல டிபன் கொடும்மா.. நான் அப்புறம் சாப்பிட்டறேன்.."

"இல்லைக்கா நீங்க சாப்பிடுங்க.. அவங்களுக்கு நாளைக்கு டெஸ்ட் இருக்கு. சாப்பிட்டா தூக்கம் வருதுன்னு படிக்காம தூங்க போயிடுவாங்க. இன்னும் அரைமணி நேரம் கழிச்சு நான் அவங்களோட சாப்பிட்டறேன்.."

அதற்கு மேல் எதுவும் பேசவில்லை பார்வதி.

கீழே குனிந்து தட்டிலிருந்த சப்பாத்தியை பிட்டு சட்னி தொட்டு சாப்பிடத் தொடங்கினாள் பார்வதி.

"அண்ணி.. என்ன விஷயமா வந்து இருக்கீங்க?"கேட்க வேண்டாம் என நினைத்தவன்,

ஏதாவது முக்கியமான உதவி தேவைப்படுகிறதோ எனக் கேட்டு விட்டான்.

"ஒண்ணும் இல்லப்பா! சாப்பிடு!"

அதற்கு மேல் எதுவும் பேசவில்லை ரகு.

சாப்பிட்டு முடிக்கும் வரை மெளனம்.

பார்வதி சாப்பிட்டு முடித்தாள்.

பார்வதி ஊரிலிருந்து எடுத்து வந்த கட்டை பையை எடுத்தாள். துலாவி அதிலிருந்து ஒரு மஞ்சள் பையை எடுத்து,"தம்பி! உங்கண்ணன் உன்கிட்ட கொடுக்க சொன்னாரு.."என்று சொல்லி ஐநூறு ரூபாய் கட்டு ஒன்றை நீட்டினாள்.

"என்ன அண்ணி இது?"

"நிர்மலா கல்யாணத்துக்கு வாங்கி கொடுத்த கடன் அடைக்க ஒரு லட்சமும் வட்டியும் இருக்கு தம்பி. தம்பி கஷ்டப்படுவான் கொஞ்சம் கொஞ்சமா கொடுத்திடுவோம்னு உங்க அண்ணன் சொன்னாருப்பா!"

" அண்ணனுக்கு ஏது இவ்வளவு பணம்..?"

"வெளில கொஞ்சம் பணம் ரொம்ப நாளா வராம இருந்ததாம்... நடையா நடந்து பணம் அவசர தேவைன்னு அரிச்சி வாங்கிட்டு வந்தேன்னு சொன்னாருப்பா.."

தயக்கத்துடன் வாங்கிக் கொண்டான்.

காலை எழுந்தவுடன் ஊருக்கு புறப்பட்டாள் பார்வதி.

ரகு எவ்வளவோ சொல்லியும் புறப்பட்டுவிட்டாள் பார்வதி.

"தம்பி நானே பஸ் ஏறி போயிடறேன்..நீ ஆபிஸ் கிளம்பற வேலையைப் பாரு.."

மனசுக்கு கஷ்டமாக இருந்தது ரகுவிற்கு.

அரக்க பறக்க கிளம்பினான் ரகு.

"எனக்கு இப்பதான் ஞாபகம் வருது ஒரு கிளையண்ட் பார்க்க போகணும்' என்று சொல்லி புறப்பட்டான்.

அவன் நினைத்தது போலவே அண்ணி பஸ் வராமல் காத்திருந்தாள்.

ரகுவைப் பார்த்ததும் பார்வதி முகம் மலர்ந்தாள்.

கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது.

"அண்ணி அழாதீங்க! எல்லோரும் பார்க்கிறாங்க..வாங்க ஹோட்டலுக்கு போவோம்.."

வண்டியில் அழைத்து சென்று டிபன் வாங்கி கொடுத்தான்.

பஸ் ஏற்றி விடும் பொழுது "அண்ணி உதயா பேசியது எதுவும் மனசில் வைச்சுகாதீங்க! அண்ணன் கிட்ட சொல்லுங்க பணம் அவசரமில்லை மேனேஜ் பண்ணிப்பேன்னு சொல்லுங்க"

ரகு சொல்லிவிட்டு நிம்மதி பெருமூச்சு விட்டான்.

கை அசைத்தாள் பார்வதி.

பஸ் புறப்பட்டு வேகமெடுக்க அங்கிருந்து புறப்பட்டான் ரகு.

உதயா தன் அக்காவிடம் இரவு செல்லில் பேசியது நினைவுக்கு வந்தது.

"அக்கா நீ சொன்னதுக்கு அப்புறம்தான் புரியுது. என் வீட்டுக்காரரோட பாசத்தை நல்லா பயன்படுத்தி அவங்க வேலையை சாதிச்சிக்கிட்டு இருக்காங்கன்னு. பத்து நாளைக்கு ஒரு முறை வீட்டுக்கு வந்திடுவாங்க.."

தூங்குவது போல் பாசாங்கு செய்து கேட்டுக் கொண்டு இருந்த ரகு கண்கள் கலங்கின.

பாசத்தை வேஷம் என போதித்த உதயாவின் அக்காவை சபித்தான்.

உண்மையான பாசம் ஒரு நாள் தெரியாமலா போய்விடும்?

கடைசியாக ஹோட்டலில் சாப்பிடும் போது அண்ணி வருத்தத்துடன் சொல்லியது ரகுவின் மனதை அரித்தது. வருந்தினான்.

"தம்பி! நேத்து நான் வீட்டுக்கு வந்ததும் குழந்தைங்க ஆசையா ஓடி வந்தாங்க. உதயா அதட்டி போய் படிங்கன்னு சொல்லி விரட்டிட்டா.. பாவம் பசங்க.."

'சே! ஏன் உதயாவிற்கு புத்தி இப்படி ஆயிடுச்சு?'பலவாறு யோசித்தப்படி அலுவலகம் போய் சேர்ந்தான்.

மதியம் 3 மணி.

அண்ணனிடமிருந்து போன் வந்தது.

அண்ணன் போன் செய்யமாட்டார். அண்ணிதான் போன் செய்து பேசிவிட்டு, அண்ணனிடம் பேச கொடுப்பாள்.

"ஹலோ.. சொல்லுங்க அண்ணா.."

மறுமுனையில் பதில் வராமல் விசும்பல் சத்தம் மட்டும் கேட்டது.

"அண்ணா என்னாச்சு?" பதறினான் ரகு.

"உன் அண்ணி…"

"அண்ணிக்கு என்னாச்சு?"

"அண்ணி நம்மள விட்டு போயிட்டாப்பா.."மறுமுனையில் பேச முடியாமல் திணறிப் பேசி முடித்தார் ரகுவின் அண்ணன்.

ஊருக்கு வந்ததும் பார்வதி குடிக்க தண்ணீர் கேட்க,மகள் எடுத்து வந்து கொடுத்ததும் குடித்த மறுநிமிடமே மயங்கி சரிந்தாள் பார்வதி.

பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு போன பிறகு கண்விழித்து,"எனக்கு ஏதாவது ஒண்ணு ஆயிட்டா என் மூத்த மகன் ரகுதான் கொள்ளி போடணும்!"என்று திக்கித் திணறி சொல்லி விட்டு கண்மூடியவள் பின் கண்களைத் திறக்கவில்லை.

அடித்து பிடித்து கிராமத்திற்கு வந்து சேர்ந்தான் ரகு.

கதறிக் கொண்டு இருக்கும் ரகுவைப் பார்த்து ஆறுதல் சொல்லக்கூட தகுதியில்லாத வளாக திக்பிரம்மையுடன் நின்றிருந்தாள் உதயா.

பார்வதி சிரித்த முகத்துடன் தன்னுடைய பாசத்தை நிரூபித்துவிட்டாள்.

மூத்த மகன் ரகு கொள்ளிச் சட்டி எடுத்து நடக்க, மயானம் நோக்கி புறப்பட்டாள் பார்வதி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com