படைப்பாளிகளுடன் வாழ்வது போராட்டமா? கொண்டாட்டமா?

உல்லாசம் பொங்காத தீபாவளி
படைப்பாளிகளுடன் வாழ்வது போராட்டமா? கொண்டாட்டமா?

பகுதி – 9

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் - கெளரவாம்பாள்

ழுத்துக்கும் அனுபவத்துக்கும் இடைவெளி இல்லாத எழுத்தாளனின் எழுத்து மட்டுமே உயிரோட்டம் கொண்டது. அவன் கண்டதை, கேட்டதை, அதிலும் அனுபவத்தில் உணர்ந்ததை எழுத்தாக்கிய காரணத்தினால்தான் தலைமுறை தாண்டியும்கூட சமுதாயத்தோடு பொருந்துவதாய் உயிர் துடிப்போடு மணம் வீசுகிறது ‘செங்கம்படுத்தான் காட்டில் பூத்த மலர்கள்.’

மாடசாமி
மாடசாமி

வயல் வெளிக்குச் செல்லும் சிறுவன் குளக்கரையில் அமர, துள்ளிக் குதித்த கெண்டை மீனைப் பார்த்து, அதைப் பிடிக்க ஆசைபடுவதும், ரசிப்பதும், கல்லெறிந்து சுட்டித்தனம் செய்வதும் இயல்பு. ஆனால், அதையெல்லாம் தாண்டி அந்தப் பிஞ்சு மனத்தில்

‘ஓடிப்போ ஓடிப்போ கெண்டைக் குஞ்சு – கரை

ஓரத்தில் மேயாதே கெண்டைக் குஞ்சு

தூண்டில்காரன் வரும் நேரமாச்சு – ரொம்பத்

துள்ளி குதிக்காதே கெண்டைக் குஞ்சே’

என்ற வரிகள் தோன்றுவது நம்மையெல்லாம் திகைப்பூட்டுகிறது. அதுதான் அவனின் முதல் கவிதை வரிகள். ஊரார் அதனைத் திரும்பத் திரும்ப பாடச் சொல்லி கேட்டு மகிழ்ந்து உற்சாகப்படுத்தியதே அவனுடைய பாட்டுலகிற்கு ஆணிவேராக அஸ்திவாரமாக அமைந்தது. அவன் பாடிய 200 பாடல்களும் இன்றைக்கு தமிழ் நெஞ்சங்களில் துள்ளிக் குதித்துக்கொண்டே இருக்கின்றன.

பிஞ்சு உள்ளத்தில் மீனுக்கு வரவிருக்கிற துயரத்தை அறிய முடிந்ததால்தான் சமுதாயத்தின் துயரத்தை முன்கூட்டியே சுட்டிக் காட்டியதோடு அதற்கான நிவாரணத்தையும் எடுத்தியம்ப முடிந்தது.

விவசாயம், மாடு மேய்ப்பர், மாட்டு வியாபாரி, மாம்பழ வியாபாரி, இட்லி வியாபாரி, முறுக்கு வியாபாரி, தேங்காய் வியாபாரி, கீற்று வியாபாரி, மீன் நண்டு பிடிக்கும் தொழிலாளி, மிஷின் டிரைவர், தண்ணீர் வண்டிக்காரன், அரசியல்வாதி, பாடகர், நடிகர், நடனக்கலைஞர், எழுத்தாளன் இவையெல்லாம் அவன் வாழ்ந்த பாத்திரங்கள். வறுமையை, வலியை, பசியை, ஏமாற்றத்தை, ஏமாளிகளை, ஏமாற்றுபவர்களை, காதலை, காதலியை மற்றும் காசை ரசிக்கத் தெரிந்த காரணத்தினால்தான் நம்மை ரசிக்க, ருசிக்க மட்டுமல்ல யோசிக்கவும் வைத்தவன் செங்கம்படுத்தான்.

பாரதிதாசனிடம் ‘குயில்’ பத்திரிகையில் உதவியாளராக இருந்தவேளையில் அ.கல்யாணசுந்தரம் என்பதினை ‘அகல்யா’ என்று உருவாக்கி,
அப் புனைப்பெயரோடு எழுத, உண்மையிலேயே பெண்பிள்ளையொருத்தி எழுதியதென பாரதிதாசன் பாராட்ட, அதில் உள்ள ரகசியம் செங்கம்படுத்தானுக்கு மட்டுமே தெரிந்திருந்தது. ஆனால், அந்தக் கவிதை மட்டுமே யாரிடமும் இதுவரையில் சிக்கவில்லை.

‘படித்தால் மட்டும் போதுமா’ என்ற படத்தின் கதைக்கு எதிர்மாறான சம்பவமொன்று செங்கம்படுத்தான் வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில் உண்டு என்பது சுவாரசியமான தகவல். அண்ணன் கணபதிராமன் பெண் பார்க்கச் சென்ற இடத்தில் பெண்ணைப் பார்த்ததும் “பெண் ரொம்ப அழகாக இருக்கிறாள். அவளுக்குப் பொருத்தமான மாப்பிள்ளை என் தம்பிதான். அவன் சென்னையிலிருக்கிறான். பெரிய ஆளா வருவான்” என்று சொன்னதை இரு குடும்பத்தினரும் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொள்ள, கணபதிராமன் திருமணம் நடைபெறும்வரை கெளரவாம்பாள் காத்திருந்து, பட்டுக்கோட்டையின் கரம் பிடித்தார்.

கெளரவாம்பாளின் அழகை எண்ணி உருவான பாடலே “என்னருமை காதலியே வெண்ணிலாவே, நீ இளையவளா இல்லை மூத்தவளா...” எந்தக் கவிஞனுக்கும் வராத கற்பனை வரிகள் நம் உதட்டோடு இன்றும் உறவாடிக்கொண்டிருக்கிறது.

புரட்சிக்கவிஞன் தலைமையில் திருமணம் என்பதே புரட்சி மட்டுமல்ல பெரும் பாக்கியம்.

அச்சடிக்கப்பட்ட தன் கவிதை புத்தகம் வாங்க காசு இல்லாத பட்டுக்கோட்டை, மிச்சத்தை சென்னையில் பார்க்கலாம் என்று சென்ற இடத்தில், உடனிருந்த ஓ.ஏ.கே. தேவரோ அவர் பாட்டு நோட்டினை பழைய பேப்பார்காரனிடம் போட மதியவேளை வயிறு நிறைந்தது. பாட்டு பசியைத் தீர்க்கும் என்பதை புரிந்து கொண்டதால்தான் அவன் வரிகள் உலகத் தமிழனத்தை உழைப்பாளர் வர்க்கத்தை, திரைப்பட உலகத்தை, அரசியல்வாதிகளை, ஆன்றோரை, சான்றோரை, சிறுவர்களை, இளைஞர்களை, பெண்களை, காதலர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது, திருப்தி கொள்ளச் செய்தது.

கெளரவாம்பாள்
கெளரவாம்பாள்

உயர்விலும் தன்னிலை மாறாத செங்கம்படுத்தான் கரம்பிடித்தவளோடு காட்டைவிட்டு ராயப்பேட்டை வந்தடைந்தார். கிராமத்துப் பெண், கல்யாண புதிது, சென்னையில் குடித்தனம் கட்டியவருக்காக இரவு காத்திருக்கையில்  கண்ணசந்துவிட, “வர்றது தெரியாம தூங்குறியா” என்ற வார்த்தைகள் வந்துவிழ, அங்கிருந்த அண்ணன் “ஏண்டா கோபப்படற? அவ சின்னப்புள்ளடா...” என்றுரைக்க, “சின்னப் புள்ளன்னா... கொட்டாங்கச்சிய வச்சி விளையாடச் சொல்லுங்க...” என்ற பதில் வருகிறது. அன்று முதல் தன் கணவர் தன்னை “சின்னப்புள்ளன்னே” அழைத்தாக சிரித்துக்கொண்டே கணவனின் வார்த்தைகளை ரசனையோடு நினைவுபடுத்துகிறார் கெளரவாம்பாள்.

வளைகாப்பு முடிந்து அண்ணியும் கெளரவாம்பாளும் அமர்ந்திருக்க, அவசரமாக வந்தவர் “வளைகாப்பைப் பற்றி ஒரு பாட்டு எழுதி வைங்க... இதோ வருகிறேன்” என்று சொல்லித் திரும்பியபோது, “அக்காவுக்கு வளைகாப்பு அத்தானுக்கு இடுப்புவலி” என்ற சீட்டை கெளரவாம்பாள் கொடுக்க, படித்துப் பார்த்து மனைவியை பாராட்டியவர்,  அதனையே முதல் அடியாகக் கொண்டு உருவானதுதான் கல்யாண பரிசில் “அக்காவுக்கு வளைகாப்பு, அத்தான் மனசிலே புன்சிரிப்பு...” என்பதாகும். மனைவியைப் பாராட்டுகிற பண்பை இங்கே காண முடிகிறது.

கணவரின் வரிகள் எல்லாமே பிடிக்கும் என்று சொன்ன கெளரவாம்பாள், “இரைபோடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே...” என்ற வரிகள் ரொம்பப் பிடிக்கும் என்று அவர் கூறியதைப் பார்க்கும்போது கணவர் மீனைப் பார்த்து வேதனைப்பட்ட மனசை மனைவியிடமும் காண முடிகிறது. இந்தப் புரிதலினாலேயே இணையான மனசும் இணையாத உடம்புமாய் வாழ முடிந்தது செங்கம் படுத்தான் தம்பதியினராக. 20 மாத வாழ்வை 72 வருடங்களாக நீட்டிக்க முடிந்தது!

“உன்னைக்கண்டு நான் ஆட என்னைக் கண்டு நீ ஆட உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி...” என்று தீபாவளிதோறும் பாடும் பாட்டினால் தன் துயரம் அதிகமாகிவிடும் என்று கெளரவாம்பாள் கூறுவதில் அவருடைய மனக்கிடக்கை அவரையும் அறியாமல் வெளிப்படுகிறது. வார்த்தைகளால் ஆறுதல் சொல்ல முடியாத இழப்பை தன் மகன் மூலம் நிவாரணம் தேடிக்கொண்ட பெண்மணி கெளரவாம்பாள்.

கெளரவாம்பாளுக்கு நிகழ்ந்தது வேறு எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது என்று இன்றைக்கும் நாம் நினைப்பதற்குக் காரணம் 79 ஆண்டுகள் வாழ்ந்தவர் கணவரோடு வாழ்ந்தது 20 மாதங்கள்தான்.

உலகம் சுபிட்சமாக வாழ நினைத்தவரோடு மனைவிக்கோ குழந்தைக்கோ வாழக் கொடுத்து வைக்கவில்லை.

‘குலதெய்வம்’ என்ற படத்தில் “முடியாது நம்ப முடியாது பெண்களின் பிடிவாதம் தீர்க்க முடியாது, வஞ்சகம் 3 அவுன்ஸ், வம்புத்தனம் 7 அவுன்ஸ்...” என்று பெண்களைப் பற்றி தரம் தாழ்த்தி பாடியபோது இது போன்ற பாடலைப் பாட பட்டுக்கோட்டை தேவையில்லை என்று பொது உடமை இயக்கத்தைச் சேர்ந்த பெண்மணி சொன்னபோது, “இனி ஒருபோதும் தன் வாழ்வில் பெண்களைப் பற்றி தவறாக எழுத மாட்டேன்” என மன்னிப்புக் கோரிய கடிதம் மட்டுமல்ல, அதுபோன்று வாழ்ந்தும் காட்டினார் பட்டுக்கோட்டை.

ஊருக்கு மட்டும் உபதேசம் அல்ல என்ற வகையில் தான் இல்லாவிட்டாலும் தன் குடும்பம் நிம்மதியாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தன் மறைவுக்குப் பின் தன் மனைவியை பொருளாதாரச் சிக்கலில் விடாமல் சென்ற ஓர் ஆண்மகன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். தன் மரணம் கண்டு யாரும் அழக்கூடாது என்கிற எண்ணத்தின் விளைவே பட்டுக்கோட்டையாரின் கடைசி வரிகள் கீழ்க்கண்டவாறு அமைந்தது.

“தானா எவனும் கெடமாட்டான்

தடுக்கி விடாம விழமாட்டான்

போனா எவனும் வரமாட்டான் – மேலே

போனா எவனும் வரமாட்டான் – இத

புரிஞ்சிக்கிட்டவன் எவனும் அழமாட்டான்...” என்பது நடிகை பண்டரிபாய்க்கு அவருடைய ‘மகாலட்சுமி’ படத்துக்காக எழுதிக் கொடுத்த அவருடைய வாழ்வின் கடைசி வரிகள், மரணச்செய்தி கேட்டு ஓடோடி வந்து வரிகளுக்கான வெகுமதியை அவருடைய காலடியில் வைத்து கதறிவிட்டார் பண்டரிபாய்.

ஒவ்வொரு எழுத்தாளனின் எழுத்திற்கு ராயல்டி தேடிப்போக வேண்டும். ஆனால், இவனுடைய எழுத்தில் முதல்வர் கருணாநிதி இணைந்திருந்தார், முதல்வர் எம்.ஜி.ஆர். அமர்ந்திருந்தார், முதல்வர் செல்வி ஜெயலலிதாவோ ரசித்திருந்தார். மூன்று முதல்வர்களின் காலத்தில் அல்ல அவர்களின் நெஞ்சங்களில் வாழ்ந்த ஒரே எழுத்தாளன் செங்கம்படுத்தான் என்பதால் ஒவ்வொருவரும் அவரவர் பங்குக்குப் பட்டுக்கோட்டையாருக்கு நன்றியை பல வகையில் காணிக்கை ஆக்கினர்.

கணவரின் உழைப்பில் கிடைத்த பொருளோடு, குழந்தைச் செல்வத்தோடு அவ்வப்போது கணவருக்காக தமிழ்ச் சமுதாயம் நடத்திய நிகழ்வுகளோடு துயரத்தை மறந்து அல்ல மறைத்து வாழ்ந்த ஒரு மானுட பெண்மணிதான் கெளரவாம்பாள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com