பெற்றோர்களின் ஹீரோக்கள்!

பெற்றோர்களின் ஹீரோக்கள்!
Published on

று முகங்களும், ஆறு வித வண்ணங்களும் கொண்ட  சுவாரசியமான ஒன்று. ரூபிக்ஸ் க்யூபை [Rubix’s cube] பற்றி சொல்ல வந்தேன். அதற்குள் உங்கள் வீட்டில் இருக்கும் முருகப்பெருமானின் படம் ஞாபகத்திற்கு வந்துவிட்டதா? ஒரு பெரிய சிக்கலை சின்ன சின்ன பாகங்களாகப் பிரிப்பதால், வேலைப்பளு குறைந்து, மிகவும் எளிதாக ஒவ்வொரு பாகத்தையும் முடிக்கும்போது, கடைசியில் அந்த சிக்கலே வெற்றிகரமாக கரைந்து போயிருக்கும் நம் வியர்வை துளிகளுடன். இதுதான் ரூபிக்ஸ் க்யூப் உணர்த்தும் தத்துவம். இதே ரூபிக்ஸ் க்யூப் கைக்கு அடக்கமாக இருப்பதால்தான்  நம்மால் அந்த புதிரைத் தீர்க்க முடிகிறது. அதே புதிருக்கு கை கால் முளைத்து, மனிதன் போல் உருவமெடுத்து, நம்முடன் சேர்ந்து வாழத் தொடங்கினால்? அந்த புதிரின் பின்னணி எப்பப்டி புலப்படும்? அவ்வாறு நம்முடன், நம்மை சுற்றி வாழ்பவர்கள் தான் இந்த ஜென் – சீ [Gen-Z] மற்றும் ஜென் – ஆல்பா [Gen-Alpha] மக்கள்.

1996 – 2010 வரையுள்ள இடைப்பட்ட காலக்கட்டத்தில் பிறந்தவர்கள் ஜென் – சீ அல்லது ஜெனரேஷன் சீ [Z] என்று அழைக்கப்படுகின்றனர். 2010- 2025 க்குள் பிறந்தவர்கள், இனி பிறப்பவர்கள் ஜென் – ஆல்பா [Gen-Alpha] குழந்தைகள் ஆவர். இவர்கள் என்ன யோசிக்கின்றனர், எவ்வாறு செயல்படுகின்றனர், என்ன தேவை இவர்களுக்கு என்று புரிந்து கொள்ள முடியாமல் திண்டாடும் பெற்றோர் பலர் உலகமெங்கும் உள்ளனர். இந்தக் கட்டுரை அவர்களைப் பற்றியோ அல்லது அவர்களிடம் பெற்றோர்கள் நடந்து கொள்ளும் முறையைப் பற்றியோ கிடையாது. இந்த கட்டுரை முழுக்க முழுக்க குழந்தைகள் பெற்றோரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியே. குடும்பம் என்னும் அமைப்பில் பெற்றோர் மற்றும் குழந்தைகள் என்ற இருதரப்பினரும் உள்ளனர். குழந்தை வளர்ப்பு முறைகளைப் பற்றி பல கதைகளும், புத்தகங்களும், திரைப்படங்களும், குறும்படங்களும், விழிப்புணர்வு, சொற்பொழிவுகளும் கொட்டிக் கிடக்கின்றன அனைவரிடத்திலும். அதனால், இந்தக் கட்டுரை இரண்டாமவர்களுக்கானதாக இருக்கட்டுமே!        

குழப்பமாக விளங்கும் இந்தக் குழந்தைகள் பெற்றோர் களுக்கு மட்டுமின்றி, அவர்களின் நண்பர்களுக்கும் உடன் படிக்கும் சக மாணவர்களுக்கும் சவாலாகத்தான் இருக்கின்றனர். இது ஏதோ ஒரு தவறோ அல்லது குறையோ என்று நினைக்க வேண்டாம். காரணம், அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். அதனுடன் பொறுப்புணர்வு என்ற ஒன்றை மறந்து விடுகின்றனர், சில சமயம் அவற்றை மறைத்தும் வைக்கின்றனர். இரண்டு, மூன்று மணி நேரம் போனில் தோழர்களுடன் பேசுவது அவர்களின் தனிப்பட்ட உரிமையெனில், தன் கடமைகளை செய்வதும் அவசியமே. பொறுப்புணர்வு என்னும் உண்மை கசப்பதால்தான், உரிமை என்னும் சாக்லேட் இனிக்கிறது. கசப்பைச் சுவைக்காமல் முழுமையான இனிப்பின் சுவையையும் அருமையையும் தெரிந்துகொள்ள முயல்வது, எந்தவொரு மருந்தையும் உட்கொள்ளாது நோய் நீங்கிவிடும் என்று நம்புவதற்கு சமமாகும். ஒருமுறை மருந்து எடுத்துக்கொள்வதால் மறுபடியும் நோய் வராது என்று உத்தரவாதம் இல்லைதான்; ஆனால் இருக்கும் நோயை விரட்டலாம் அல்லவா?

தற்போது பல குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் மிகவும் உரிமையாகப் பேசுகின்றனர். பாராட்டுதற்குரிய முன்னேற்றம். ஏனெனில் கடந்த காலங்களில் மிகவும் சுதந்திரமாக தங்கள் சொந்தப் பெற்றோரிடம் பேசுவது என்பது சினிமாவில் மட்டும் நிகழ்ந்த ஒன்றாகும். கண்களைப் பார்த்தே அம்மா என்ன சொல்ல வருகிறார் என்று பிள்ளைகள் புரிந்துகொள்ள வேண்டும். அப்பாவின் முகபாவனைகளை வைத்து அவரிடம் திருவிழாவிற்கு அழைத்து செல்லக் கேட்கலாமா, வேண்டாமா? என மிகவும் கவனமாக, யோசித்து யோசித்தே செயல்பட்டனர். இன்று இந்த நிலைமை அனேகமாக இல்லை. மாறாக குழந்தைகளின் கண்களைப் பார்த்துப் புரிந்து கொண்டு நடக்கும் பெற்றோர்கள்தான் இங்கு அதிகம். அப்படியிருக்கையில், சில குழந்தைகள் தங்கள் பெற்றோரை மரியாதைக் குறைவாக நடத்துவது பெற்றோரின் மனதை மிகவும் புண்படுத்துகிறது.  மரியாதைக் குறைவு என்றதும் தவறாக எண்ணிக்கொள்ள வேண்டாம். நண்பர்களிடம் உபயோகப்படுத்தும் வார்த்தைகளையும், மொழிப் பயன்பாட்டையும் பெற்றோரிடமும் உபயோகப்படுத்துவது அவர்களுக்கு சற்று சங்கடமாகவே உள்ளது.

இதற்கான காரணம் மிகவும்  எளிது. குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் ஒரு மெல்லிய கோடு இடைவெளி உள்ளது. உதாரணத்திற்கு நீங்கள் மிகவும் அழகான ஒரு பதின்பருவச் சிறுவன் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் குடும்பத்தினர் அனைவரும் உங்களை மிகவும் நேசிக்கின்றனர். அதே போல் உங்கள் நண்பர்கள் வட்டமும் விரும்புகின்றனர். இந்த இருதரப்பினரின் பாசத்திற்குப் பின் உள்ள காரணம் தான் இந்த இரண்டு உறவு முறைகளையும் வித்தியாசப்படுத்திக் காண்பிக்கிறது. உங்கள் நண்பர்கள் உங்களை விரும்புவதற்கு நீங்கள் அவர்களிடம் பேசும், நடந்துகொள்ளும் விதம், உங்களின் விருப்பு வெறுப்புகள் தான் முக்கியக் காரணிகளாக இருக்கின்றன. அவர்களிடமும் நண்பன் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று குறைந்தபட்ச எதிர்பார்ப்பாவது இருக்கும். இவையெல்லாம் ஒத்துப்போனால் தான் ‘நண்பன்’ என்ற ஸ்தானத்தை அவர்கள் உங்களுக்கு வழங்குவர்.

ஆனால் குடும்பத்தவர்கள் அப்படியில்லை. என்று நீங்கள் உங்கள் அம்மாவின் வயிற்றில் கருவாக உயிர் பெற்றீர்களோ அந்த நொடியிலிருந்தே அவர்கள் அனைவரும் உங்களை நேசிக்க ஆரம்பித்து விடுகின்றனர். நீங்கள் பார்ப்பதற்கு எப்படியிருப்பீர்கள், வருங்காலத்தில் நல்லவராக இருப்பீர்களா இல்லையா, உங்களின் விருப்பு-வெறுப்பு, உங்கள் தோலின் நிறம், உங்கள் தகுதிகள், திறமைகள், அவ்வளவு ஏன், நீங்கள் ஆணா பெண்ணா என்பதிலிருந்து,  எதுவுமே தெரிவதற்கு முன்பே உங்களை விரும்பத் தொடங்கியிருப்பர். பிற்காலத்தில் நீங்களும் அவர்களை அதே அளவிற்கு விரும்புவீர்களா இல்லையா என்று கூட தெரியாது. அப்படியிருக்கையில் நாம் அவர்களிடம் நடந்து கொள்ளும் விதமும் எத்தனை தூய்மையானதாகவும் நண்பர்களிடமிருந்து மாறுபட்டும் இருக்க வேண்டும் என்று லேசாக உங்களது நியூரான்களில் ஒன்று இரண்டை யோசிப்பதற்காக செலவிடுவதில் நஷ்டமொன்றுமில்லை.

ஒரு ஜென் சீயாக அல்லது ஜென் ஆல்பாவாக நீங்கள் நினைக்கலாம், உங்கள் பெற்றோருக்கு இக்காலத்தில் இருக்கும் புதிய மாற்றங்களும் உங்களுக்கு பிடித்த மாதிரியான உங்களிடம் அன்பு செலுத்தும் விதமும் தெரியவில்லை என்று. ஆனால் தெரிந்துகொள்ளாமல் இருந்ததும் முழுக்க முழுக்க அவர்கள் தவறில்லை. இந்த விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூட அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அவர்களைப் பார்த்தால் இருட்டில் சிக்கிக்கொண்டும், நீங்கள் ஒளிமயமான இடத்தில் இருப்பது  போலவும் தோன்றலாம். ஒளி மிகுந்த இடத்தில் இருப்பதால் ஏற்படும் நன்மைகளை நீங்கள் அவர்களுக்கு எடுத்துச்சொல்லியும் அவர்கள் இருளை விட்டு இன்னும் வெளியே வராமல் இருக்கலாம். அவர்களின் தேவை வெறும் ஒளியைப் பற்றிய தகவல்கள் அல்ல.  தன் கரங்களைப் பற்றியிழுத்து அந்த இடத்திலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்து நிறுத்தும் ஒரு நபர் தேவை. அந்த நபர் நீங்களாக இருந்தால் என்ன? எப்பொழுதும் பெற்றோர்கள்தான் குழந்தைகளுக்கு ஹீரோக்களாக இருக்க வேண்டுமா? குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களுக்கு ஹீரோக்களாக வர முடியும், நீங்கள் மனது வைத்தால்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com