‘பெருசு...’

‘பெருசு...’

‘அந்தப் பெரியவர் தாலுகா ஆபீஸ் வாசலில் வந்து நின்றார். கையில் ஒரு மஞ்சப்பை. வராண்டாவில் நின்றிருந்த பியூன் அந்தப் பெரியவரைப் பார்த்ததும், வேண்டாத விருந்தாளி வந்ததுபோல முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டு, ‘ இதெல்லாம் எதுக்கு இங்கே வருதுங்க... ‘ பேரனுக்கு ஜாதி சான்றிதழ் வேணும், பேத்திக்கு வருமான சான்றிதழ் வேணும், பட்டா மாத்தணும், தியாகி பென்சன் வேணும் ‘னு ஏதாவது காரணம் சொல்லிக்கிட்டு ஒரு மஞ்சப் பையைத் தூக்கிக்கிட்டு கிராமத்துலேர்ந்து வந்துடுதுங்க...’ என்று தனக்குள் முணுமுணுத்தபடி நின்றுகொண்டிருந்தான்.

அந்தப் பெரியவர் ரொம்ப நேரமாய் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து, ‘சரி என்னதான் வேண்டும் என்று கேட்போமே‘ என்று கொஞ்சம் கனிவு வந்ததுபோல மெல்ல அவரை நெருங்கினான்.

“பெருசு... என்ன விசயம்... என்ன வேணும்... யாரைப் பார்க்கணும்...’’ என்றான்.

“பெரிய ஐயாவைப் பார்க்கணும்...’’ என்றார் அவர். மஞ்சப்பையை கக்கத்தில் இருக்கமாய் அழுத்திப் பிடித்துக்கொண்டிருந்தார்.

திகைத்துப்போன அவன், ‘ஹூம் லச்ச ரூபா வச்சிருக்கு மஞ்சப்பைக்குள்ளே, கீழே விழுந்துடாம இருக்க, அவ்வளவு இறுக்கமா வச்சிக்கிட்டு நிக்குது பெருசு’ என்று உள்ளுக்குள் கறுவிக்கொண்ட அவன், உடனே, ‘ஓ... நேரா பெரிய அய்யாவையே பார்க்கணுமோ... சரி சரி... ஐயா வர்ற நேரம்தான்... இங்கேயெல்லாம் நிற்கக் கூடாது...அதோ வேப்பமரம் இருக்குது பார், அங்கே போயி நில்லு...’ என்று விரட்டாத குறையாய் சொன்னான். அவர் முழித்தபடி நின்று விட்டு நகர ஆரம்பித்தார்..

‘இந்த பெருசுக்கு இந்த ஆபீஸருங்க, கிளார்க்குங்க... வெளியே உட்கர்ந்து இதோ எழுதிக்கிட்டிருக்காங்களே ரைட்டருங்க அப்படி யாரையும் பார்க்கறதாயில்ல போலருக்கு... இதுகளே மனு எழுதி எடுத்துக்கிட்டு நேரா பெரிய அய்யாவையே போயி பார்த்துடுவாங்க போல... அவ்வளவு பெரிய ஆளுங்க...’ என்று நினைத்துக் கொண்டான்.

நான்கைந்து அடிகள் எடுத்துவைத்துவிட்டு, திரும்பி வந்து, ‘தம்பி... பெரிய ஐய்யா வந்தா கொஞ்சம் ஜாடைக் காட்டுப்பா, நான் ஓடிவந்துடறேன்...’ என்றார்.

‘‘சரி...சரி... இங்கேயெல்லாம் நிக்கக்கூடாதுனு சொல்றேனில்லை... அங்கே போய் நில்லு... காலங்காத்தாலேயே கடுப்பேத்திக்கிட்டு” என்று கடுப்புடன் சொன்னவன் ‘ இதுகளுக்கு வேலை செஞ்சு குடுக்கறதுக்கு, பேன் காத்து வாங்கிகிட்டு பேசாம உட்கார்ந்திருக்கலாம் ‘ என்று முணுமுணுத்துக் கொண்டான். ஓடிக்கொண்டிருந்த பேனை ஒருமுறை அண்ணாந்து பார்த்துக்கொண்டான். அது இப்போது விழுமோ எப்போது விழுமோ என்று லொடக் லொடக்கென்று ஓடிக்கொண்டிருந்தது.

‘அந்த டேபிள் இந்த டேபிள்னு பேப்பரை எடுத்துக்கிட்டு ஓடியோடி கையெழுத்தை வாங்கிட்டு போய், ‘ இந்தா பெருசு...ரொம்பக் கஷ்டப்பட்டு கையெழுத்து வாங்கிட்டு வந்துட்டேன்... உனக்கு இன்னிக்கு நல்ல நேரம், சீக்கிரமே வேலை முடிஞ்சுடுச்சு...ஏதோ நான் இருந்தேன், வேலை ஆயிடுச்சு.....நான் இல்லாம, நீ மட்டும் தனியா உள்ளே போனே, நாளைக்கு வா, அடுத்த வாரம் வான்னு இழுத்தடிச்சிருப்பாங்க...சரி சரி... சட்டைப் பையில எவ்வளவு வெச்சிருக்கே...’ என்று கேட்டால், கசங்கிப் போன ஒரு அழுக்கான பத்து ரூபாய் நோட்டை, ஏதோ பத்தாயிரம் ரூபாய் கொடுப்பது போல, அதையும் யாருக்கும் தெரியாமல் கொடுப்பது போல, கைக்குள் திணித்துவிட்டுப் போகும்... அதை வாங்கி ஒரு டீ கூட குடிக்க முடியாது. இப்போல்லாம் டீயே பன்னிரண்டு ரூபாக்கு விக்குது. அதுவும் அந்த அழுக்கு நோட்டை அப்படி இப்படி திருப்பி பார்த்துட்டு, ‘ வேற நல்ல நோட்டா இருந்த கொடு தம்பி... கோவிச்சுக்காத...’ ம்பான் டீக்கடைக்காரன்.

தனக்குள்ளேயே யோசித்துக்கொண்டே அந்த பெரியவரைப் பார்த்தான். அவர் தனது துண்டால் முகத்துக்கு நேரே உதறிக் கொண்டு நிழலில் நின்றிருந்தார். வெயிலும் கொஞ்சம் உறைத்துக் கொண்டுதானிருந்தது.

திடீரென்று ஒரு ஜீப் காம்பவுண்டுக்குள் நுழைந்தது. தாசில்தார் வருகிறார் என்று அறிந்தவுடன் அதுவரை பராக்குப் பார்த்துக் கொண்டும் கவனத்தை சிதறவிட்டுக்கொண்டும் நின்றிருந்த பியூன் விறைத்துக் கொண்டு நின்றான்.

சட்டென அவனுக்கு ஒரு கவலை. “பெரிய ஐயா வருகிறார் என்று தெரிந்துகொண்டு, அந்தப் பெரியவர் எங்கே குறுக்கே ஓடிவந்துவிடுவாரோ” என்று நினைத்துக்கொண்டு அவரையும் ஜீப்பையும் மாறிமாறிப் பார்த்தான். நல்லவேளையாக அந்த பெரியவர் வேறுபுறம் திரும்பி நின்று கொண்டு துண்டால் விசிறிக்கொண்டிருந்தார்.

தாசில்தாரும் டவாலியும் வேகமாக நடந்துவந்து உள்ளே போய்விட்டனர்.

போனால் போகிறதென்று பெருசை கூப்பிட்டு, ‘ பெரிய ஐய்யா வந்துவிட்டார் ‘ என்று சொல்லலாமா என்று யோசித்து அவருக்கு சைகை காட்ட எண்ணி கையை உயர்த்தியவன், சட்டென மனம் மாறி, ’ பெருசை கொஞ்சம் அலையவிடலாம், அப்போதுதான் நமது அருமை அதுக்குத் தெரியும்... கீழே யாரையும் பார்க்காதாம், நேரா பெரிய ஐயாவையே பார்க்கணுமாம்...பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத ஜனங்க... ‘ தனக்குள் முணுமுணுத்துக்கொண்டான்.

‘ நம்மிடம் எதற்காக வந்திருக்கிறோம் என்று சொல்லமாட்டாராம், சொன்னால், அதுக்கு ரொம்ப செலவாகுமே என்று நாம் சொல்லிவிடுவோமாம்.... எவ்வளவு உஷார்...விட்டுடுவோமா நாங்க...’ யோசித்தபடியே உள்ளே போய்விட்டான்.

மெல்ல கதவிடுக்கு வழியாகப் பார்த்தான். தாசில்தார் பதற்றத்துடன் யாருடனோ போனில் சத்தம்போட்டு பேசிக்கொண்டிருந்தார். வெளியே வந்த டவாலியிடம், ‘ என்னாச்சு... ஏன் அய்யா யார்கிட்டேயோ இவ்ளோ சத்தம் போட்டுக்கிட்டிருக்கார்...’ என்று கிசுகிசுத்தான்.

‘‘அட அதையேன்ப்பா கேட்கறே... அய்யாவோட பையன் புல்லட்டிலே போய்க்கிட்டிருக்கும்போது பர்ஸைத் தொலைச்சிட்டானாம்... வீட்டிலேர்ந்து போன் வந்ததிலேர்ந்து ரொம்ப டென்ஸனாயிட்டு கத்திக்கிட்டிருக்கார்...’’ என்றான்.

பெரியவர் மெல்ல வாசலில் வந்து நின்றார்.

டவாலியைப் பார்த்ததும், பெரிய அய்யாத்தான் வந்துவிட்டாரோ என்று ஓடிவந்துவிட்டதோ பெருசு என்று நினைத்துகொண்டு கடுப்பாகி, அவரை துரத்தும் நோக்கத்துடன் வேகமாய் நெருங்கினான் பியூன்.

‘தோ பெருசு... நாந்தான் சொன்னேன்னில்ல, அப்புறமும் ஏன் திரும்பவும் இங்கே வந்து நிக்கறே...’’ என்றான்.

“ஐயாவைப் பார்த்து...’’ இழுத்தார் அவர்.

‘‘நீ நினைக்கறமாதியெல்லாம், சட்டுன்னு போயெல்லாம் பெரிய ஐயாவை பார்க்கமுடியாது அததுக்கு ஒரு செயல்முறை இருக்கு, வரைமுறை இருக்கு...பேசாம போயி, டீ காபி ஏதும் குடிச்சிட்டு பொறுமையா வா...இங்கே நிக்காதே போ...போ...’ என்று அதட்டினான் குரலைக் கொஞ்சம் தாழ்த்தி.

அடுத்த அறைக்குப் போன டவாலி திரும்பிவரும்போது ஒரு பெரியவரை பியூன் விரட்டுவதைப் பார்த்துவிட்டு, “என்ன மணி...என்னாச்சு... முதியோர் பென்சன் ஏதும் வாங்கணுமாமா... செஞ்சுதான் கொடேன் பெருசுக்கு...” என்றான்.

“ஆமா.... கிராமத்துலேர்ந்து மஞ்சப்பையை தூக்கிட்டு வந்துடுதுங்க இதெல்லாம், வேலைவெட்டி இல்லாம... பைசா தேறாது...போ நீ வேற” என்றான் அவன்.

ஒரு போலிஸ் ஜீப் அங்கே வந்து நின்றது. ஒரு போலீஸ் காரர் இறங்கி உள்ளே போனார். பியூன் கதவைத் திறந்துவிட்டான். ஒருவேளை தாசில்தார், பையனின் பர்ஸ் காணாமல் போனதற்கு போலிஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து, அதை விசாரிக்க வந்திருப்பாரோ என்றெண்ணியபடி வியர்வையைத் துடைத்துக்கொண்டு நின்றான் அவன்.

கொஞ்ச நேரத்தில் கதவைத் திறந்து கொண்டு போலீஸ்காரரும் தாசில்தாரும் வெளியே வர, அதைக் கவனித்துவிட்ட பெரியவர் ஓடோடி வந்தார். திகைத்துப் போனான் பியூன். எங்கே அவர் குறுக்கே வந்து காலில் ஏதும் விழுந்து வைக்கப் போகிறாரோ என்று பயந்து குறுக்கே ஓட, தாசில்தார் அவனை நிறுத்தினார்.

“ஏன்பா மணி... என்னாச்சு...ஏன் பதறிக்கிட்டு ஓடிவர்றே” என்றார்.

“ஐயா...பெரியவர்....” என்று அவன் பெரியவரை கைகாட்டி விபரம் சொல்ல வரும்போதே பெரியவர் அவசரமாய் மஞ்சப் பையைத் திறந்து ஒரு பர்சை எடுத்தார்.

“ஐயா... நான் ரோடு ஒரமா போய்க்கிட்டிருந்தப்போ இந்த பர்ஸ் சாக்கடை ஓரமா கிடந்துச்சு... என்கூட வந்த என் பேத்தி இதை திறந்து பார்த்துட்டு, இது யாரோ தாசில்தார் பையன் போல இருக்கு. எப்படியே தவறவிட்டிருக்கார் போல, பஸ் பிடிச்சு போய் நேரா தாசில்தாரையேப் பார்த்து அவருகிட்டே குடுத்துட்டு வந்துடு தாத்தானு சொல்லிட்டு வீட்டுக்கு போயிடுச்சு. நான் இங்கே வந்து பெரிய ஐயாவைப் பார்க்கணும்னு கேட்டேன். இவர் என்னை உள்ளே விடலை...அதோ அந்த வேப்பமரத்தாண்ட ரெண்டு மணிநேரமா கத்துக்கிட்டிருக்கேன்...’ என்று சொல்லி முடிக்க, தாசில்தார், “மணி, அப்புறமா உள்ளே வந்து என்னைப் பார்” என்று சொல்லிவிட்டு, “சார்... பர்ஸ்தான் கிடைச்சிடுச்சே...நான் இதை டீல் பண்ணிக்கறேன்... எப்.ஐ.ஆர்.லாம் வேண்டாம், நீங்க போங்க,” என்று போலீசை அனுப்பிவிட்டு பெரியவரின் தோளில் கைப்போட்டு உள்ளே கூட்டிக்கொண்டு போனார் தாசில்தார்.

‘ஏன்டா பெருசிடம் இப்படி நடந்துகொண்டோம் ‘ என்று அவன் வருத்தப்பட்டுக் கொண்டிருந்த அதே நேரம், வெளியே வந்த டவாலி, தாசில்தாரின் ஜீப் டிரைவரைக் கூப்பிட்டு, ‘ இந்த பெரியவரை ஜீப்பிலே ஏத்திக்கிட்டு போயி அவரோட வீட்டிலே விட்டிடச் சொல்லி பெரிய ஐயா உன்கிட்டே சொல்லச் சொன்னார். வேற ஏதும் தெரியணும்னா அய்யாக்கு போன்ல பேசிக்குவியாம்...’ என்றான்.

பெரியவர் பியூனை பார்த்தபடி விறைப்பாய் ஜீப்பில் ஏற, பெருங்கவலையுடன் உள்ளே போனான் பியூன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com