'ப்லுதி' - நடன நிகழ்ச்சி!

கலை - கலாச்சாரம்!
'ப்லுதி' - நடன நிகழ்ச்சி!

சென்னை நாரதகான சபையின் நடனப் பிரிவாக 1995ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அமைப்புதான் 'நாட்யரங்கம்'.  திறமை மிக்க நடனக் கலைஞர்களுக்கு மேடை அமைத்துத் தருவது, பரதம் பற்றிய பல்வேறு அம்சங்களை ரசிகர்களிடையே கொண்டு சேர்ப்பது, என்ற இரு தலையாய நோக்கங்களுடன் தொடங்கப்பட்டதொரு அமைப்பு இது.

ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் மாதம், ஏதாவது ஒரு கருப்பொருளைக் கொண்டு நடன விழா ஒன்றையும் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. குழு நடனம் மற்றும் தனி நடனம் என்று மாறி மாறி நடத்தப்படும் இந்த விழாவில், இந்த ஆண்டு ஐந்து நாட்களுக்கு, தனி நடனமாக நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டன.

இந்த ஆண்டின் கருப்பொருள் 'விலங்குகள்'. ஒவ்வொருவரும் ஐந்து விலங்குகளைத் தேர்ந்தெடுத்து, அதனைக் கருவாகக் கொண்டு தங்கள் தயாரிப்பை வழங்க வேண்டும் என்பது விதி.  அவ்வகையில் 'ப்லுதி' என்ற தலைப்பில், சங்கீத கலாநிதி லால்குடி ஜி ஜே ஆர் கிருஷ்ணன் அவர்கள் இசையமைப்பில், தவளை, மான், காமதேனு, கிளி மற்றும் மண்புழு ஆகிய உயிரினங்களைக் கொண்டு மிக அழகானதொரு படைப்பை உருவாக்கி இருந்தார் நடனக்கலைஞர் கே. ஆர். மனஸ்வினீ. இவ்விலங்குகளின் நடத்தையை, மனிதனுடைய வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டு நாட்டியத்தை உருவாக்கி இருந்தது, பிரபல இசை, நடனக் கலைஞர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களிடையேயும் ஏகோபித்த பாராட்டுதல்களைப் பெற்றுத் தந்தது.

ங்கை, யமுனை போன்ற நதிகள் கலக்கும் மகா சமுத்திரம் கூட எந்த கர்வமும் இல்லாது அமைதியாக இருக்கும்போது, தவளை ஒன்று, உலகமே அந்தக் கிணறுதான் என்று எண்ணி கர்வத்தோடு சத்தம் எழுப்பி கொண்டிருக்கிறது. குறைந்த அளவு ஞானத்தோடு இருக்கும்  தவளையினை விவரிக்கும் வகையில், 'ஷட்ஜம் முதல் பஞ்சமம்' வரை ஸ்வரங்களைக் கொண்டு இசை அமைத்திருந்தார் ஜி ஜே ஆர் கிருஷ்ணன்.

'ஆசையே அழிவுக்குக் காரணம்'. எத்தனை  செல்வத்தை நாம் சேர்த்தாலும் முடிவில் நம்மோடு வரப்போவது எதுவும் இல்லை. மாயை நம் கண்களை மறைக்க, சம்சார சாகரத்தில் நாம் மூழ்கிப் போகிறோம். தூரத்தில் நீர் இருப்பதாக நினைத்துத் துள்ளி ஓடுகிறது ஒரு மான். கடைசியில் அது கானல் நீர் என்பதை உணர்ந்து ஏமாந்து போகிறது.

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கருணையே வடிவாக, அனைத்து விலங்குகளிடமும் அன்பைப் பொழிவதையும், சிவபெருமான் தன் தலையில் சூடிய ஞானகங்கையைக் கொண்டு மானின் தாகத்தை தீர்த்து வைப்பது போலும் காட்சியை அமைத்திருந்தார் மனஸ்வினீ. ஒரே ஸ்வரங்கள். ஆனால், 'கிருஹ பேதம்' செய்து மூன்று ராகங்களில் இசையமைத்திருந்தார்  கிருஷ்ணன்.

ழவனுக்கு நண்பனாகத் தன் கடமையைச் செய்யும் 'மண்புழு' அடுத்து வருகிறது. 'மனோன்மணிய'த்திலிருந்து எடுக்கப்பட்ட வரிகள். தான் வாழும் காலத்தில் மண்ணைத் தூய்மைப்படுத்தி உழவுக்கு ஏற்ற வகையில் மாற்றும் இந்த மண்புழு நமக்கு சொல்வது என்ன? தன்னுடைய பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, சேவை மனப்பான்மையுடன் செயல்படும் கர்மயோகியின் செயல்பாட்டை நமக்கு உணர்த்துகிறது அல்லவா?

இதற்கு கண்ட நடையில் மிக அழகான இசை மழை.

டுத்து, ஸ்ருங்கேரி ஸ்ரீ நரசிம்ம பாரதி சுவாமிகளின் வரிகளைக் கொண்டு அமைந்த பாடல், ஹமீர் கல்யாணி, தன்யாசி, மோகனம், கீரவாணி (கிளி என்றும் பொருள் படும்),  ஹம்சநாதம், ரீதி கௌளை போன்ற ராகங்களில் ராகமாலிகையாக வந்தது. இதில் காட்சிப் பொருள் 'கிளி'.

அன்னை சாரதாம்பாளின் பற்களை மாதுளை முத்துக்களாகவும், அவள் உதடுகளை கோவைப்பழம் என்றும் நினைக்கிறது இரண்டு கிளிகளில் ஒன்று. பசி மிகுதியினால் அவளுடைய காது தோட்டை உண்ணும் ஒரு கிளி, தாகத்தினால் அம்பாளின் அமிர்த கலசத்திலிருந்து நீரையும் பருகுகிறது.

ஞானத்தின் வடிவமாக போற்றப்படுபவள் அன்னை சாரதாம்பாள். அந்த ஞானத்தைப் பெற இரு கிளிகளும் சாரதாம்பாளை நோக்கி சென்றது என்ற   அர்த்தத்தில் அமைந்த அழகான வரிகள்.

'கோப்ரியா' ராகத்தில் காமதேனுவின் வால், கொம்பு என்று அதன் உடல் உறுப்புகளை காண்பித்து, எந்த பேதமும் இல்லாமல் எல்லோருக்கும், எல்லா நன்மை களையும் தரும் காமதேனுவின் சிறப்புகளையும் வெளிப்படுத்தினார் மனஸ்வினீ. 'திஸ்ர ஏக'த்தில், கண்ட நடையில் வாத்திய இசையாக ஒலித்தது கிருஷ்ணனின் 'கோப்ரியா'.

'ஞானமடி சுரக்கும்படி அருள்செய்' என்ற வரிகளுடன் அமைந்த சுத்தானந்த பாரதியின் பாடலுக்கு, அகங்காரம், தேடுதல், கர்மயோகம், ஞானம் என்ற நான்கு நிலைகளைக் கடந்து முடிவில் எல்லாம் ஈஸ்வரன் தான் என்ற பாவத்தை உணர்த்தும் வகையில் அமைத்திருந்தார். இப்பாடலை 'தேனுகா' ராகத்தில் மெட்டமைத்திருந்தார் கிருஷ்ணன்.

கோமாதாவின் மேல், 'தண்டாலு தண்டாலு' என்ற தெலுங்கு மொழிப் பாடலை முதலில் மேடையில் அமர்ந்து மனஸ்வினீ  மிக அழகாகப் பாடினார்.  அதன்பிறகு எழுந்து நடனமும் ஆடினார். ஒரு நடனக் கலைஞர் மேடை நிகழ்ச்சியில் இவ்வாறு செய்தது, மிகவும் புதுமையாகவும் ரசிக்கும்படியும் இருந்தது.  கிராமிய இசையில் அமைந்திருந்தது இந்தப் பாடல்.

நம் ஆன்மாவே பிரம்மம்.  இந்த ஆன்மா நான்கு நிலைகளாகப் பிரிக்கப்படுகிறது. விழிப்பு நிலை, கனவு நிலை, காரண நிலை, இவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட பரம்பொருள். இவ்வாறு, ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு தாவிச் செல்வதுதான் 'ப்லுதி'. 'கோபிகா திலகம்' தில்லானா போன்ற ஒரு அமைப்பு. தாவி குதித்து நாம் உயர்நிலையை அடைவதைப் போல ஸ்வரங்களும் ஏறி இறங்கி ஒரு உயர்வை அடைகின்றன.

ஐந்தறிவுள்ள விலங்குகளிடமிருந்து ஆறறிவு பெற்ற மனிதன் கற்றுக்கொள்வதற்கான உன்னதக் கருத்துக்களை இப்படைப்பு எடுத்துக்காட்டியது.

தன் தாயும், குருவுமான நடனக்கலைஞர் திருமதி ரேவதி ராமச்சந்திரன் இந்தப் படைப்பின் உருவாக்கத்தில், மேடை மற்றும் ஒளி அமைப்பிலும் உதவினார் என்று கூறிய மனஸ்வினீ, புலன்களால் அறியப்படும் 'ஸ்தூல' சரீரமாக ஜி ஜே ஆர் கிருஷ்ணன் அவர்களும், அறிவால் உணரப்படும் 'சூக்ஷ்ம' சரீரமாகத் தன் தாயும், 'காரண' சரீரமாகத் தன் ஆன்மீக குருவாகிய சுவாமி பரமார்த்தானந்தாவும் பக்கபலமாக இருந்து வழிகாட்டினார்கள் என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

டாக்டர் சுதா சேஷய்யன், திருமதி சுஜாதா விஜயராகவன், மதுசூதன் கலைச்செல்வன், ஆர் கே ஸ்ரீராம் குமார், அபிநவ் கடம்பி ஆகியோரிடமிருந்தும் பல அரிய தகவல்களைச் சேகரித்து இருக்கிறார் மனஸ்வினீ.  இசைக்குழுவில் நட்டு வாங்கத்தில் திருமதி ரேவதி ராமச்சந்திரன், வாய்ப்பாட்டில் பவ்யா ஹரி, மிருதங்கம் மற்றும் ரிதம் ஜிவி குரு பரத்வாஜ், வயலின் ஆதித்யா ஸ்ரீ ராம், புல்லாங்குழலில் ஹரிபிரசாத் சுப்ரமணியன், வீணையில் சாருலதா சந்திரசேகர் என அனைவரும் இந்தப் படைப்பிற்கு பக்க பலமாகத் திகழ்ந்தனர். ராஜலட்சுமி ரமணன் அவர்களின் ஒளி டிசைன் நடன மேடைக்கு அழகு கூட்டியது எனலாம்.

உயர்ந்த கருத்துக்களை ரசிகர்களிடம் எடுத்துச் செல்ல

அவர் மேற்கொண்ட உழைப்பின் சிறப்பான வெளிப்பாடாக இப்படைப்பு அமைந்திருந்தது என்பது ரசிகர்களின் கரகோஷத்திலிருந்து அறிய முடிந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com