நிமோனியா...
நிமோனியா...

நுண்கிருமிகளால் ஏற்படும் நிமோனியா – உயிருக்கு ஆபத்தா?

சிறிய கிருமிகள் – பெரிய பாதிப்புகள் – மருத்துவ (மினி) தொடர்-பகுதி 1

பிரம்மாண்ட மிருகங்களிடமிருந்து தப்பிக்க, அவற்றிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள, மனிதன் பலவிதங்களில் போராடியது அந்தக் காலம். இப்போது மனித குலம் பயப்படுவது சின்னஞ்சிறு கிருமிகளுக்கு!

ஆம். பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகளின் தாக்குதலுக்கு மனிதன் பயப்பட வேண்டிய காலம் இது. (கொரோனா கிருமிகள்  நம்மைப் படுத்தியபாடு மறக்கக்கூடியதா?)  இதுபோன்ற நுண்கிருமிகள் வெகுவேகமாக தங்களை பெருக்கிக்கொள்கின்றன.  மனிதர்களிடையே தங்களை பரப்பிக்கொள்கின்றன. சொல்ல முடியாத பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.  எனவே, மனிதன் தன்னை இவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டியது இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமாகிறது.  

தொற்று நோய்கள் தொடர்பாக பலரும் அறிந்திராத தகவல்கள் உண்டு. குறிப்பாக நிமோனியா குறித்த விழிப்புணர்வு நம் நாட்டில் ஓரளவுதான் இருக்கிறது. மேலும், தொற்று நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் பற்றி அறிந்துகொள்ளாதவர்கள் ஏராளம்.

சென்னையில் உள்ள கேப்ஸ்டோன் கிளினிக் நிறுவனராகவும்,  சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஆலோசகராகவும் விளங்கும் தொற்று நோய் நிபுணர் டாக்டர் வி. ராமசுப்ரமணியன், தொற்று நோய்கள் குறித்த - குறிப்பாக நிமோனியா குறித்த -  நமது பல சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார் இப்பயனுள்ள பகுதியில்.

டாக்டர் வி. ராமசுப்ரமணியன்
டாக்டர் வி. ராமசுப்ரமணியன்
Q

தொற்றுநோய்கள் என்று எவற்றைக் குறிப்பிடலாம் டாக்டர்?

A

கோவிட், டெங்கு, எபோலா, ஃப்​ளூ, டிப்தீரியா, மஞ்சள் காமாலை, எய்ட்ஸ், விளையாட்டம்மை, அக்கி, போலியோ, ராபிஸ், டெட்டனஸ், கக்குவான் இருமல் என்று ஒரு பட்டியலே உண்டு. 

Q

தொற்று நோய் என்பதைக் குறிக்கும் சரியான ஆங்கிலச் சொல் Infectious disease என்பதா? அல்லது Contagious disease என்பதா? இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

A

பாக்டீரியா வைரஸ் போன்ற நுண்கிருமிகள் உடலுக்குள் நுழைந்து பிரச்னைகளை ஏற்படுத்தும்போது தொற்று நோய் (Infectious disease) தோன்றுகிறது. ஆனால், இந்த வகை நோய்கள் அனைத்துமே ஒருவரிடமிருந்து மற்றவருக்கு தொற்றக்கூடியவை அல்ல.

ஒருவரிடமிருந்து மற்றவருக்கு தொற்றக்கூடிய நோய்களை மட்டுமே Contagious Diseases என்கிறோம். அதாவது எல்லா infectious diseasesம் contagious அல்ல.

காசநோய், கோவிட் போன்றவை ​infectious diseases என்பதோடு contagious diseasesம் கூட.  ஒருவரிடமிருந்து மற்றவருக்கு தொற்றக்கூடியவை.

எச்.ஐ.வி.யை அ​ப்படி வகைப்படுத்த முடியாது. அது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு தொற்றக்கூடிய contagious disease அல்ல. (உடலுறவின் மூலம் பரவலாமென்பது வேறு விஷயம்).

Q

தொற்று நோய் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எப்படி பரவக்கூடும்?

A

தொடுவதன் மூலம் பரவ வாய்ப்பு உண்டு. அல்லது ஒருவர் தும்மும்போதும் இருமும்போதும் அவர் உடலில் இருக்கும் கிருமிகள் காற்றின் வழியாக உங்கள் உடலுக்கு வந்து சேரலாம். 

Q

நுண்கிருமிகள் என்று எவற்றைக் குறிப்பிடுகிறோம்?

A

பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, ஒட்டுண்ணி இப்படி அவை எதுவாகவும் இருக்கலாம். இவை ஒவ்வொன்றிலும் மிகப் பல வகைகள் உள்ளன. இவை நம்மைச் சுற்றி ஏராளமான எண்ணிக்கையில் உள்ளன.  இவற்றில் கணிசமானவை நம் உடலுக்குள்ளேயேகூட எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும். வேறு பலவும் நிலத்திலோ தண்ணீரிலோ இருந்துகொண்டு உங்கள் உடலுக்குள் புகுந்துவிட வாய்ப்பு உண்டு.

Q

எல்லாக் கிருமிகளுமே  நம்மை நோய்களுக்கு  உள்ளாக்குமா?

A

நல்ல வேளையாக அப்படி இல்லை. பெரும்பாலான கிருமிகள் தொற்று நோயை உண்டாக்குவதில்லை.

Q

நிமோனியா என்பது நுரையீரல் பாதிப்பா?

A

நிமோனியா என்பது பெரும்பாலும் நுரையீரல் தொற்று என்று அறியப்படுகிறது. ஆனால், நுரையீரலை மட்டும்தான் அது தாக்கி இருக்கவேண்டும் என்பது இல்லை. உடலின் பிற பாகங்களிலும் தொற்று ஏற்பட்டிருக்கலாம். 

ஸ்ட்ரெப்டோகாக்கஸ் (Streptococcus) என்ற கிருமி தாக்குதல் நடத்தினால் அது நேரடியாக நுரையீரல் பாதிப்பாக இருக்கும். அது நுரையீரலிலுள்ள காற்றுப்பைகளில் வீக்கத்தை ஏற்படுத்தும்.  அந்தப் பைகளில் திரவம் அல்லது சீழ் நிரம்பத் தொடங்கும். இதன் காரணமாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்.

Q

நிமோனியா எப்படி உண்டாகிறது? எப்படிப் பரவுகிறது?

A

நிமோனியாவை உண்டாக்கும் நுண்கிருமிகள் காற்றில் ஏராளமாக இருக்கின்றன. இவற்றை நாம் சுவாசத்தின்போது உள்வாங்கிக் கொள்கிறோம். அவை சுவாசக் குழாய்களை அடைகின்றன. உடனே நம் உடலிலுள்ள நோய் எ​திர்ப்பு மண்டலம் (இம்மியூனிட்டி சிஸ்டம்)  அந்தக் கிருமிகளோடு போரிட எதிர்மக்கூறுகள் (ஆன்டிபாடிஸ்)  எனப்படும் பாதுகாப்புப் புரதத்தை  அனுப்புகிறது.  இந்த போரின் காரணமாக திரவம் மற்றும் சீழ் உண்டாகிறது.  இவை காற்றுப்பைகளை அடைத்துக் கொள்ளும்போது அது நிமோனியா எனப்படுகிறது.

நிமோனியா உண்டாகப் பல காரணங்கள் உண்டு. பெரும்பாலும் வைரஸ் கிருமிகள்தான் இதற்கு காரணமாகின்றன.  இப்படி வைரஸ் கிருமிகளால் உருவாகும் ஃப்​ளூ, கோவிட் போன்றவை எளிதில் தொற்றக்கூடியவை.  வைரஸ் மட்டுமே என்று இல்லாமல் பாக்டீரியா, பூஞ்சை போன்றவற்றாலும் நிமோனியா ஏற்படலாம்.  

கிருமிகள் பரவியுள்ள உணவு மற்றும் திரவங்களை நாம் உட்கொள்ளும்போது அவை நமக்குள் சென்று விடுகின்றன. கிருமிகள் உள்ள பொருட்களை தெரிந்தோ தெரியாமலோ தொட்டுவிட்டு நம் மூக்கையோ வாயையோ தொடும்போதும் அவை நம் உடலுக்குள்  செல்கின்றன. (கொரோனா வைரஸ் பெருமளவு ஆட்சிசெய்தபோது வீட்டுக்குள் நுழைந்த உடனேயே கைகளை நன்கு சுத்தப்படுத்திகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது இதனால்தான்). உடலுக்குள் நுழைந்ததும்  இந்தக் கிருமிகள் தங்களைப் பெருக்கிக் கொள்கின்றன.  இதனால் நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு.

இதையும் படியுங்கள்:
பதநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?
நிமோனியா...
Q

நிமோனியா வகைகளில் மிக வீரியமானது எது?

A

Streptococcus என்ற வைரஸ் கிருமியால் உண்டாகும் நிமோனியாதான்  மக்களிடையே மிக அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் நிமோனியாவாக உள்ளது.

இன்டெர்ஸ்டிஷியல் நிமோனியா (Interstitial pneumonia) ஏற்படும்போது அது நுரையீரலில் தழும்பை ஏற்படுத்தும். இந்த திசுத் தழும்பு  காரணமாக ஆக்ஸிஜனை சுமந்திருக்கும் நுரையீரலின் தன்மை பாதிக்கப்படுகிறது.  இதன் காரணமாக இயல்பாக சுவாசிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.  இந்த தழும்புகள் குறிப்பாக காற்றுப்பைகளுக்கும் மிக மெல்லிய ரத்த குழாய்களுக்கும் இடையில் உள்ள பகுதிகளில் உண்டாகின்றன.  இதன் காரணமாக ஆக்ஸிஜனை உள்ளிழுத்துக் கொள்ளுதல், கரியமில வாயுவை வெளியேற்றல் ஆகிய இரண்டிலுமே சிக்கல்கள் உண்டாகின்றன.

Q

யாருக்கெல்லாம் நிமோனியா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்?

A

நிமோனியா​வால் பாதிக்கப்படுபவர்களை வயதுவாரியாகப் பிரித்து ஒரு வரைபடம் (கிராஃப்) தயார் செய்தால், அது U வளைவுபோல் அமையும். அதாவது ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 65 வயதைத் தாண்டிய முதியவர்கள் நிமோனியாவால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். தவிர நோய் எதிர்ப்பு சக்தி  குறைந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். நீண்டநாள் ரத்தக்கொதிப்பு, கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு நோய், இதய நோய்கள் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், ஹெச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டவர்கள், புற்று நோயால் பாதிக்கப் பட்டவர்கள், ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் ஆகியோர் எல்லோரும்  நிமோனியாவால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு கொண்டவர்கள்.   காரணம் இவர்கள் உடலில்  நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதே!.

கேள்வி: நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் என்ன டாக்டர்?

இந்த கேள்விக்கும் இன்னும் சில கேள்விகளுக்கும் டாக்டரின் பதில்கள்...

பகுதி - 2ல் (25-01-2024) அன்று வெளியாகும்.

logo
Kalki Online
kalkionline.com