கொடூரத்திலும் கொடூரம் ! பாலியல் குற்றம்! POCSO சட்டம் சொல்வது என்ன?

Pocso Act
Pocso Act

- மதுவந்தி

சமீபகாலங்களில் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதைக் காணமுடிகிறது. இதில் பெண் குழந்தை, ஆண் குழந்தை என்ற பாகுபாடே இல்லாமல் இருவருமே பாதிக்கப்படுகின்றனர் என்பதை நினைக்கும்பொழுது வேதனையாக இருக்கிறது. சில மிருகங்களின் அந்த நேர ஆசைக்காக வயது வரம்பில்லாமல் குழந்தைகள் இறையாகின்றனர் என்பதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதுவும் குற்றவாளிகளில் கிராமவாசிகள் முதல் நகரவாசிகள் வரை, அன்புச் சொந்தங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை, ஆண், பெண் என இருவருமே சம்பந்தப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது. எரிச்சலூட்டுகிறது. ஒவ்வொரு நாளும் வழக்குகள் பதிவாகின்றன. இன்னும் நிறைய வெளியே வராமலும் இருக்கின்றன.

இந்திய அரசாங்கம் குழந்தைகளை பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்க POCSO சட்டத்தை இயற்றியிருக்கிறது. இது குறித்து சட்டம் என்ன சொல்கிறது என வழக்கறிஞர் திரு.ம.யுவராஜா, POSH சட்டம் - உள்ளூர் புகார் குழு உறுப்பினர் (கடலூர் மாவட்டம்) அவரிடம் பேசினோம். இந்த கலந்துரையாடலின் பகிர்வு இப்பதிவில்...

Q

போக்ஸோ சட்டம் என்றால் என்ன?

A

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில் 2012ஆம் ஆண்டும் அதன்பிறகு மேற்படி சட்டத்தில் சில திருத்தங்களைச் சேர்த்து 2019ஆம் ஆண்டு திருத்தச் சட்டமும் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இது, குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் தாக்குதல்கள், பாலியல் தொந்தரவுகள், குழந்தைகளைப் பயன்படுத்தி எடுக்கப்படும் ஆபாசப்படங்கள் போன்ற குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தண்டிக்க ஏற்படுத்தப்பட்ட சட்டம் ஆகும்.

Q

எத்தனை வயது வரை போக்சோ சட்டம் பாதுகாப்பு தரும்?

A

18 வயதுக்குக் கீழே உள்ள ஆணோ, பெண்ணோ குழந்தை என்ற வரையறைக்குள் இந்தச் சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்படுவார்.

Q

போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதானால் ஜாமீன் கிடைக்குமா இல்லையா?

A

ஜாமீன் கிடைக்கும் சில வழக்குகளில். போக்ஸோ சட்டத்தில் பிணையில் விடக்கூடிய குற்றங்கள், பிணையில் விடமுடியாத குற்றங்கள் என வகைப் படுத்தப்பட்டுள்ளது. குற்ற உடந்தை, குற்ற முயற்சி, வழக்கை பற்றி தகவல் கொடுக்க தவறுதல், வழக்கைப் பதிவு செய்யத் தவறுதல், பொய்யாக புகார், பொய்யான தகவல் போன்ற குற்றங்கள் மட்டுமே இந்தச் சட்டத்தில் பிணையில் விடக்கூடிய குற்றங்கள் ஆகும். மேலும், குற்றத்தின் தன்மை, வழக்கின் நிலை ஆகியவற்றைப் பொறுத்து நீதிமன்றம் முடிவு செய்யும்.

போக்ஸோ சட்டத்தைப் பொறுத்தவரையில் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் தாக்குதல், நுழைத்து பாலியல் தாக்குதல், பாலியல் தொந்தரவு, பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் குழந்தைகளைப் பயன்படுத்துவது அல்லது நேரடியாக ஈடுபடுத்துவது, குழந்தையை உட்படுத்தி பாலியல் தூண்டும் வகையில் கருப்பொருட்களை வெளிபரப்பவோ, பகிர்ந்துகொள்ளவோ செய்வதுபோன்ற குற்றங்களைச் செய்தால் மேற்படி குற்றங்கள் ஜாமீனில் விடமுடியாத குற்றங்கள் ஆகும்.

Q

போக்ஸோ சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளுக்கு எத்தனை நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படும்?

A

போக்ஸோ சட்டத்தின் கீழான குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றம் ஆகும். வழக்கு விசாரணையைக் கோப்பிற்கு எடுத்த நாள் முதல் விசாரணையை முடிந்த வரை ஒரு ஆண்டிற்குள் முடிக்க வேண்டும் என்று சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Q

இந்தச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் தீர்ப்பை மேல்முறையீடு செய்ய முடியுமா?

A

இந்தச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் தண்டனைகளுக்கு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும்.

Q

குற்றம் நிரூபிக்கப்பட்டால் எத்தனை வருடம் இந்தச் சட்டத்தின் கீழ் தண்டனை கிடைக்கும்?

A

குற்றத்தின் தன்மைகளைப் பொறுத்து தண்டனைகள் மாறுபடும். அதில் குழந்தைகள் எதிரான மற்றும் பாதிக்கக்கூடிய பெரிய குற்றங்களான நுழைத்து பாலியல் தாக்குதல்களுக்கு 10 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை வரை மற்றும் அபராதம் விதிக்கப்படும். அதுவே 16 வயதுக்குட்பட்ட குழந்தையாக இருந்தால் 20 ஆண்டிலிருந்து ஆயுள் வரை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். கடுமையான நுழைத்து பாலியல் தாக்குதல் என்றால் இருபது ஆண்டு முதல் ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் அல்லது மரண தண்டனைகூட விதிக்கப்படும். ஆபாச பட நோக்கத்திற்காக என்றால் ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் கடுமையான பாலியல் தாக்குதல் குற்றங்களுக்கு ஐந்து முதல் ஏழு ஆண்டு சிறை மற்றும் அபராதம். பாலியல் தாக்குதல்களுக்கு மூன்று முதல் ஐந்து ஆண்டு சிறை மற்றும் அபராதம். பாலியல் தொந்தரவு கொடுத்தால் மூன்று ஆண்டு சிறை மற்றும் அபராதம் என்று கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்.

Q

என்ன செய்யலாம்?

A

கடுமையான தண்டனைகள் மற்றும் விசாரணை நடைமுறை கொண்டது போக்ஸோ சட்டம் ஆகும். நீதிமன்றங்கள் கொடுக்கும் தண்டனை விவரங்கள் தொடர்ந்து பத்திரிகைகள், ஊடகங்களில் வெளிவந்து கொண்டு இருந்தாலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள் குறையவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் வெளியே வரத் தயங்குவதும் இதற்கு முக்கியக் காரணம். இந்தத் தயக்கப் போக்கு மாற வேண்டும். விழிப்புணர்வு வர வரத்தான் குற்றங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் குறையும்.

அனைத்துக்கும் மேலாக, மிக முக்கியமாக, ஒருவருக்கு தனிமனித ஒழுக்கம் இருந்தால் மட்டுமே, குழந்தைகள் தங்கள் குழந்தை பருவத்தை எந்தவித அச்சுறுத்தலுமின்றி, யாரைப் பார்த்தாலும் பயம் என்பது போய் பாதுகாப்பாக வாழ முடியும் என்பதை ஒவ்வொரு தனி மனிதனும் உணர வேண்டும். உணரச் செய்ய வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com