காலத்தால் அழியாப் பாடல்கள் படைத்த கவி கா.மு. ஷெரீப்!

ஆகஸ்ட்-11 கவி கா.மு. ஷெரீப் பிறந்த தினம்!
காலத்தால் அழியாப் பாடல்கள் படைத்த கவி கா.மு. ஷெரீப்!

மிழ்த் திரையிசைப் பாடல்கள் என்றும் இனிமையானவை பட்டுக்கோட்டையார், கண்ணதாசன், வாலி, வைரமுத்து, நா .முத்துக்குமார்  போன்றோரின் பாடல் வரிகள் சிறப்பாக அந்தப் படத்திற்கே பெருமை சேர்க்கும் விதத்தில் இருக்கும். ஆனால் தத்துவப் பாடல்களை எழுதுவதில் கண்ணதாசனின் முன்னோடியான இவர் எழுதிய கிராமப்பெண்களின் சிறப்பை விளக்கிய ஒரு பாடல் பெருமளவு மக்களின் பாராட்டைப் பெற்றதுடன் கலைஞர் அவர்களின் தனிப்பட்ட பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. யார் அவர்? அவர்தான் காலத்தால் அழியாத பாடல்களைத் தந்த தமிழறிஞர் கவி.கா.மு . செரீப் அவர்கள்.

    'இலக்கியத்தைப் போல, திரைப்படப் பாடல்கள் என்றைக்கும் நிலைத்து நிற்கக் கூடியவை அல்ல. ஆனால், அந்தப் பாடல்களும் கூட, இலக்கியத்துக்கு நிகராக நிலைத்து நிற்க முடியும் என்பதற்கு எடுத்துக் காட்டாக கவி.கா.மு.ஷெரீப் அவர்களின் பாடல்கள் உண்டு. இன்றைக்கும் ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே’ என்கின்ற பாடலைக் கிராமப் புறத்திலே உள்ளவர்களெல்லாம் பாடக்கேட்டு, அவர்கள் அந்தப் பாட்டிலே, ஒரு மகிழ்ச்சியை உருவாக்கிக் கொண்டு நடப்பதைக் கண்டு நான் பூரிப் படைந்திருக்கிறேன்...' இதுதான் கலைஞர் தன் சுயசரிதையான நெஞ்சுக்கு நீதியில்  கவிஞர் செரீப் அவர்களுக்கு தந்த பாராட்டுரை.

கவியின் பிறந்ததினமான இன்று அவரைப் பற்றி தெரிந்து கொள்வோமே!

கா.மு.செரீப் 1914 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் நாள் திருவாரூர் கொரடாச்சேரி அருகிலுள்ள அபிவிருத்தீசுவரத்தில் பிறந்தார். இவரின் தந்தை காதர்சா இராவுத்தர் தாய் இப்ராகிம் பாத்து அம்மாள். இவர்களுக்கு ஒரே மகனாகப் பிறந்தவர் 14 வயதிலேயே தந்தையை இழந்த காரணத்தால் பள்ளிப்படிப்பை நிறைவு செய்யாதவர். தந்தை இருந்தபோது திண்ணைப் பள்ளியில் படித்து அறிவைப் பெருக்கியவர். சிறிய வயதிலேயே தமிழ் இலக்கியங்களில் ஆர்வம் கொண்டவராக வளர்ந்தார். இவர் அரபி மொழியிலும் பாடங்களைக் கற்றுள்ளார் .இவரின் கல்விக்குப் பின்புலமாக இருந்தது இவரின் தாயார்தான்.

தந்தையின் மறைவுக்குப் பின் எழுத்தராக பணி செய்தவருக்கு தமிழின் பழமையான நூல்களைத் தந்து வாசிக்க வைத்து  அறிமுகப்படுத்தியுள்ளார் தாயார் . 15 வயதிலேயே பெரியாரின் வசம் ஈர்க்கப்பட்டவர். சுயமரியாதை இயக்கம் மூலம் அரசியல் பயணத்தை துவக்கியுள்ளார்.18 ஆம் வயதில் பெரியாரைப் போற்றி எழுதிய இவரின் முதல் கவிதை “குடியரசு” எனும் ஏட்டில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது. கவி உலகில் கால் பதித்தாலும் சுதந்திரப் போராட்டங்களிலும் பின்னாளில் அரசியலிலும் பங்கு பெற்று இறுதிவரை நிலையான கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்த பெருமைக்குரியவர் இவர்.

1934 ஆம் ஆண்டில் முகமது பீவி என்பவரை மணந்தார். ஆனால் சில வருடங்களில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மனைவி இறந்ததில் சில காலம் வேதனையில் இருந்த ஷெரீப் 1940 ல் ஜமீலா பீவியை மறுமணம் செய்து பதினொரு பிள்ளைகள் பெற்றார். மேலும் மனித நேயத்தின் அடிப்படையில் ஒரு வளர்ப்பு மகளையும் வளர்த்து வந்தது சிறப்பு .

பெரியாரின் சுயமரியாதைக் கழகம் மற்றும் காங்கிரசில் அரசியல் பயணம் செய்த கவி, ஒரு தருணத்தில் இந்திய அரசியலில் நம்பிக்கையற்று தேசியவாத அரசியலில் கவனம் திருப்பினார். ஆனாலும் பெரியார் மீதும், காந்தியடிகள் மீதும் மிகுந்த மரியாதையும் நட்பையும்  கொண்டிருந்தார்.

கவி அவர்கள் தமிழுக்கு செய்த தொண்டுகள் அதிகம் . அன்றைய ’சிவாஜி’ எனும் இதழில் துணை ஆசிரியராக இருந்து பத்திரிக்கையாளர் எனும் அடையாளம் பெற்று  பின் திருவாரூரில் ’ஒளி’ எனும் மாத இதழைத் துவங்கி அதன் ஆசிரியராக உயர்ந்தார். ஒளி இதழுடன் தமிழ் முழக்கம் சாட்டை எனும் இதழ்களையும் நடத்தியுள்ளார். பத்திரிகைத்துறையில் மிளிர்ந்தாலும் அவ்வளவு எளிதில் வாய்ப்புகளை பெற முடியாத திரைப்படத்துறையிலும் தன் பாடல்கள் மூலம் ஜொலித்தார்.

தத்துவப் பாடல்களில் சிறந்த கண்ணதாசன் தனக்கு முன்னோடி இவரே என இப்படி குறிப்பிட்டு உள்ளார் .” அவர் அடக்கத்தின் உறைவிடம். இன்று கவிதை எழுதும் அனைவருக்கும் மூத்தவர் ஷெரீப். நான் எழுதத் துவங்கிய காலத்திலேயே அவரின் கவிதைத் தொகுப்பு வெளிவந்து விட்டது. ஒளி எனும் தலைப்புடைய அந்தத் தொகுப்பை நான் சுவைத்திருக்கிறேன்.

பண்புகளில் சிறந்தவராக சகிப்புத்தன்மை மிகுந்தவராக புகழ் ஒளியில் தன்னை பிரகடனப்படுத்தாதவராக ஒரு நேர்மையான வாழ்வை வாழ்ந்து இன்றளவும் தன் பாடல்களால் வாழ்ந்து வருகிறார் கவிஞர் ஷெரீப். இவரின் மாண்பை சகிப்புத்தன்மையை எழுத்தாளர் ஜெயகாந்தன் “ஒரு இலக்கியவாதியின் கலையுலக் அனுபவங்கள்” எனும் தனது நூலில் (110-113) சில உண்மை நிகழ்வுகளுடன் குறிப்பிட்டுள்ளார்.

கவிதைத் தொகுப்புகள், சிறுகதைத்தொகுப்புகள்,  நாடக இலக்கியங்கள்   பிற நூல்கள் என ஏராளமான பொக்கிஷங்களை தமிழுக்கு அளித்துள்ளார் கவி அவர்கள். தமிழக அரசின் கலைமாமணி விருது, திரு வி க விருது, கம்பன் கழக விருது,போன்ற எண்ணற்ற விருதுகளையும் பெற்ற கவிஞர் 1994 ல் ஜூலை 7 ல் தனது 79 வயதில் மண்ணுலகை விட்டு விண்ணுலகை எட்டினார்.

தமிழக அரசு இவர் எழுதிய “இறைவனுக்காக வாழ்வது எப்படி ?” “.இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா ?:” “நல்ல மனைவி” , “தஞ்சை இளவரசி”, “வள்ளல் சீதக்காதி” ,, “விதியை வெல்வோம்” போன்ற சில நூல்களை 1998 ல் நாட்டுடைமை ஆக்கியுள்ளது.

 ’சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?’, ’பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’, ’அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை’, ’வாராய் நீ வாராய்’, ’வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா...  போன்ற வாழ்க்கைக்கு இன்றும் பொருந்தும் அற்புதமான பல பாடல்களைத் தந்த கவி கா.மு.ஷெரீப் அவர்களை நினைவு கூர்ந்து போற்றுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com