உறுதி ஏற்போம் தொண்டர்களே!

இன்றைய அரசியல் நிலைமை, அரசியல் விழிப்புணர்வு மற்றும் தேர்தல் நேர்மை குறித்து பகிர்ந்துள்ள மிகவும் தீர்க்கமான வரிகள் ..
Election campaign promise
Election campaign promiseAI Image
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on

சாதியின் பெயரால் கட்சிகள் வளர்க்கும்

தலைவர்களை இங்கு ஒதுக்கிட வேண்டும்!

சொந்த நலனையே கருத்தில் கொண்டு

சொகுசாய் வாழ்ந்து அதிகாரம் செய்ய

அரசியல் அரிதாரம் பூசியே வருகின்ற

அனைத்துத் தலைவர்களையும் விலக்கிட வேண்டும்!

முந்தா நாள்வரை மோதிக் கொண்டு கிடந்த தலைவர்களின்று

ஒன்றாய் மேடையில் கைகளை உயர்த்தியே பிடிக்கின்றார்

நாமும் மேடையின் கீழே அமர்ந்து

நாணமே கொஞ்சமும் மனதினில் இன்றி

கைகளைத் தட்டிக் களிக்கின்றோம் ஒன்றாய்!

நமக்கு என்று மனமும் உண்டு

நல்லது கெட்டதை அறியுமாற்றலும் உண்டு!

அதனை நாமும் வெளிப் படுத்தினாலே

அயர்ந்து போவார் தலைவர்கள் இன்று!

கொள்கை, கோட்பாடு அற்ற

கூட்டணி தோன்றுதலால் யாருக்கு லாபம்?

நூற்றுக் கணக்கில் வாக்குறுதி தந்த

எந்தக் கட்சியும் நிறைவேற்றியது இல்லை

என்பது நன்றாய்த் தெரிந்தே இருக்க…

நாமும் குனிந்தே நின்றிட வேண்டுமா?

ஏமாறும் நாமும் இருக்கின்ற வரையில்

ஏமாற்று பவர்களை ஒழித்திடல் எங்ஙணம்?

இன்றைக்கு இனிப்பாய் எடுத்து உரைப்பவர்கள்

பதவிக்கு வந்ததும் பகட்டாய் ஒயிலாய்

காணும் எல்லையைக் கடந்தே சென்றிடுவர்!

எத்தனை முறைகள் இதனை நாமும்

கண்கூடாகவே கண்டு வெதும்பி நின்றோம்!

ஆனாலும் நம் ஆறாம் அறிவு

தேர்தல் நேரத்தில் மழுங்கியே போவதேன்?

இந்த முறையாவது மழுங்க விடாமல்

முழுதாய் நாமும் விழிப்புடன் இருப்போம்!

இலவசம் கொடுத்து இழுப்போர் தமையும்

சாதியைச் சொல்லி சமரசம் பேசுவோரையும்

ஒதுக்கியே விட்டு உண்மை யானவர்களை

மனசாட்சிப் படி தேர்ந்தே எடுப்போம்!

அடுத்து வரும் ஆண்டுகள் ஐந்தில்

ஓரளவாவது நிம்மதியாக நாம் வாழ…

ஆயுதம் இப்போது நமது கைகளில்!

சிந்தித்தே நாமும் சிறப்பாய்ச் செயல்பட்டால்

சிரமங்கள் குறைந்து சீராக வாழ்ந்திடலாம்!

வாழ்நாள் முழுவதுமே வாஞ்சையுடன் கட்சிக்கு

உழைத்தே ஓடான ஒவ்வொரு தொண்டனின்

மனநிலையை யாரும் மதிப்பதே இல்லையிங்கு!

தலைவர்களின் விருப்பங்களே தலையாய தாகி

அவற்றையே நிறைவேற்றும் அவலத்தை இனியாவது

ஒழித்துக் கட்டிட உறுதிபூணுங்கள் தொண்டர்களே!

logo
Kalki Online
kalkionline.com