பெட்ரோல் குண்டுகள் எழுப்பும் அரசியல் அலைகள்

பெட்ரோல் குண்டுகள் எழுப்பும் அரசியல் அலைகள்
Published on

மிழ்நாட்டில் அண்மைக்காலமாக சென்னை, கோவை, திண்டுக்கல், ஈரோடு, ராமநாதபுரம், பொள்ளாச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ். எஸ் ஆதரவாளர்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்த நிலையில், இந்த சம்பவங்கள் தொடர்பாக சிலரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.

 பல மாநிலங்களில் பிஎஃப்ஐ எனப்படும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்புடைய 95 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) செப்டம்பர் 22ம் தேதி ஒரே நாளில் சோதனை நடத்திய பின் 5 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

.யார் இந்த பாப்புலர் ஃபிரண்ட்?

தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் (சிமி) முன்னாள் உறுப்பினர்களுடன் இணைந்து ஆயுதப் பயிற்சிக்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ), ரகசிய அமைப்பை உருவாக்கத் தயாராகி வருவதாக போலீஸார் தங்கள் எப்ஐஆரில் கூறியுள்ளனர். முஸ்லிம்கள் மீது நடந்ததாகக் கூறப்படும் அட்டூழியங்களுக்கு பழிவாங்குவததே இதன் நோக்கம் என்றும் சொல்லப்படுகிறது. 

ஏன் இந்த அதிரடி ?  

கடந்த  ஜூலை 12 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதியின் பாட்னா வருகைக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரண்டு இந்திய விரோத சதிகளை கண்டுபிடித்ததாக பிகார் காவல்துறை கூறியது. அதையடுத்து இந்திய உள்துறை அமைச்சகம் இந்த அமைப்பு குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) ஒப்படைத்தது.

அதையொட்டி, பி.எஃப்.ஐ. மீதான கண்காணிப்பு தீவிரமாகியது. நாடு முழுவதும் அவர்கள் பெரியளவிலான தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக வெளி நாட்டிலிருந்து பணபரிமாற்றம் நடந்திருப்பதாகவும்  என்.ஐ.ஏ. கூறுகிறது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகி ஷபீக் பயேத் என்பவர் கேரளாவில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட குறிப்புகளின்படி, பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திட்டமிட்டதாகவும், இதற்காக பயிற்சி முகாம் ஒன்றை அந்த அமைப்பு ஏற்பாடு செய்திருந்ததாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அத்துடன், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள முக்கிய இடங்கள் மற்றும் தனிநபர்கள் மீது ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தும் வகையில் பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை சேகரிப்பதில் அந்த அமைப்பு ஈடுபட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. மேலும், அமைப்பு சேகரித்த 120 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களையும் கைப்பற்றியுள்ள அமலாக்கத்துறை, நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவித்துள்ளது. 

இதற்கு முன்பும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றாலும், மத்திய விசாரணை அமைப்புகள் இணைந்து நாடு தழுவிய அளவில் இத்தகைய மாபெரும் சோதனையை நடத்தியிருப்பது இதுவே முதன்முறை. 

இந்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளான ரிஹாப் இந்தியா பவுண்டேஷன்(ஆர்ஐஎப்), தேசிய மனித உரிமைகளுக்கான கூட்டமைப்பு (என்சிஹெச்ஆர்ஓ), தேசிய பெண்கள் முன்னணி, ஜூனியர் ஃப்ரண்ட், எம்பவர் இந்தியா பவுண்டேஷன், அனைத்து இந்திய இஸ்லாமிக் கவுன்சில் (ஏஐஐசி), கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா (சிஎப்ஐ) ஆகிய அமைப்புகளுக்கு ஒன்றிய அரசு ஐந்து ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் என்ன நடந்தது?

தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் உள்ள அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ சோதனை நடத்தியது.

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட பல இடங்களில் பி.எப்.ஐ அலுவலகங்கள். சென்னை மாநில புரசைவாக்கத்தில் உள்ள பி.எப்.ஐ. தலைமை அலுவலகத்திலும் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியதில் மிக முக்கிய ஆவணங்களை கைபற்றியதாகவும் அதன் விளைவாகத்தான் இந்த தடை அறிவிப்பு என்றும் சொல்லப்படுகிறது.

அரசியல் ஆக்கப்படுகிறதா?

 சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம். இவர்கள் மாணவர்களைப் போலவும், மனித உரிமை இயக்கம் போலவும் அரசியல் இயக்கம் போலவும் முகமூடிகளை அணிந்துகொண்டு நம் நாட்டில் இயங்கி வருகிறார்கள்.

தீவிரவாத இயக்கங்களுக்கு ஒரு பின்புலமாக இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. பல நாடுகளுக்குத் தீவிரவாதத்துக்கு ஆட்களை அனுப்பும் இயக்கமாகவும் உள்ளது.” என்ற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.  தொடர்ந்து தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் அறிக்கைகள் அளித்துக்கொண்டிருக்கின்றனர். 

இதைத் தொடர்ந்து அரசியல் அலை எழுந்திருக்கிறது  விஷயம் அரசியல் ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. 

 தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) மற்றும் அமலாக்கத் துறை இயக்குநரகம் ஆகியவை பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பி. எஃப்.ஐ) அமைப்பினர் தொடர்பான இடங்களில் சோதனை செய்ததே  தமிழ் நாட்டில் நடந்த சமீபத்திய தாக்குதல்களுக்கு காரணம் என்றும்  பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து, தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “தாக்கப்பட வாய்ப்புள்ளவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், சூழ்நிலை சரியாகும்வரை தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு நிலைமை பராமரிக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

ஆனால் , “கடந்த காலத்தில் நடந்த சில சம்பவங்களைப் போல பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் தாங்களே பெட்ரோல் / மண்ணெண்ணெய் குண்டுகளை வீசி தமிழ்நாட்டில் மத மோதல்களை உருவாக்க முயற்சி செய்யக்கூடும்” என்ற சந்தேகத்தை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்றவர்கள்  அறிக்கை வெளியிட்டுள்ளனர்.  நடந்த தாக்குதல்களில் எவரும் கொல்லப்படவில்லை. எங்களால் இதுவும் முடியும் என்ற ரீதியிலான அடையாள தாக்குதல்களான இவை “வெற்று மிரட்டல்” என்பதையும் சுட்டிக்காடுகிறார்கள்  அவர்கள்

தமிழக அரசின் நிலை

இந்நிலையில், “விளம்பரத்திற்காக தனக்கு தானே பெட்ரோல் குண்டு வீசிக்கொண்டதாக விசாரணையில் உறுதி செய்யப்பட்டால் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

இந்த வன்முறையை வளரவிட்டார்கள் எனில், பா.ஜ.க இந்த விவகாரத்தை அவர்களுக்கு சாதகமாக எவ்வளவு தூரம் மாற்ற முடியுமோ, அரசியல் ரீதியாக எவ்வளவு ஆதாயம் தேட முடியுமோ, அதை செய்வார்கள் என்பதையும், இந்த விவகாரத்தை அரசு சரியாக கையாளவில்லை எனில், பா.ஜ.க.வுக்கு இவர்களே அதற்கான பாதையை அமைத்து கொடுப்பதுபோல் ஆகிவிடும்,"  என்று மூத்த தி.மு.க. தலைவர்கள்  கட்சி தலைமையை எச்சரித்திருக்கிறார்கள்.  

முதல்வர் ஸ்டாலின் “வெறும் நடவடிக்கைகள் எடுப்பதை விட, இத்தகைய சம்பவங்களை தடுக்க வேண்டும்... அதே சமயத்தில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பதில் கவனமாகயிருக்கிறார்.

அதிரடி நடவடிக்கைகள் மூலம்  "இந்த விவகாரம் தொடர்பாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது எந்த முத்திரையும் குத்தாமல், சட்டரீதியாக கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்று காவல்துறைக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com