பூப்பூக்கும் ஓசை!

பூப்பூக்கும் ஓசை!
Published on

வேர்க்கடலை சுற்றி வந்த காகிதத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தவுடன் அவளையறியாமல், சுந்தரியின் இதழ் புன்னகை பூத்தது. ஏதோ பாட புத்தகத்தின் ஒரு பக்கம். “ஒரு பொருள் அதிர்வுக்கு உட்படுத்தப்படும்போது ஒலி உருவாகிறது. ஒரு பொருளின் முன்னும் பின்னுமான இயக்கம் சுற்றுப்புறத்திலுள்ள பொருள்களை அதிர்வுறச் செய்கின்றது”. ஒலியைக் கேட்டால் மட்டுமல்ல ஒலி என்ற சொல்லே அவளைப் பரவசப்படுத்தும்.

அவளுடைய உலகம் ஒலிகளாலானது. இயற்கையின் சொல்வளம் ஒலி என அவளுக்குத் தோன்றும். காற்று, மழை, கடலலை, அருவி, உயிரினங்கள் என அனைத்திலிருந்தும் வரும் ஒலி அவளுக்கு மகிழ்வைத் தரக் கூடியது. எவ்வளவு பெரிய சத்தத்திற்கும் கலங்காதவள் அமைதியைக் கண்டு அஞ்சுவாள். அவளைச் சுற்றி எதோ ஒரு சப்தம் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

எல்லாக் குழந்தைகளுமே ஓசைகளால் ஈர்க்கப்படுவரெனுனிம் சுந்தரியுடைய ஒலியார்வம் சற்றுக் கூடுதலாயிருந்தது..

மூன்று வயதில் அவள் விரும்பி விளையாடியது ஒரு டம டம வண்டி. அந்த வண்டியின் இரண்டு சக்கரங்களிலும் மஞ்சள் வர்ணம் அடிக்கப் பட்டிருக்கும். வண்டியின் உடல் சிகப்பு நிறமும் அதன் முகப்பில் இரண்டு முரசுகளும் அவற்றின் மேல் இரண்டு குச்சிகளும் இருக்கும். கயிறைக் கட்டி அந்த வண்டியை இழுக்கும் போது, அந்தக் குச்சிகள் இரண்டும் முரசுகளில் மீது டம டம என அடித்துக் கொண்டே வரும். அந்த சத்தத்திற்கு ஏற்ப கயிற்றை வேகமாகவும், மெதுவாகவும் மாற்றி மாற்றி இழுத்துக் கொண்டு ஓடுவதில் குழந்தை சுந்தரிக்கு அவ்வளவு குஷி. அதற்குப் பிறகு சாவி கொடுத்தால் ட்ரம்ஸ் வாசித்துக் கொண்டே வரும் கரடி பொம்மையை மாமா வாங்கிக் கொடுத்ததில் டம டம வண்டிக்கு மெளஸு குறைந்தது. கோயில் திருவிழாவில் வாங்கின ஊதலை ஆர்வ மிகுதியால் தொடர்ந்து ஊதிக் கொண்டே இருந்ததில் கோபமான சித்தப்பா அதைப் பிடுங்கி பரணில் எறிந்து விட, சுந்தரியின் தொடர் அழுகைச் சத்தத்திற்கு ஊதலே மேல் என்று, உடனே சென்று புது ஊதல் வாங்கித் தந்தபின் தான் அவள் முகத்தில் சிரிப்பு வந்தது.

சுப்பையா தாத்தா அடிக்கும் மணி சத்தத்திற்காகவே தினம் கோயிலுக்குப் போவாள். அவர் அருகே நின்று கொண்டு வாய் கொள்ளாச் சிரிப்புடன் அந்த மணி அசைவதையும் டங் டங் என கணீரென்று ஒலி வருவதையும் மகிழ்வோடு கேட்டுக் கொண்டிருப்பாள். “வா பாப்பா” என்று சிரித்தபடியே அவளைத் தூக்கி, அவள் கையைப் பிடித்து மணியை இணைத்திருக்கும் கயிறை அவர் இழுத்தவுடன், கோவில் மணியின் ஓசையும், சுந்தரியின் சிரிப்பும் போட்டி போட்டுக் கொண்டு அந்த இடத்தை கலகலப்பாக்கும்.

சுந்தரிக்குப் பத்து வயது இருக்கும் பொழுதுதான் அவளுடைய முதல் ரயில் பயணம். ரயிலைக் கண்டதுமே சிறு குழந்தைக்கான உற்சாகம் அவளை தொற்றிக் கொண்டது. ரயில் கிளம்பியதும் அதனுடைய தடக் தடக் தடக் ஒலிக்கு ஏற்ப தலையை ஆட்டிக் கொண்டே வந்தாள். பாலத்தைக் கடக்கும் போது வந்த டடடட டடடட டடடட ஒலி அவளை மேலும் ஈர்த்தது. வளர்ந்து பெரியவளான பின் வீட்டில் மற்றவர்கள் விமானத்தில் சென்றாலும், அவளுடைய தேர்வு ரயில் மட்டுமே. அதுவும் இரவு ஏறித் தூங்கிக் கொண்டு செல்வதெல்லாம் அவளுக்குப் பிடிக்காது. பகல் நேர ரயில், அதுவும் குளிர்சாதன வசதி இல்லாமல் இருப்பதுதான் அவள் விருப்பம்.

பள்ளி நாட்களில் விடிகாலையில் மொட்டை மாடியில் படிக்க ஆரம்பித்ததே பறவைகளின் கீச்சிடும் ஒலிக்காகத்தான். பறவைகளின் கீச் தான் அவளுடைய ஒலிமயமான நாளுக்கு பிள்ளையார் சுழி போடும். அதே போல் கூடடையும் பறவைகளின் ஒலியைக் கேட்பதற்காக மொட்டை மாடியில் மாலை புத்தகத்துடன் சென்றுவிடுவாள். கோயில் செல்லும் போது, அங்கு மதில்களில் இருந்து புறாக்கள் குனுகுவதைக் கேட்டுக் கொண்டு, அப்படியே நின்றுவிடுவாள். உடன் வருபவர்கள் பத்து நிமிடமாவது காத்திருக்க வேண்டும்.

அவர்கள் வீட்டைத் தாண்டித்தான் இடுகாட்டிற்குச் செல்ல வேண்டும். முதல் முறையாக வித்தியாசமான ஒலி கேட்டு வாசலுக்கு ஓடி வந்த போது, ஒரு இறுதி ஊர்வலத்தின் முன் இருவர் தப்பு வாசிக்க ஐந்தாறு பேர் ஆடிக் கொண்டு செல்வதைக் கண்டாள். அது குறித்து பாட்டியிடம் கேட்ட போது, தப்பாட்டதைப் பற்றி அவர் கொடுத்த தகவல்கள் மேலும் சுவாரசியமாயிருந்தது. தப்பு எனும் பறை கொட்டு சாவுக்கு மட்டும் அல்லாது அவர்களுடைய கிராமத் திருவிழாக்களிலும் உண்டு என்றாள். உடனே அப்பாவை நச்சரித்து கிரமாத்திற்கு திருவிழா காணச் சென்று வந்ததிலிருந்து, வருடம் தவறாமல் அங்கு போவது வழக்கமாகிவிட்டது. மணமாகி சென்னை வந்தபின் நாலைந்து முறை மட்டுமே செல்ல முடிந்தது.

“சுந்தரி, கொஞ்சம் மாவு மில் வரைக்கும் போயிட்டு வரியாம்மா”? இந்தக் கேள்வி கேட்பது சுந்தரியின் அம்மா மட்டுமில்லை. அந்தத் தெருவில் உள்ள அவர்கள் சொந்தம், நட்புகள் அனைவரும்தான். இவள் தான் தானே மாவரைக்கப் போவதாகச் சொல்லி சொல்லி அவர்களைப் பழக்கப் படுத்தி வைத்திருந்தாள். மாவு அரைக்கும் அந்த மெஷின் சத்தத்தில், அங்கிருக்கும் பெஞ்சில் அமர்ந்து கண்களை மூடி தியானத்தில் இருக்க சுந்தரியால் மட்டுமே முடியும். ”என்னம்மா எப்பப் பாரு மெசின்க்கு வந்து தூங்கிடறே. மாவு அரைச்சு, ஆற வச்சு தூக்குல கொட்டி வச்சுட்டேன். எடுத்துட்டு கெளம்பு, லைன்ல ஆளுங்க நிக்கறாங்க பாரு” என உரிமையாக அதட்டி அனுப்புவார் வேலு அண்ணாச்சி. இஷ்டமே இல்லாமல் கெளம்புவாள்.

எஸ் எஸ் எல் சி முடித்ததும் தோழிகளுடன் சேர்ந்து டைப்ரைட்டிங் க்ளாஸ் சேர்ந்ததற்கு முக்கிய காரணம் வகுப்பில் இருபது பேர் ஒரே நேரத்தில் தட்டச்சும்போது வரும் ஒலிக்காகத்தான். முதலில் வரும் படபட, தடதட வும், பிறகு அடுத்த வரிக்கு போகும் போது வரும் க்ளிங் க்ளிங் கும் அவளை மெய் மறக்கச் செய்யும். அதை ரசித்துக் கொண்டே பயின்றதில் அவளால் நான்கு முறை முயன்றும் தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை.

படித்து முடித்ததும் அவள் வேலைக்குச் சேர்ந்தது ஒரு மழலையர் பள்ளி. அங்கு சின்னஞ் சிறு மலர்களின் சிரிப்பும், கும்மாளமும், கூச்சலும், அழுகையுமான ஓசைகள் அவளைக் குதூகலமாக்கியது. குழந்தைகளோடு குழந்தையாக தானும் ஒரு பட்டாம்பூச்சி போல் உணர்ந்தாள். மற்ற வகுப்புகளை விட அவளுடைய வகுப்பு சற்றுக் கூடுதலான இரைச்சலோடு இருக்கிறது என்ற புகார் பற்றி அவள் கவலைப்படவில்லை.

”தாளிச்சு காயைப் போட்டவுடன் தட்டு போட்டு மூடி வச்சுட்டு வா. கொஞ்ச நேரம் கழித்து திருப்பி விடலாம்” என்று அம்மா சொல்வதைக் கேட்க மாட்டாள். கரண்டியால் காயை நாலு திருப்பு திருப்பி விடும் போதும், கரண்டியில் ஒட்டிக் கொண்டிருக்கும் காயை வாணலியில் தட்டும் போதும் ஒரு சீரான தாள ஒலியைக் கடைபிடிப்பாள். அதற்கேற்றபடி தனக்குப் பிடித்த பாடல் எதையாவது கூடவே பாடிக் கொண்டிருப்பாள். இதே போல் வேர்க்கடலைக்காரன் கடலை வறுத்துக் கொண்டே, வாணலியில் தட்டும் ஓசைக்காக அவனைப் பின் தொடர்ந்து ரெண்டு மூன்று தெருக்கள் சென்றிருக்கிறாள்.

”இவ என்ன பாத்திரம் தேய்க்கிறாளா, இல்லை பட்டறையில் வேலை செய்யறாளா? எதற்கு இவ்வளவு சத்தம்?” என்று அப்பா, அம்மாவிடம் இரைந்து கொண்டிருப்பார். பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒரு ஒலி தரும். கரண்டியும் கரண்டியும் உரசும் போது ஒரு ஒலி, அதுவே கரண்டி பாத்திரத்தில் படும் போது ஒரு ஒலி, இரண்டு பாத்திரங்கள் இடித்துக் கொள்ளும் போது வருவது தனி ஒலி, ஸ்பூன் கீழே தவறி விழுந்து விட்டாளோ அல்லது எதாவது பாத்திரத்தில் உரசினோலோ அது மெலிசான ஒலி. சுந்தரிக்கு, பாத்திரம் தேய்க்கும் போது அவை எல்லாம் ஒன்றோடொன்று பேசிக் கொள்வது போலிருக்கும். அதை கவனிப்பதில் உள்ள சுவாரசியம் இந்த அப்பாவுக்கு எங்கே புரியப் போகிறது?

திருமணமாகி சென்னை வந்தபின், வாரம் தவறாது அவளுக்கு கடற்கரை செல்ல வேண்டும். அங்கு நன்கு இருட்டும் வரை கரையில் அமர்ந்து இருப்பாள். அலையின் ஓசையும் சுற்றி உள்ள மக்கள் செய்யும் ஆராவாரங்களும் அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும். உடன் இருக்கும் கணவன் ராமிடம் அதிகம் பேச மாட்டாள். ஆரம்பத்தில் ராமிற்கு இது சலிப்பாக இருந்தாலும் போகப் போக அவள் இயல்பு பழகியதில், போன அரை மணி நேரத்தில் இரண்டு கைகளையும் தலைக்கு வைத்துக் கொண்டு அப்படியே தூங்கி விடுவான். இருட்டிய பிறகு, அவளுக்கு அங்கிருந்து எழ மனமே வராத போதும், நேரமாகிவிட்டதென்று அவனை எழுப்புவாள். வீடு வந்து வேலை முடித்து தூங்கும் வரை, ஏன் கனவிலும் கூட அலையோசை கேட்டுக் கொண்டே இருக்கும்.

மழைக்கால இரவுகளில் ஜன்னல் கம்பிகளைப் பிடித்தபடி உறங்காதிருப்பாள். மழையின் வேகம் பொறுத்து மாறும் ஒலி ஒரு நல்ல இசையாய் இருக்கும். மழை நின்ற இடைவெளியில் ஒலிக்கும் தவளைகளின் க்ராக்கக் .. க்ராக்கக் தாலாட்டாக மாற உறங்கச் செல்வாள்.

அபிநயாவும் அடுத்து அருணும் பிறந்த பின், வேலை சரியாக இருந்தாலும், மேலும் சற்றுக் கூடுதலாக பல ஒலிகள் பழகியது. அழுகை, மழலையோடு, அவர்கள் சற்று வளர்ந்த பின் அபிநயாவின் பாதம் எழுப்பும் சலங்கை ஒலியும் அருண் விரல்கள் உண்டாக்கும் மிருதங்க நாதமும் வீட்டை நிரப்பின.

ஒரு நாள் மதிய வேளையில் சேனலை மாற்றிக் கொண்டே வந்த போது, அஜீத் ஆக்ரோஷமாக “சத்தம் இல்லாத தனிமை வேண்டும்” என பாடுவதைக் கேட்டு அவளுக்குச் சிரிப்பு வந்தது. தனிமையே கொடுமை, அதுல சத்தமும் இல்லேன்ன, மனுஷன் எப்படி வாழறது? நான் எழுதினா, தனிமை இல்லாத சத்தம் வேணும்னு எழுதுவேன். சத்தம் ஒரு துணையில்லயோ நமக்கு என எண்ணியபடியே டிவியை அணைத்துவிட்டு எழுந்தாள்.

அபிநயா ஆகாஷை அம்மாவுக்கு அறிமுகப் படுத்தியது, அவன் கலந்து கொண்ட ஒரு இசைக் கச்சேரியில்தான். அவன் ஒரு ட்ரம்மிஸ்ட். கச்சேரி முடிந்தவுடன் அவனை விரும்புவதாகக் கூறியவுடன் ராம் முகம் சற்று கடுகடுப்பானது. ஆனால் அன்று அவன் வாசிப்பைக் கேட்ட சுந்தரிக்கு அவனை மிகவும் பிடித்துப் போனது. மறுபேச்சில்லாமல் மகளின் விருப்பத்திற்கிணங்கி, ராமையும் அவர்கள் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள வைத்தாள்.

போன வருடம் எல்லோரும் குடும்பமாக டூர் போய் விட்டு வந்தவுடன், அபிநயா அருணைத் தனியாகக் கூப்பிட்டு சொன்னாள், “அம்மாவிடம் எதோ மாற்றம் தெரிகிறது. முன் மாதிரி உற்சாகம் இல்லை. ஒரு தடவைக்கு நான்கு தடவை கூப்பிட்டால்தான் என்னவென்று கேட்கிறாள்.”

“ஆமாம் நானும் கவனித்தேன், வயசாயிடுச்சு இல்லியா. பத்து நாள் தொடர்ச்சியா பயணிச்ச அலுப்பு இருக்கும்” என்றான்.

சில மாதங்களுக்கு முன் ராம் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு திருச்சி சென்றிருந்தார். அருண் அலுவலக்தில் இருந்து வர தாமதமாகும் என்று சொல்வதற்காக அம்மாவிற்கு போன் பண்ணிக் கொண்டே இருக்கிறான். மறுமுனையில் பதிலே இல்லை. பதறிப் போய் வீட்டுக்கு வந்தால், சுந்தரி எதோ பாடலைப் பாடிய படி ஊஞ்சலில் அமர்ந்து பூ தொடுத்துக் கொண்டிருக்கிறாள். அவன் அம்மா என்றழைத்தபடி வீட்டிற்குள் வந்ததை அவள் அறியவில்லை. முதலில் ஆச்சரியமானவன், அருகில் சென்று தோளைத் தட்டியவுடன், “எப்படா வந்த? கதவு திறந்த சத்தம் கூட கேட்கலையே” என்றாள். அவன் பதில் சொல்லாமல்,

“உன் போன் எங்கே” என்றான்.

“இங்கதாண்டா இருக்கு” என அருகில் இருந்த மேஜையைக் காண்பித்தாள்.

அதை எடுத்துப் பார்த்த போது அது ஸைலண்ட் மோடில் இல்லை. இவ்வளவு அருகில் போன் அடித்துகூட அம்மாவுக்கு கேட்கவில்லை என்பதில் கவலையான அருண் அந்த வாரமே அவளை மருத்துவரிடம் காண்பித்ததில் அவள் செவித் திறன் குறைந்து விட்டதென்றும் ஹியரிங் எயிட் உதவியுடன் அவள் எல்லா ஒலிகளையும் கேட்கலாம் என்றார் டாக்டர். காது கேளாமல் போனதையும் ஹியரிங் எயிடின் தேவை பற்றியும் சொன்ன போது, அருணும் ராமும் பயந்த அளவு சுந்தரி அதிர்ச்சி அடையவில்லை. கையில் வாட்ச் கட்டிக் கொள்வது போல அதையும் தேவையான நேரத்திற்கு எடுத்து மாட்டிக் கொள்வாள்.

தீபாவளி கொண்டாட்டத்திற்கு அபிநயாவும் ஆகாஷும் ஊரிலிருந்து வந்த போது,

ஆகாஷ், “அருண், டிவி நிகழ்ச்சிலாம் ரொம்ப போர் அடிக்குதுப்பா, யூ ட்யூப்ல பழைய கச்சேரி எதாவது கேட்கலாம்” என்றான்.

”அம்மா, உனக்கு ரொம்பப் பிடிச்ச கச்சேரி. சாகிர் ஹுஸைன், விநாயகராம், சிவமணி எல்லாரும் சேர்ந்து ஒரு ஃப்யூஷன்”, என்றபடியே அவள் கையில் ஹியரிங் எய்டை கொடுத்துவிட்டு, டி வியில் யூ ட்யூபை ஆன் செய்தான் அருண்.

“வேணாம்டா இது” என்று ஹியரிங் எய்டை அவன் கையில் திருப்பிக் கொடுத்து விட்டு,

“காதெல்லாம் ஓசை நெறஞ்சு இருக்குடா. நா வெறும்ன பாக்கறேன்” என்று சொல்லி விட்டு புன்னகையோடு, திரையில் வந்த ஒளியை பார்த்துக் கொண்டே மனதளவில் ஒலியையும் ரசிக்க ஆரம்பித்தாள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com