இந்திய குடியரசு தலைவர்கள்- தெரிந்ததும் தெரியாததும்..!

டாக்டர் இராஜேந்திர பிரசாத்
டாக்டர் இராஜேந்திர பிரசாத்

ந்தியாவின் முதல் மற்றும் இந்தியாவின் நீண்ட கால ஜனாதிபதி  டாக்டர் இராஜேந்திர பிரசாத் இவர் தனது ஊதியத்தில் பாதியை மட்டுமே சம்பளமாக பெற்றுக்கொள்ள சம்மதித்தார், தனக்கு அதற்கு மேல் தேவையில்லை என்று கூறி மீதியை நாட்டிற்காக அர்பணித்தார். தனது பதவிக்காலம் முழுவதும் இதைப்பின்பற்றினார்.

இந்தியாவிலிருந்து  நோபல் பரிசுக்காக அதிக முறை பரிந்துரைக்கப்பட்டவர் யார்  தெரியுமா?  காந்தியடிகளோ, நேரு ஜியோ அல்ல, இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவி வகித்த சர்வபள்ளி டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் தான். இவர் பெயரை இந்திய அரசு 18 முறை நோபல் பரிசுக்கு  பரிந்துரை செய்தது. இவருக்கு அடுத்த படியாக நேருவுக்கு 13 முறையும், காந்தியடிகளுக்கு 12 முறையும் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

இந்தியாவின் 3 வது  ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க தேர்தல் நடந்தபோது அதில் 17 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் அதிகம் பேர் போட்டியிட்டது அப்போது தான். அந்த தேர்தலில் போட்டியிட்டு வென்றவர் தான். டாக்டர் ஜாகிர் உசேன். ஜனாதிபதி பதவியில் அமர்ந்த முதல் இஸ்லாமியர். இரண்டே  ஆண்டுகளில்  பதவியில் இருக்கும் போது இறந்த முதல் ஜனாதிபதி

இடைக்கால ஜனாதிபதியாகவும் பின்னர் இந்தியாவின் 4 வது ஜனாதிபதிபாகவும் பதவி வகித்தவர் வி. வி. கிரி மட்டுமே. ஜனாதிபதி தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி நிறுத்திய வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக நின்று  வெற்றி பெற்ற ஜனாதிபதி வி. வி. கிரி மட்டுமே. 40 ஆண்டு காலம் சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் தொடர்பில் இருந்தவர். ஜனாதிபதி ஆன பிறகும் கூட ஒரு முறை சிறப்பு அழைப்பின் பேரில் சர்வதேச தொழிலாளர் மாநாட்டில்  கலந்துகொண்டு இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்.

இந்தியாவின் 5 வது ஜனாதிபதி பக்ரூதீன் அலி அகமது ஆரம்பத்தில் அஸ்ஸாம் சட்டமன்றத் தேர்தலில் வென்று பின்னர்  படிப்படியாக முன்னேறி ஜனாதிபதி ஆனவர். விளையாட்டுகளில் ஆரவமுள்ளவர் கால்பந்து, கிரிக்கெட் மற்றும் கோல்ஃப்  சங்க தலைவராக இருந்தவர் வேறு எந்த ஜனாதிபதிக்கும் இல்லாத பெருமை இது.

நகைச்சுவையோடு பேசுவதில் வல்லவர். ஒரு முறை " இவர் 18 வயதான இளம் பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார்'என்றொரு குற்றச்சாட்டு எழுப்பினார் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர். " நான் 18 வயதில் இளம் பெண்ணை மணந்து உண்மை தான், ஆனால் அது 20 ஆண்டுகளுக்கு முன்பு' என உடனே பதில் கூறி அந்த உறுப்பினர் வாயை அடைத்து விட்டார் பக்ரூதீன் அலி அகமது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியின்றி தேர்வான ஒரே ஜனாதிபதி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நீலம் சஞ்சீவ ரெட்டி .  இந்தியாவின் 6 வது ஜனாதிபதியான இவர் மாநில அமைச்சர், மாநில  முதலமைச்சர், மத்திய அமைச்சர், பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் குடியரசு தலைவர் போன்ற பதவிகளில் இருந்த ஒரே தலைவர்.

கியானி ஜெயில் சிங்
கியானி ஜெயில் சிங்

சீக்கிய மதத்திலிருந்து இந்தியாவின் 7 வது ஜனாதிபதியானவர்  கியானி ஜெயில் சிங்  ஏழை விவசாயின் மகனாக ஒரு மண் குடிசையில் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர். எதையும் ஒளிவு மறைவின்றி பேசக் கூடியவர். ஜனாதிபதி ஆன பிறகு அவர் ஒரு முறை " நான் செருப்பு தைப்பேன், கல் உடைப்பேன், சாலை போடுவேன், சுவர்ல கட்டத் தெரியும். என் சொந்த வீட்டைக்கூட என் கிராமத்தில் நானே கட்டினேன் .

வயலில் உழத்தெரியும், கத்திகள் செய்யக்கூட தெரியும். புத்தகங்கள் பைண்டிங் செய்வது என் பொழுது போக்கு, என் வீட்டில் இருக்கும் எல்லாப் புத்தகங்களையும் நானே பைண்டிங் செய்து வைத்திருக்கிறேன் ' என்று பத்திரிகையாளர்களிடம் மறைக்காமல் பேசியவர்.

தனது பதவி காலத்தில் ராஜீவ் காந்தி, வி. பி. சிங், சந்திர சேகர் மற்றும் நரசிம்ம ராவ் என நான்கு பிரதமர் களுடன் பணியாற்றிய ஒரே ஜனாதிபதி இந்தியாவின் 8 வது ஜனாதிபதியாக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஆர். வெங்கட்ராமன் தான். பாகிஸ்தான் சென்ற முதல் ஜனாதிபதியும் அவர் தான். தமிழ் நாட்டில் பல தொழில் பேட்டைகள் அவர் தமிழகத்தில் அமைச்சராக இருந்த காலத்தில் வந்தது தான்.

கே. ஆர். நாராயணன்
கே. ஆர். நாராயணன்

இந்தியாவின் பல பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர் சங்கர் தயாள் சர்மா. இவர் தான் இந்தியாவின் 9 வது ஜனாதிபதி. வேறு எந்த ஜனாதிபதிக்கும் கிடைக்காத பெருமை இவர் ஓமன் நாட்டிற்கு விஜயம் செய்த போது கிடைத்தது. இவர் அங்கு சென்ற போது அந்நாட்டு மன்னர் விமான நிலையத்திற்கு நேரடியாக வந்து இவருக்கு கை கொடுத்து வரவேற்றார். அதற்கு மன்னர் கூறிய காரணம்  *சங்கர் தயாள் சர்மாவின் மாணவன் நான்'.

இந்தியாவின் பட்டியல் இனத்தைச் சேர்ந்த முதல் ஜனாதிபதி மற்றும் கேரள மாநிலத்தின் முதல் ஜனாதிபதி அவர் தான்  இந்தியாவின் 10 வது  ஜனாதிபதியான கே. ஆர். நாராயணன். இந்தியாவில் இதுவரையில் சிறுபான்மை அரசு ஆட்சியில் இருந்த போது நடத்தப்பட்ட ஜனாதிபதி தேர்தலில் 95 சதவீதம் வாக்குகளை பெற்று வென்றவர் இவர் மட்டுமே. ஜனநாயக கடமை குடியரசுத் தலைவருக்கும் உண்டு என்பதை  நிரூபிக்க  மக்களவைத் தேர்தலில் வாக்களித்த முதல் குடியரசு தலைவர். 1998 ல் ராஷ்டிரபதி பவன் வாக்கு சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.

ஏ. பி. ஜெ. அப்துல் கலாம்
ஏ. பி. ஜெ. அப்துல் கலாம்

அரசியல் சாராத ஒரு விஞ்ஞானி மற்றும் பிரம்மச்சாரி இந்தியாவின் 11 வது ஜனாதிபதியாக பொறுப்பு ஏற்றார் அவர்தான் ஏ. பி. ஜெ. அப்துல் கலாம். அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளை  விட அதிகமாக பொது மக்களை சந்தித்த ஒரே ஜனாதிபதி இவர்தான். அதனால் தான் "மக்கள் ஜனாதிபதி' என்ற செல்லப் பெயரை பெற்றார். இந்திய ஜனாதிபதிகளில் மிகவும் எளிமையாக இருந்தவர். இவர் ஒருவரே ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி.

இந்தியாவின் 12 வது ஜனாதிபதி அந்த பதவியை வகித்த முதல் பெண்மணி பிரதிபா பாட்டில். இவர் தன் பதவி காலத்தில் 252 முறை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட சாதனையாளர்.

இந்திய பிரதமராக ஆசைப்பட்டு கடைசியில் இந்தியாவின் ஜனாதிபதியாக ஆனவர் இந்தியாவின் 13 வது ஜனாதிபதியாக பதவியேற்ற பிரனாப் முகர்ஜி. மத்திய அரசின் நிதி, பாதுகாப்பு, வெளி விவகாரத்துறை என பல துறைகளிலும் அமைச்சராக இருந்து சாதித்தவர். இவர் தினமும் 7 கி. மீ தூரம் வரை நடைப்பயிற்சி செய்வார், அதேபோல் தவறாமல் தினமும் டைரி எழுதுவாராம்.

இதையும் படியுங்கள்:
மருத்துவமாகும் வாழை இலையின் மகத்துவம்!
டாக்டர் இராஜேந்திர பிரசாத்

வேறு எந்த இந்திய ஜனாதிபதியும் செய்யாத சாதனையை செய்தவர் இந்தியாவின் 14 வது ஜனாதிபதியாக செயல்பட்ட ராம்நாத் கோவிந்து. ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு தன் முதல் வருட பணியில் இந்தியாவிலுள்ள 29 மாநிலங்களில் 27 மாநிலங்களுக்கு விஜயம் செய்து சாதித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டதன் மூலம், ஒடிசாவிலிருந்து ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் மற்றும் முதல் பழங்குடியின ஆளுநர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்த நிலையில்  குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றார் திரௌபதி முர்மு. இவர் தான் இந்தியாவின் முதல் பழங்குடி இன பெண் குடியரசு தலைவர், இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் மற்றும் இளவயது குடியரசு தலைவர் ஆகிய பெருமைகளை திரவுபதி முர்மு பெற்றுள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு விஜயம் செய்த முதல் ஜனாதிபதி திரௌபதி முர்மூ. 2023 ல் விஜயம் செய்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com