

வித்தியாசமான சிகை அலங்காரம், முற்றிலும் வித்தியாசமான நடை, உடை, பாவனை. இதுதான் இவர்களுடைய ஸ்டைல்... இவர்களுக்கே உரிய ஸ்டைல்! யார் ‘இவர்கள்’? நம்ம ‘புள்ளைங்க’... நம்ம ஏரியா ‘புள்ளைங்க’னு பாசத்தோடு அறியப்படும் ‘புள்ளிங்கோ’ஸ்தான் ‘இவர்கள்’!
தமிழ்நாட்டில், ‘வடசென்னை’ பகுதிகள்லதான் இவங்கள நிறைய பார்க்கலாம் என்ற காலம் மாறிவிட்டது. ஒரு வட்டாரத்திலிருந்து கிளம்பிய ஸ்டைல், வெள்ளித்திரை, சின்னத்திரை என்று பிரபலமாகி இன்று ஒரு ‘ஸ்டைல் கலாசாரமாகவே’ மாறிவிட்டது. உச்சந்தலையில் துருத்தி நிற்கும் சிகை அலங்காரம் பளிச் பளிச் வண்ணங்களில் பட்டை பட்டையாகப் பூசப்பட்ட சாயங்களில் மின்னுவதே இவர்களின் தனி அடையாளம்.
இந்த ‘புள்ளிங்கோ’ ஸ்டைலானது நாளுக்கு நாள் பிரபலமாகி வரும் காரணங்கள் என்ன? யாரெல்லாம் இதை விரும்புகிறார்கள்? இதற்கு எதிர்ப்புகள் உண்டா? ஒரு அழகு நிலையத்திடம் இந்த புள்ளிங்கோ விரும்பிகள் என்ன எதிர்பார்க்கிறார்கள்?
– வாங்க பேசலாம், 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் மிகுந்த Naturals சலூனின் Franchisee, சங்கர் அவர்களுடன்...
புள்ளிங்கோ ஹேர்ஸ்டைல் வைத்திருப்பவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது?
பொதுவாக இவர்கள் ஜாலியாக இருப்பவர்கள். எந்த ஒரு விஷயத்தையும் சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை... அதிகம் கண்டு கொள்வதுமில்லை என்று தோன்றுகிறது. மற்றவர்களின் கருத்து என்ன என்று கவலைப் படுவதில்லை... தங்களுக்குப் பிடித்ததை செய்துகொள்ள தயங்குவதுமில்லை. இந்த மனோதிடம் ரொம்ப strong.
மற்றவர்களை விட முற்றிலும் வித்தியாசமாக நாம் இருக்க வேண்டும் என்கிற எண்ணத்திலேயே இருப்பவர்கள். ‘ரொம்ப அதிகமா வேண்டாம் சார்’ என்று நாங்கள் சொன்னாலும், ‘நானே கவலைப்படல. நீங்க ஏன் சார்?’ என்று தைரியமாகப் பேசுபவர்கள். அவர்களுடைய இந்த ‘தைரிய’த்தைப் பாராட்டத்தான் தோன்றுகிறது. ஆனால் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குதான் இது சரியா தவறா என்ற எண்ணம் வரக்கூடும்.
புள்ளிங்கோ ஹேர்ஸ்டைல் செய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?
இதுபோன்ற வித்தியாசமான ஹேர்ஸ்டைல் செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டிலிருந்து இரண்டரை மணி நேரம் ஆகும். ஒரு சராசரி ஹேர்ஸ்டைல் அமைக்க அரை மணிநேரம் போதும். ஆனால் புள்ளிங்கோ ஹேர் ஸ்டைலில் முடி வெட்டுவதே பெறும் சவால். பிறகு முடியை கலர் செய்து அதை மேல் நோக்கி துருத்தி செட் செய்வது மேலும் பெரிய சவால்.
பல வண்ணங்களில் சாயம் பூசவேண்டியிருப்பதால், அதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சில வண்ணங்கள் நேரடியாக முடியில் ஒட்டிக்கொள்ளும். சில வண்ணங்கள் சரியாக முடியில் ஒட்டாதபோது அதற்கு முன்னதாக ப்ளீச் செய்ய வேண்டிய தேவை இருக்கும். மேலும், மஞ்சள், நீலம், ஆரஞ்சு போன்ற அடர்த்தியான வண்ணங்கள் முடியில் அவ்வளவு எளிதாக ஒட்டாது என்பதால், இத்தகைய முடி அலங்காரம் செய்வதற்கு குறைந்தது இரண்டு முதல் மூன்று மணி நேரம் பிடிக்கும்.
இத்தகைய ஹேர்ஸ்டைல் வைத்திருப்பதன் சாதக பாதகங்கள் என்ன?
புள்ளிங்கோ ஹேர்ஸ்டைல் என்பது இன்று ஒரு ‘ஸ்டேடஸ் ஸிம்பளாக’ உள்ளது இந்த ஹேர் ஸ்டைல் வைத்திருப்பவர்களுக்கு அது பெரும் அளவில் சுய திருப்தியைத் தருகிறது. மற்றவர்களை விட தாங்கள் எப்படி வித்தியாசமாக இருக்கிறார்கள், பிறர் தங்களை எப்படி பார்க்கிறார்கள் போன்ற அட்டென்ஷன் அவர்களுக்குப் பிடித்துள்ளது. நண்பர்கள் மத்தியில் தங்கள் அந்தஸ்து உயர்ந்துள்ளதாக நினைக்கிறார்கள். ஆனால், பல சந்தர்ப்பங்களில் இத்தகைய ஹேர் ஸ்டைல் வைத்திருந்தால் கட்டாயம் பெற்றோர்களும், பள்ளி, கல்லூரிகளிலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பெற்றோரை எதிர்த்துகொண்டு அதனால் மனதளவில் பாதிப்பு ஏற்பட்டு பெரிய அளவில் பிரச்னைகளுக்கும் வழி வகுக்கும்; எனவே முடிவு எடுப்பவர் நன்கு யோசித்து தன் சிகை அலங்காரங்களை, அடையாளங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். தொழில்முறை ரீதியாக இதை வைத்திருப்பவர்கள் தாராளமாக வைத்துக்கொள்ளலாம்.
மறக்க முடியாத அனுபவங்கள் ஏதேனும் உள்ளதா?
எக்ஸ்பீரியன்ஸ் என்று சொல்லப் போனால் நிறைய உள்ளது. கல்லூரி இளைஞர்கள் மட்டுமல்லாமல், பள்ளிக்கூட மாணவச் சிறுவர்கள்கூட ‘எங்களுக்கு புள்ளிங்கோ ஹேர் ஸ்டைல் வேணும்’னு வராங்க. இது கொஞ்சம் கவலைத் தரக்கூடிய விஷயம்தான். அதிலும் சில சிறுவர்கள் வீட்டுக்குத் தெரியாமல் ப்ளீச் போட்டுக்கொண்டு, எங்களிடம் வந்து அதை சரி செய்யுமாறு கேட்பார்கள். சிலர் தங்களுக்கு கிரே ஹேர் வேண்டும் எனக் கேட்பார்கள். அதாவது முடியை மொத்தமாக வெள்ளையாக்க வேண்டும் எனக் கேட்பார்கள். ஆனால் முடியை வெள்ளையாக்குவது அவ்வளவு எளிதல்ல. அதற்காக முடியை நன்றாக ப்ளீச் செய்து, அதில் நேச்சுரலாக இருக்கும் பிக்மென்ட்களை நீக்க வேண்டும். பின்னர் சில்வர் நிறத்தில் மார்க்கெட்டில் ஒரு கலர் உள்ளது. அதைதான் முதலில் போட வேண்டும். இன்றைய இளைஞர்கள் இதை அதிகம் முயற்சிக் கிறார்கள். சிலர் இரண்டு நாட்கள் வரை தங்கி தலைமுடியை வேண்டிய நிறத்திற்கு மாற்றிக்கொண்டும் சென்றுள்ளனர். சில சமயங்களில் இதுபோன்ற சேவைகளுக்கு 10 முதல் 12 மணி நேரங்கள் கூட தேவைப்படும்.
புள்ளிங்கோ புள்ளைங்களை பெரும்பாலான மக்கள் வித்தியாசமாக பார்ப்பது ஏன்? சிலருக்கு இவர்களைப் பிடிப்பது கூட இல்லையே?
புள்ளிங்கோ ஹேர்ஸ்டைல் யாருக்கும் பிடிக்கவில்லை என்று சொல்ல முடியாது. அத்தகைய ஹேர்ஸ்டைல் வைத்திருக்கும் ஒரு சில நபர்களின் நடவடிக்கைகள்தான் பல சமயங்களில் பிடிக்காமல் போகிறது. இப்படி வித்தியாசமான ஹேர்ஸ்டைல் வைத்துக்கொண்டு கண்ணியமாக வலம் வந்தால் யாரும் அவர்களை தவறாக சொல்லப்போவதில்லை. சிலர், சில சமயங்களில் சில சேட்டைகளில் ஈடுபடுவதால், மற்றவர்களால் இவர்களை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இதற்கு திரைப்படங்கள் போன்ற ஊடகங்களும் ஒருவகையில் பொறுப்பாகின்றன. ஆனால் இதேபோன்ற ஹேர்ஸ்டைல் வைத்துக்கொண்டு ஒரு ஃபுட்பால் பிளேயரோ, டான்சரோ இருந்தால் அவரை அனைவருமே ஏற்றுக்கொள்கிறார்கள்.
புள்ளிங்கோ ஹேர்ஸ்டைல் விரும்பும் இளைஞர்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?
இவ்வகை ஸ்டைல்களுக்கு அடர்த்தியான நிறங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை எல்லாமே ஸ்ட்ராங்கான பொருட்கள்தான். அதனால், புள்ளிங்கோ ஹேர்ஸ்டைல் விரும்புபவர்கள், அதற்குத் தகுந்த கண்டிஷனர், ஷாம்பு பயன்படுத்தி தங்களுக்கு எத்தகைய பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். அதே சமயம் ஹேர் கலரிங் செய்யும்போது, அந்த கெமிக்கல் நம் முடியின் வேர்களில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றபடி ஹேர் கலரிங் செய்வதால் பெரிய அளவில் வேறு பாதிப்பு இருக்க வாய்ப்பில்லை. உங்கள் ஹேர்ஸ்டைலிஸ்ட் கூறுவதைக் கேட்டு அதன்படி செய்துகொள்வது நல்லது.
உங்களுக்கு இந்த ஹேர்ஸ்டைல் பிடித்திருந்தால் தாராளமாக வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் உங்கள் பெற்றோர்களின் வழிகாட்டுதலுடன் பள்ளி, கல்லூரிகளில் இது உங்களை பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். இது போன்ற ‘ஸ்டைல்’ சம்மந்தப்பட்ட விஷயங்களில் நாட்டம் செல்வதால், நம்முடைய படிப்பு பாதிப்படையக் கூடாது. நாம் படிக்கும் சமயத்தில் சரியாக படித்தால் மட்டுமே நமது எதிர்காலம் சிறப்பாக இருக்கும். ஹேர்கலரிங் நாம் எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். மேலும், நாம் அமைத்துக்கொள்ளும் ‘ஸ்டைல்’களால் நம் பழக்க வழக்கங்கள் ஒருபோதும் தவறாக மாறிவிடக் கூடாது. முக்கியமாக இத்தகைய ஹேர்ஸ்டைல் வைத்துக்கொள்ள விரும்புபவர்கள் அது உங்கள் தலைமுடியின் தன்மையை பாதிக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் characterஐயும் தான்!