தண்ணீர் பாட்டில்கள் இனி வேண்டாம்! குழாய் தண்ணீரே போதும் - பூரியின் அதிரடி மாற்றம்!

காசு கொடுத்துத் தண்ணீர் வாங்கும் அவலம் ஒழிப்பு: ஒடிசா அரசின் வரலாற்றுச் சாதனை.
Puri Drink from Tap | 
குடிநீர்
Puri Drink from Tap | குடிநீர்AI Image
Updated on
Kalki strip
Kalki strip

ஆர்.ஓ பியூரிஃபையர் தேவையில்லை. காசு கொடுத்து பாட்டில் தண்ணீர் வாங்கத் தேவையில்லை. குழாயிலேயே பிடித்துக் குடிக்கும் அளவு சுத்தமான குடிநீர் வரும் அதிசயமான ஊர் இந்தியாவில் எது தெரியுமா?

அதுதான் ஒடிசாவின் புண்ணியத் தலமான பூரி!

ஆன்மீக நகரமான பூரியில்தான் இந்த உலகத்தரம் வாய்ந்த வசதி நிஜமாகியுள்ளது. பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில், பூரி நகரத்தின் இந்த வியக்கத்தக்க மாற்றத்தை மனதாரப் பாராட்டியுள்ளார். மக்கள் நேரடியாகக் குழாயிலிருந்தே குடிநீர் அருந்தும் இந்தத் திட்டம் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, பூரி நகரமும் இந்தியாவின் மற்ற சாதாரண நகரங்களைப் போலத்தான் இருந்தது. பாதிக்கும் குறைவான வீடுகளுக்கு மட்டுமே குழாய் இணைப்பு இருந்தது. மக்கள் குடிநீருக்காக லாரிகளையும், விலை கொடுத்து வாங்கும் கேன் தண்ணீரையும் நம்பி வாழ வேண்டியிருந்தது. பழைய குழாய்களில் நீர் கசிவு ஏற்படுவது, அசுத்தமான நீர் விநியோகம் எனப் பல சவால்கள் அன்றாடம் நீடித்தன.

உள்கட்டமைப்புப் புரட்சி:

இந்த அவல நிலையை முற்றிலும் மாற்றியமைக்க ஒடிசா அரசு 2020ல், ஒரு மாபெரும் உள்கட்டமைப்புப் புரட்சியைத் தொடங்கியது. பார்கவி நதியிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர், நவீன சுத்திகரிப்பு நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, மிகத்துல்லியமாகச் சுத்திகரிக்கப்படுகிறது. நகரம் முழுவதும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்திற்குப் புதிய தரமான குழாய்கள் பதிக்கப்பட்டன. 24 மணி நேரமும் தடையின்றி இயங்கும் இந்த ஸ்மார்ட் குடிநீர் விநியோக அமைப்பில் நீரின் அளவு, வேகம் மற்றும் குளோரின் அளவு ஆகியவை அதிநவீன சென்சார்கள் மூலம் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.

நம்பிக்கையை விதைத்த பெண்கள்

நவீன உள்கட்டமைப்பை உருவாக்குவது ஒருபுறம் இருந்தாலும், குழாய் தண்ணீரை வடிகட்டாமல் அப்படியே குடிக்கலாம் என்ற நம்பிக்கையைப் பொதுமக்களிடம் உருவாக்குவது எளிதான காரியமாக இருக்கவில்லை.

இந்தத் திட்டத்தின் உண்மையான வெற்றிக்காகப் களத்தில் இறங்கிப் போராடியவர்கள் அந்த ஊரைச் சேர்ந்த உள்ளூர் பெண்கள்தான்.https://x.com/anandmahindra/status/2063877907563352390

ஆனந்த் மஹிந்திரா தனது பதிவில் இவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'உள்ளூர்ப் பெண்கள் இந்த நகரத்தின் நீர்த் தரத்தின் பாதுகாவலர்களாக மாறி, மக்கள் மத்தியில் பொது விநியோக அமைப்பின் மீது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளனர்,' என்று பாராட்டியுள்ளார்.

இந்த பெண்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று, தண்ணீரின் தரத்தை மக்களின் கண்ணெதிரே பரிசோதித்துக் காட்டினர். குழாய் நீரின் பாதுகாப்பை மக்களுக்குப் புரிய வைத்து, அவர்களின் மனதில் இருந்த பயத்தைப் போக்கினர். அரசு நிர்வாகத்திற்கும் பொதுமக்களுக்கும் பாலமாகச் செயல்பட்ட இந்த பெண்களின் அர்ப்பணிப்புதான் பூரி நகரத்தின் இந்த வரலாற்று வெற்றிக்கு முக்கியக் காரணம்.

Cane water | குடிநீர்
Cane water | குடிநீர்

சுற்றுச்சூழல் நன்மைகளும், உலகத்தரம் வாய்ந்த வசதிகளும்

இந்த 'டிரிங்க் ஃபிரம் டேப்' (Drink-from-Tap) திட்டத்தினால் பூரி நகரம் அடைந்துள்ள நன்மைகள் ஏராளம்:

பிளாஸ்டிக் கழிவுகள் ஒழிப்பு: மக்கள் பாட்டில் தண்ணீரை வாங்குவதை முற்றிலும் நிறுத்தியதால், ஆண்டுக்கு டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாவது தடுக்கப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கான அரிய வசதி: உலகப் புகழ்பெற்ற ஜெகந்நாதர் ஆலயத்திற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆன்மீகப் பாதைகள் முழுவதும் இலவச தூய குடிநீர் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நவீன தொழில்நுட்ப கண்காணிப்பால், நிலத்தடி குழாய்களில் ஏற்படும் நீர் இழப்பு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.

குடிநீரைத் தன் குடிமக்களுக்கு இலவசமாகவும் தடையின்றியும் வழங்குவது ஒரு நல்லரசின் முதன்மைக் கடமை. அதைச் சாதித்துக் காட்டியுள்ளது பூரி நகரம். இந்தியாவில் உள்ள மற்ற பெருநகரங்களும் இந்த மாடலைப் பின்பற்றினால், ஒவ்வொரு வீடும் ஆர்.ஓ பியூரிஃபையர் செலவிலிருந்தும், பிளாஸ்டிக் பாட்டில்களின் பிடியிலிருந்தும் நிச்சயம் விடுதலை பெறும் என்பதில் சந்தேகமில்லை.

logo
Kalki Online
kalkionline.com