“எந்த நேரத்தில் கிளாட் மோனே (Claude Monet) – ட் சப்தம் கிடையாது – சொன்னாரோ, அந்த ஓவியமே ஒரு பெரும் இயக்கத்துக்குபேராய் அமைந்துவிட்டது.
ஆம், இம்ப்ரெஷனிசம் என்பது ஒரு தீவிர கலை இயக்கமாகும், இது 1800 களின் பிற்பகுதியில் தொடங்கியது, சுத்தத் தமிழில் ‘உணர்வுப்பதிவுவாத இயக்கம்’ என்றால் என்னை அடிக்க வருவீர்கள்! அதனால் இம்ப்ரெஷனிசம் என்றே சொல்லுவோம்!
இது முதன்மையாக பாரிசியன் ஓவியர்களை மையமாகக் கொண்டது. இம்ப்ரெஷனிஸ்டுகள் கிளாசிக்கல் விஷயங்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து நவீனத்துவத்தை ஏற்றுக்கொண்டனர். ஆரம்பத்தில் விமர்சகர்களால் கேலி செய்யப்பட்ட இம்ப்ரெஷனிசம் மேற்கத்திய வரலாற்றில் மிகவும் பிரபலமான மற்றும் செல்வாக்குமிக்க கலை பாணிகளில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதன் தொடக்கம் தான் மோனே வரைந்த சூரியோதய ஓவியம். படத்தைப் பாருங்கள்...
1873 இல் வரையப்பட்டதாகக் கருதப்படும் இவ்வோவியம், லெ ஹாவ்ரே துறைமுகத்தைக் கருப்பொருளாகக் கொண்டு வரையப்பட்டது. எனினும் இதன் தளர்வான தூரிகைக் கோடுகள் கருப்பொருளைத் துல்லியமாகக் காட்டாமல், அதனைக் கோடிகாட்டுகின்ற வகையில் அமைந்துள்ளன. இந்த ஓவியத்துக்குப் பெயரிடப்பட்ட சூழ்நிலையைப் பற்றி பின்னொருமுறை எடுத்துக் கூறிய மொனெட், விபரப் பட்டியலில் போடுவதற்காக ஓவியத்தின் பெயரைக் கேட்டார்கள். “லெ ஹாவ்ரே துறைமுகத்தின் தோற்றம் என்று பெயரிடலாம் போல் தோன்றவில்லை. எனவே Impression (உணர்வுப்பதிவு) என்று போடுங்கள்” என்று சொன்னேன் என்று விளக்கினார்.
இந்த ஓவியம் முதன்முதலாக 1874 ஆம் ஆண்டில் இடம்பெற்ற முதலாவது சுதந்திர ஓவியக் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
மோனே, பாரிஸ் நகரில் பிறந்தார். ஆனால், இவருக்கு ஐந்து வயதானபோது இவரது குடும்பம், நோர்மண்டியிலுள்ள ‘லெ ஹாவ்ரே’ என்னுமிடத்துக்கு இடம் பெயர்ந்தது. இவரது தந்தையார் ஒரு பலசரக்கு வணிகர். தன்னைத் தொடர்ந்து ஆஸ்கார் கிளாடு மோனேயும் தங்கள் குடும்ப வணிகத்தைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என அவர் எதிர்பார்த்தார். ஆனால் மோனே ஒரு ஓவியராவதில் ஆர்வம் கொண்டிருந்தார்.
தொடக்கத்தில் ஒரு கேலிச் சித்திர ஓவியராகவே இவர் உள்ளூர் மக்களுக்குப் அறிமுகமானார். அவர் கரிக் கோலினால் வரையப்பட்ட கேலிச் சித்திரங்களை விற்று வந்தார். நோர்மண்டியின் கடற்கரைகளில் இயூஜீன் பௌதின் (Eugène Boudin) என்னும் இன்னொரு ஓவியருடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. மோனே இவரிடமிருந்து எண்ணெய் ஓவியங்களை (oil paints) வரைவதற்குப் பயின்றதுடன் வெளிப்புற ஓவிய நுட்பங்களையும் கற்றுக்கொண்டார்.
மோனே தனது 86ஆவது வயதில் புற்று நோயால் காலமானார்.
“என்னோட இறுத்திச் சடங்கு பெரிசாவெல்லாம் பண்ணிடாதீங்கப்பா!எளிமையா இருக்கணும் சொல்லிட்டேன்!” என்று இவர் விரும்பினதால் அவரது இறுதி விழாவில் சுமார் ஐம்பது பேர் மட்டுமே கலந்துகொண்டனராம்!
மோனேவுடைய இம்ப்ரெஷனிசம் ஓவியங்களை விமரிசகர்கள் சகட்டு மேனிக்கு தாக்கினாலும் சில விமரிசகர்கள் அவரது மேதமையைக் கவனிக்கத் தவறவில்லை. அவர்களுக்கு நன்றி சொல்லும்போது மோனெட் தன் எதிர்ப்பாளர்களுக்கு நக்கலாக பதில் கொடுத்தார்.
“என்னுடைய ஓவியங்களின் அழகை ரசிப்பதற்கு முன்னால் இயற்கையை ரசித்துப்பாருங்கள். பிறகு நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிந்துகொள்ளலாம்!”
நெத்தி அடிதானே!
அதெல்லாம் விடுங்கள், அந்த தோட்டத்தில் உள்ள ஓர் பெண் ஓவியத்தையும் சற்றே கவனியுங்களேன்!
அந்த அழகான பெண் மற்றும், அருகிலுள்ள மரத்தின் நிழல்கள் வரையப்பட்டிருக்கும் துல்லியத்தையும் நேர்த்தியையும் பார்த்தால் மோனேவின் ஓவிய மேதமை புரியும், இல்லையா?
(தொடரும்)